Search This Blog

Tuesday, June 29, 2010

மறக்கடிக்கப்பட்ட தியாகி பதக் மியான்:

 
-----
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 

அன்புச்சகோதரர்களுக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

(இறைவனின் சாந்தியும்சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

 

பாட்னா:1917 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் இரு தலைவர்கள்- ஒருவர் மகாத்மா காந்தி மற்றொருவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். இருவரும் பீகார் மாநிலத்தின் அன்றைய சம்பரன் மாவட்டத்தின் தலைநகராக விளங்கிய மோடிஹாரிக்கு செல்கின்றார்கள்.

இண்டிகோ பண்ணைத் தோட்டத்தில் வேலைப்பார்த்து வந்த தொழிலாளர்களின் மோசமான நிலையை கண்டறிவதற்காக சென்றார்கள். அவர்களின் நிலையைக் கண்டு அதற்கு காரணமான பிரிட்டீஷ் அரசிற்கெதிரான போராட்டத்தை துவக்கினார்கள். இதுதான் பிரிட்டீஷாருக்கு எதிராக காந்தியடிகள் துவக்கிய முதல் போராட்டமாகும்.

இண்டிகோ பண்ணைத் தோட்டத்தின் மேலாளராக பொறுப்பு வகித்த வெள்ளைக்காரன் காந்தியை இரவு உணவுக்கு அழைக்கிறான். காரணம் காந்தி சாப்பிடப்போகும் உணவில் விஷம் கலக்கப்பட்டு அவரைக் கொல்வதுதான் அவனது நோக்கமாகும். அந்த பிரிட்டீஷ் மேலாளரான ஆங்கிலேயனிடம் சமையல்காரராக வேலைப்பார்த்தவர் பதக் மியான். அவரிடம் ஒரு கோப்பை பாலில் விஷம் கலந்து காந்திக்கு கொடுக்குமாறு கூறுகிறான்.ஆனால் பதக் மியானின் தேசப்பற்று இந்தக் கொடுஞ்செயலுக்கு இடம் தரவில்லை. அவர் கோப்பையை எடுத்துச்சென்று காந்தியிடம் விஷயத்தை கூறிவிடுகிறார். இதற்கு டாக்டர் ராஜேந்திரபிரசாத் நேரில் கண்ட சாட்சியாவார்.

இதன் மூலம் பதக் மியான் காந்தியின் உயிரை காப்பாற்றுகிறார். காந்தியின் உயிர் காப்பாற்றப்பட்டதால் காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கி இந்தியாவின் தேசத்தந்தை எனப் போற்றப்படுகிறார். ஆனால் இச்சம்பவத்திற்கு பின்னர் பதக் மியான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

பதக் மியான் காந்திஜிக்கு விஷம் கொடுக்காததால் பிரிட்டீஷ் மேலாளர் கடும் கோபம் அடைந்து பதக் மியானை சிறையிலடைத்து கடுமையாக சித்திரவதைச் செய்கிறார். அவருடைய வீடு சுடுகாடாக மாற்றப்பட்டது. பின்னர் அவரும் அவருடைய குடும்பமும் அவர் வாழ்ந்து வந்த கிராமத்தை விட்டும் துரத்தப்பட்டனர். இந்திய தேசபிதாவின் உயிரைக் காப்பாற்றிய அந்த மனிதர் மறக்கடிக்கப்பட்டார்.

ஆனால் காந்தியைக்கொன்ற நாதுராம் கோட்சேவை தெரியாத நபர் இல்லை எனலாம். 1950 ஆம் ஆண்டு டாக்டர் ராஜேந்திரபிரசாத் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது மோடிஹாரிக்கு சுற்றுப்பயணம் சென்றபொழுது பதக் மியானின் தன்னலமற்ற தியாகத்திற்காக 24 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக அளிக்க உத்தரவிட்டார்.

60 ஆண்டுகள் தாண்டிவிட்டன, இதுவரை மறைந்த ஜனாதிபதியின் உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. மறக்கடிக்கப்பட்ட அந்தத்தியாகி 1957 ஆம் ஆண்டு மரணித்துவிட்டார். தற்பொழுது அவருடைய ஐந்து பேரர்களும் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள அக்வா பர்ஸாவ்னி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். தனது அன்றாட வாழ்க்கைக்காக இடம் புலர்ந்து தொழிலாளர்களாக வேலைப்பார்த்து வருகிறார்கள்.ஏனெனில் இவர்களுக்கு கல்வியறிவு இல்லை. அவர்கள் அரசு அதிகாரிகளைச் சென்று பார்த்து முறையிட்டபொழுது அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணானதுதான் மிச்சம்.

சமீபத்தில் இந்தியாவின் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீல் இவர்களின் பரிதாப நிலையை அறிந்து இந்தியாவின் முதல் ஜனாதிபதியால் அன்பளிப்பாகக் கொடுக்க உத்தரவிட்ட நிலம் அவர்களுக்கு கிடைக்க உறுதியளித்துள்ளார். இது காந்திஜியின் 62-வது நினைவுதினத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகை பதக் மியான் குடும்பத்தின் மோசமான நிலையைப் பற்றி வெளியிட்ட கட்டுரையைப் படித்த பிறகு தான் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டார்.

ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரி அர்ச்சனா தத்தா சம்பரன் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு பீகார் அரசு ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்துகிறதா என்பதை பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வரும் இவ்விஷயத்தில் அக்கறையோடு திர்ஹுட் டிவிசனல் கமிசனருக்கு பதக் மியானின் குடும்பத்திற்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது காந்திஜியின் அடுத்த நினைவுதினம் வரை கிடப்பில் போடப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

source:twocircles
 

இறைவா! 

என் நிலையையும் 
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும் 
நினைப்பை உயர்த்தி விடாதே!
 
இவண்

M.மும்மது ஸ்மாயில்
மனிதனே! நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில்(நன்மையோ தீமையோ) 
பல வேலைகளில் ஈடுபட்டு கஷ்டத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றாய்.
பின்னர் மறுமையில் அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிறாய்..!(திருக்குர்ஆன் 84-6)



No comments:

Six C's of Character - Yasir Fazaga