Search This Blog

Saturday, December 23, 2006

அன்பு நண்பனுக்கு

அன்பு நண்பனுக்கு

மௌலானா அஸத் கீலானி

அன்பு நண்பா,
என்ன படிக்க வேண்டும் என்று கேட்கிறாய்…!
குர்ஆன்தான். குர்ஆனிலும் மறுமை குறித்தும், மறுமை நாளின் நிலைமைகள் பற்றியும் விவரிக்கிற வசனங்களைத் திரும்பத் திரும்ப ஓது. அவற்றின் பொருளை வாசி. அவற்றுக்கு அறிஞர்கள் கொடுத்துள்ள வாசகங்களை ஆய்ந்து படி. நபிமொழிகளில் கிதாபுல் ரகாக் பகுதியை வாசி. இவற்றோடு அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றையும் நபித்தோழர்களின் சீரிய வரலாற்றையும் வாசி. இவை யாவும் உன்னை 1400 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த சமூகச் சூழலுக்கே கொண்டு சென்று விடும். உள்ளம் புத்துணர்வு பெறும்.
தாம் ஏற்றுக் கொண்டிருந்த அழைப்பு பணியை வெற்றிகரமாக, நேர்த்தியாக, அழகாக செய்து முடித்தவர்கள், அவர்கள். அவர்களின் ஒளிமயமான வாழ்க்கைதான் களைத்துப் போன பயணிகளுக்கு கலங்கரை விளக்கங்களாக பாதை காட்டும். மகிழ்ச்சி ஊட்டும். முடிந்தால் திருமறையின் முப்பதாவது பாகத்தில் மறுமை நிலைமையைப் படம் பிடித்துக் காட்டும் அத்தியாயங்களையும், உள்ளங்களை நடுநடுங்கச் செய்து விடும் அத்தியாயங்களையும் படி.
நேர்வழியில் சென்ற கலீபாக்கள் நால்வரின் வரலாற்றையும் படி. இவர்கள்தான் அசலானவர்கள். இவர்களின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றியே நாம் அசல் பணியாற்ற வேண்டியுள்ளது என்கிற எண்ணத்துடன் இவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பார்.
அவர்களும்தான் வணிகம் செய்தார்கள். ஆனால் தராசின் ஒரு தட்டில் உலகப் பொருட்கள் இருந்தால் மறு தட்டில் இறைவனின் அச்சம் இருக்கும். துணிகளை அளக்கும் போது அவர்களுக்கு ஒரு நுனியில்தான் துணி தெரியும். மறு நுனியில் மண்ணறையின் முகத்துவாரம் தெரியும்.
ஒரு பக்கம் பெரும் பெரும் நிலப்பரப்புகளிலும் நாடுகளிலும் அவர்களுடைய ஆட்சி கொடி கட்டிப் பறக்கும். மறுபக்கம் இரவுகளில் இறைவன் முன்னால் அழுது அரற்றி, ஏ! உலகமே ! என்னை விட்டு விலகிப் போய் விடு ! என்னை மயக்கி விடாதே! நான் உனக்குத் தலாக் கொடுத்து விட்டேன் என்று புலம்புவார்கள்.
இவர்கள்தான் முன்மாதிரிகளாக, உலகின் வழிகாட்டிகளாக இருந்தார்கள். அவர்களைப் போன்றவர்கள் உலகில் பிறந்தே கிடையாது. அவர்களின் அடிச்சுவடுகளின்தான் நாம் பயணிக்க வேண்டும். நமக்கு அந்த நற்பேறு மட்டும் கிடைத்து விட்டது எனில், என் நண்பனே! வாழ்க்கை பெரும் பெரும் தங்கச் சுரங்கங்களை விட மதிப்பு மிக்கதாக ஆகி விடும். நம்முடைய சுவாசக் காற்றும், மூச்சும் ரத்தினங்கள், பவளங்களை விட மதிப்பு மிக்கதாக ஆகி விடும்.
அது மட்டுமல்ல, இன்னொரு உண்மையையும் நீ நன்றாக அறிந்து வைத்திருக்கிறாய்.எந்த மந்திரக்கல்லைத் தொட்டதால் அவர்கள் சொக்கத்தங்கங்களாக ஆனார்களோ, அவர் கூட மக்களை படைத்தவனின் பக்கம் அழைப்பதற்காக செயற்களத்தில் குதிப்பதற்கு முன் தம்முடைய தேசத்தில் பெயர் பெற்ற வணிகராகத்தான் இருந்தார்.
