12 Shawwal 1446 H

Search This Blog

Sunday, May 24, 2009

SHOCKING REPORT - MUSLIMS IN INDIAN PRISONS

 




இந்திய முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதத்திற்கும் அதிகமான அளவில் முஸ்லிம்கள் இந்தியச் சிறைகளில் இருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

- 10.6 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறையிலிருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 32.4 விழுக்காடாக இருக்கிறது.

- புதுதில்லி மக்கட்தொகையில் 11.7 விழுக்காடு உள்ளவர்கள் முஸ்லிம்கள் ஆவர். இங்கு சிறையிலிருக்கும் முஸ்லிம்களோ 27.9 விழுக்காட்டினர்.

- 9.1 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட குஜராத்தில் சிறையிலிருக்கும் முஸ்லிம்கள் 25.1 விழுக்காட்டினர்.

இந்த எண்ணிக்கையில் குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப் பட்டவர்களோடு விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களும் அடங்குவர்.

இந்தப் புள்ளி விவரங்களோடு ஒப்புநோக்குகையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒரு சிறு விழுக்காட்டையே முஸ்லிம்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எதில் இட ஒதுக்கீடு வழங்க மறுத்தாலும், சிறையை நிரப்புவதில் அரசுகள் பாகுபாடின்றி இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மக்கள்தொகை வீதத்தை விட மிக அதிகப் பங்கு தருகிறார்கள்.

இந்திய முஸ்லிம்களின் இந்த பரிதாபமான நிலைக்கு யார் அல்லது எது காரணம்?

- வறுமைதான் முஸ்லிம்களில் பெரும் விழுக்காட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணம் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

- காவல் துறையினரின் பாரபட்சமான செயல்பாடுகளும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான சட்ட உதவி கிடைக்காமலிருப்பதும் பல அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்குக் காரணங்களாக இருக்கின்றன. "ஏதேனும் குற்றச் செயல்களில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தால், ஒருவரை கைது செய்யவேண்டிய இடத்தில் பத்து பேரை காவல் துறையினர் கைது செய்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில், தேவையில்லாத போதும் பல அப்பாவிகள் கைது செய்யப் படுகிறார்கள். கடைசியில் இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப் படுவதில்லை" என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சையது ஷஹாபுத்தீன்.

ஒரு முஸ்லிம் மீது போலீசாரால் ஏதாவது ஒரு வழக்கு தொடுக்கப்பட்ட உடனேயே அவரை குற்றவாளியாகக் கருதிக் கொண்டு சமூகம் ஒட்டுமொத்தமாக அவரைப் புறக்கணிப்பதும் சிறையில் அப்பாவி முஸ்லிம்கள் பெருமளவு நீதி கிடைக்காமல் அடைபட்டிருக்க காரணமாகின்றது. இந்த அதிர்ச்சி தரும் உண்மையை சமூகம் இனிமேலாவது கண்டுகொள்ள வேண்டும். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் காவல் துறையின் வலுவிழந்த ஆதாரங்களால் குற்றம் நிரூபணம் செய்யப்படாமல் அப்பாவிகள் விடுதலை செய்யப்பட்டால் இதே ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.

இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புகளும் இந்த அறிக்கையை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, ஏழை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக திட்டங்கள் தீட்டி செயல்பட வேண்டியது மிக அவசியம். இஸ்லாமிய வர்த்தக நிறுவனங்களும் பண வசதி படைத்த முஸ்லிம்களும் இச்சேவைக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும்.

கட்டுரை ஆக்கம் : இப்னு பஷீர்

நன்றி: சத்திய மார்க்கம்.காம்

.

__,_._,___

No comments:

Six C's of Character - Yasir Fazaga