Search This Blog

Wednesday, May 03, 2006

வியப்பூட்டும் அரசியல்வாதிகள்

வியப்பூட்டும் அரசியல்வாதிகள்
ரவி செல்வராஜ்
சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை இளைஞர்கள் தேடி அலைந்த காலம் ஒன்றிருந்தது. கருத்துகளைப் பரிமாறுபவர்களுக்கு மட்டுமே அன்று மதிப்பிருக்கும்; மரியாதையும் கிடைக்கும். இப்பொழுது காலம் மாறிவிட்டது. இது ""சினிமா காலம்'', ""தொலைபேசி காலம்'' என்றே சொல்ல வேண்டும். கவர்ச்சிகளைக் கண்டு பாமர மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மயங்கும் காலம்.

அப்போதெல்லாம் பொதுக் கூட்டங்கள், மாலைநேர வகுப்புகள்; இப்போதோ வெறும் பொழுதுபோக்குகள்! தன்னுடைய சுயநலங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இன்று பலர் பல சாதி, மதக்கட்சிகளைத் தோற்றுவித்து வியப்பூட்டும் அரசியல்வாதிகளாக மாறி வருகிறார்கள். இவர்களிடம் நிலையான கொள்கைகள் ஏதும் கிடையாது. பணத்திற்கும் - பதவிக்கும் - பகட்டுக்கும் - அரசியலில் சேர்ந்து இருக்கிறார்கள்.
கழனிகள் சூழ்ந்த கிராமங்களில் எல்லாம் கல்வி பரவ வேண்டும் என்று ஆசைப்பட்டவர் காமராசர். பரவும் அறிவு பகுத்தறிவாக மிளிர வேண்டும் என்று இரவு பகலாய்ப் பாடுபட்டவர் பெரியார். பட்டி தொட்டிகளிலெல்லாம் பகுத்தறிவுப் பாசறைகளைத் தோற்றுவித்து அரசியலை மக்களுக்குப் புரிய வைக்க ஆசைப்பட்டவர் அண்ணா. இவர்களது பெரும் முயற்சியால் நம் தமிழ் மாநிலம் கண் விழித்து பாரதத்தையே திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இன்றைய இளைய சமுதாயத்தை நோக்கி ""அறிவின் பக்கம் போகாதீர்கள்'' என்று படித்த இளைஞர்களிடம் சில அரசியல்வாதிகள் போதிக்கிறார்கள். இவர்களும் வியப்பூட்டும் அரசியல்வாதிகளே.

கட்டப்பஞ்சாயத்துக்காரர்களும், கந்து வட்டிக்காரர்களும் இன்றைய அரசியலில் புகுந்து விட்டனர். தன்னை விடக் கட்சி உயர்ந்தது. கட்சியை விட நாடு உயர்ந்தது என்று தியாக உள்ளம் படைத்த தலைவர்கள் அருகி வரும் காரணத்தினால் இன்றைய அரசியல் ""தீயவர்களின் கடைசிப் புகலிடம்'' என்ற நிலைக்கு மாறி வருகிறது.

நடக்கவிருக்கும் தேர்தலில் நூற்றுக்கு நூறு வாக்காளர்கள் விரும்பும் கொள்கைகள் - ""ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் - வறுமையை ஒழித்தல்; கல்வி வளர்ச்சி; நதி நீர் இணைப்பு; உயர் நீதி நிர்வாகம்'' ஆகியவையே. ஆனால் இந்த உயர்ந்த லட்சியங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம், மக்களைக் கவரும் உயர்ந்த கொள்கைகளைச் சொல்லி, அவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த பின், கொள்கைகளை மறந்து கோடிகளைக் குவிப்பவர்களாக அரசியலார் மாறி வருவதேயாகும். எந்தக் கட்சிக்குத் தாவினால் தமக்கு நன்மை கிடைக்கும்? எந்தக் கூட்டணியில் சேர்ந்தால் தங்களுக்குக் கோடி கிடைக்கும் என்று கணக்குப் போடும் தலைவர்கள் நாட்டில் மலிந்துவிட்டனர். தேர்தல் ஆணைய விதிப்படி வேட்பாளர்கள் காட்டிய சொத்து மதிப்பு பல கோடிகள். இவ்வளவு சொத்துகள் எங்கிருந்து வந்தன? நாட்டு மக்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்தாக வேண்டும். 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தவர்கள் இன்று பல கோடிகளுக்கு அதிபதிகள்! கார், பங்களா, தோட்டம், துரவு என எல்லாம் எப்படி வந்தன? அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் என்ற இன்றைய நிலைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இன்றைய தினம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பலர் கல்வி, வேலை வாய்ப்புகளில் உயர்ந்து கம்பீரமாக நிற்கின்றார்கள் என்றால் அதற்கான பெருமை பெரியாரையும், டாக்டர் அம்பேத்கரையும் சாரும்.

Six C's of Character - Yasir Fazaga