ஆனால் அவர் தம் அதிபதியிடம் வாழ்க்கைக்கான பேரத்தைச் செய்த போது பணம் சம்பாதிப்பதற்கான வியாபாரத்தை கைவிட்டார். பணம் பண்ணுவதற்கு பதிலாக ஆளுமைகளை செதுக்குகிற வேள்வியில் தம்மை ஈடுபடுத்தி கொண்டார்.அவரால் செதுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு ஈடிணை இல்லை என்பதும் அவர்கள் மனித குல வரலாற்றிலேயே அரும்பெரும் பொக்கி~ங்களாக ஜொலித்தார்கள் என்பதும் உனக்கு தெரிந்ததே.
வலது கையால் சாப்பிட வேண்டும் என்கிற சுன்னத்தான நபிவழியை இன்று முஸ்லிம்கள் அனைவருமே நினைவில் வைத்திருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபிகளார் ( ஸல்) அவர்கள் தம்முடைய பொருள் முழுவதையும், செல்வங்கள் யாவற்றையும் அழைப்பு பணிக்காக செலவிட்டார்;;. பேரீச்சம் பாயைத் தவிர்த்து வேறெதனையும் விட்டுச் செல்லவில்லை என்கிற சுன்னத் - நபிவழி எத்தனை பேருடைய நினைவில் இருக்கிறது.
சத்திய மார்க்கத்தை உள்ளமும் மனமும் ஏற்றுக் கொண்டாலும் அதற்காக உழைக்கும் விஷயத்தில் அலட்சியப் போக்கு இருப்பது மிகப் பெரிய நோய் ஆகும். இந்த நோய்க்கு அடிமையாகி விட்டதாக எழுதி இருக்கிறாய். இந்த நயவஞ்சக நோய்தான் நம்முடைய ஒட்டு மொத்த சமூக வாழ்வை உயிரற்றதாக ஆக்கி விட்டிருக்கிறது. ஒட்டு மொத்த சமுதாயம் தவிட்டுக் குவியலாக ஆகி நிற்கிறது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கையில் தடியை எடுத்துக் கொண்டு அந்த தவிட்டுக் குவியலில் ஏறி நின்று ஆதிக்கம் செலுத்துகின்ற காட்சிகள் அன்றாடம் நடக்கத்தானே செய்கின்றன. இந்த சமுதாயமும் தன்னுடைய மதிப்பு மிக்க கொள்கைகளில் ஈமான் வைத்துக் கொண்டே எடுப்பார் கைப்பிள்ளையாக இங்குமங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றது. இலக்கு நோக்கிப் பயணிக்காமல் நேரெதிர் திசையில் நடைபோடுகிறோமே என்கிற பிரக்ஞை கூட இல்லையே.
அன்பு நண்பா! நீ மிகவும் நிராசையடைந்து விட்டது போலத் தோன்றுகிறது. ஆண்டுகள் பல உருண்டோடி விட்ட பிறகு கூட இஸ்லாம் எங்குமே முழுமையாக நிலைநாட்டப்படவில்லையே என புலம்பி இருக்கின்றாய். இறையருள் மற்றும் இறையச்சத்தின் ஊற்றிலிருந்து எத்துணை தூரம் விலகிச் சென்று விட்டாய் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நீ எந்தப் பாதையில் நடை போடத் தொடங்கினாயோ, அந்தப் பாதையின் தனித்தன்மை என்ன தெரியுமா? அங்கு நீ எப்போது நடந்தாய்? எவ்வளவு தூரம் நடந்தாய்? எதுவரை சென்றடைந்தாய்? என்றெல்லாம் கணக்கு போட்டுப் பார்க்கப்படுவதில்லை. எந்த வழியில் போக வேண்டுமோ அந்த வழி கண் முன்னால் இருக்கிறதா? என்றுதான் பார்க்கப்படும். அவன் கொடுத்த கால்கள் இப்போதும் நல்ல நிலைமையில்தான் இருக்கிறது. இல்லையெனில் தவழ்ந்தும், ஊர்ந்தும் செல்வோம். அதுவும் இயலவில்லையெனில் இலக்கை ஏறிட்டுப் பார்க்க கண்கள் இருக்கின்றனவே என்றுதான் யோசிப்போமே தவிர எந்த நிலையிலும் விரக்திக்கு இடம் தர மாட்டோம்.

Six C's of Character - Yasir Fazaga