Search This Blog

Tuesday, August 14, 2007

தென்காசியில் திடீர் கலவரம்

தென்காசியில் திடீர் கலவரம் ; 6 பேர் படுகொலை கடைகள் அடைப்பு-பதட்டம்
தென்காசி, ஆக. 14-
இன்று காலை 10 மணிக்கு நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்து கோவில் அருகே மசூதி கட்டக்கூடாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து ஒரு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் அவரை வெட்டி கொன்றனர்.
இதனால் இரு தரப்பினரிடையேயும் மோதல் போக்கு உருவானது. அவ்வப் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் குமார் பாண்டியனின் தம்பி செந்தில், அவரது நண்பர் நடராஜன் வெட்டப்பட்டனர்.
இதையடுத்து எதிர் தரப்பை சேர்ந்த மைதீன் சேட்கான் என்பவர் வெட்டப்பட்டார்.
இவ்வாறு மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த சண்டையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இன்று காலை 10 மணி அளவில் தென்காசி போலீஸ் நிலையத்துக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். முத்தாரம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் காரில் வந்தனர்.
அரிவாள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இறங்கிய இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அரிவாளால் சரமாரியாக வெட்டினர். வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அது வெடிக்க வில்லை.
இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி (35), ரவி, சேகர் (குமார் பாண்டியனின் தம்பி) ஆகிய 3 பேர் ரத்தவெள்ளத்தில் பிண மானார்கள். படுகாயம் அடைந்த நசீர் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குமார் பாண்டியனின் தம்பி செந்தில், நாகூர்மீரான் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மோதலில் சையது அலி (25), அப்துல்லா (30), அபு (27), ராஜா (36), மீரான் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர மோதலால் அப்பகுதி போர்க்களம்போல் காணப்பட்டது.
கடைகள் அடைக்கப்பட்டன வியாபாரிகளும், பொது மக்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர். வீடுகளில் இருந்தனர்கள் கதவை பூட்டிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அசம்பாதங்கள் ஏற்படாமல் இருக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்-ஆட்டோக் களும் ஓடவில்லை. இதனால் வெளிïர் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தென்காசி சம்பவத்தை தொடர்ந்து கடையநல்லூர் பகுதியிலும் பதட்ட மான சூழ்நிலை உரு வானது. அங்கும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் தென்காசி விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Wednesday, August 08, 2007

அமெரிக்க அதிபர் வேட்பாளர்: மக்கா மற்றும் மதீனாவை அழிக்கவேண்டும்

அமெரிக்க அதிபர் வேட்பாளர்: மக்கா மற்றும் மதீனாவை அழிக்கவேண்டும்


சனி, 04 ஆகஸ்ட் 2007
அமெரிக்கா மீதான தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டுமெனில் இஸ்லாமியப் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டு போட்டுச் சுவடின்றி அழிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் பிரமுகர் டாம் டான்க்ரெடோ என்பவர் கூறியுள்ளார்.
அமெரிக்க செனட்டில் கொலரோடா மாநிலப் பிரதிநிதியாக இருக்கும் இவர் நேற்று (3/8/2007) AFP நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இவர் அமெரிக்கா மீதான தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அவர்களின் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டுமழை பொழிந்து அழிப்பது தான் தமக்குச் சரியாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.
இவ்வாறு இவர் கூறியுள்ளது உலக முஸ்லிம்களிடையேயும் அமெரிக்க அரசின் உயர் அலுவலர்களிடையேயும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. டாம் டான்க்ரடோவின் இந்தப் பேட்டி வெளியாகிய சில மணிநேரங்களிலேயே அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கும் டான்க்ரெடோவின் இந்தப் பேச்சுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். அவர் இவ்வாறு கூறியுள்ளது கண்டிக்கத் தக்கது என்றும் பைத்தியக்காரத்தனமான உளறல் (reprehensible and absolutely crazy) என்றும் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கெதிரான அமெரிக்காவின் போரில் மிகச் சிறந்த ஒத்துழைப்பை நல்கி வரும் மத்தியகிழக்கு நாடுகளையும் பல முஸ்லிம் நாடுகளையும் அமெரிக்கா ஒருபோதும் பகைத்துக் கொள்ளவிரும்பாது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க இஸ்லாமியக் குழுமத்தின் (Council for American Islamic Relations) செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஹூப்பர், இப்படிப்பட்ட பொறுப்பற்ற ரவுடித்தனமான பேச்சுகள் பொது வாழ்வில் போட்டியிட விரும்பும் எவருக்கும் பொருந்தாதவை என்று தெரிவித்தார். இது குறித்து முறையான புகார்கள் தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயங்கராவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களுக்கு இனி முஸ்லிம் நாடுகள் வழங்கி வரும் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Sunday, August 05, 2007

அர்ஜுன் சம்பத்

கடந்த இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது இந்தியாவுக்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு, ஒரு முக்கியமான பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதுவரை தமிழ் மொழி பேசுபவர்களுக்கும் (அதிலும் வடக்கே வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள், தெற்கே வாழும் இந்தியத் தமிழர்கள் அல்ல...) சிங்களமொழி பேசுபவர்களுக்குமான பிரச்னையாகவே இலங்கைப் பிரச்னை பார்க்கப்பட்டு வந்தது. இப்போது இலங்கையின் வடக்குப் பகுதிகளிலுள்ள இந்துமதக் கோயில்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டு, அதையே தங்கள் ராணுவ முகாமாகப் பயன்படுத்தி வரும் வேளையில், இந்தியாவில் உள்ள இந்துமத அமைப்புகளும் இந்துமதக் கட்சிகளும் இப்பிரச்னையைக் கையிலெடுத்துக் கொள்ள, இலங்கைப் பிரச்னை என்பது இப்போது ஒரு மதப் பிரச்னையாக புதுவடிவம் பெற்றுள்ளது.

இப்போது இந்த விவகாரம் தொடர்பாக, இந்து அமைப்புகள் ரோட்டில் இறங்கிப் போராட முடிவெடுத்துள்ளன. அதற்கு நிச்சயம் பா.ஜ.க.வின் ஆதரவும் இருக்கும்.

‘இலங்கையில் இந்து மத வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமித்து முகாம் அமைத்திருக்கும் இலங்கை ராணுவம், உடனே வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 10_ம்தேதி திருச்சி ரயில் நிலையம் முன்பாக, பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்’ என்று அறிவித்துள்ளார், இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான அர்ஜுன் சம்பத். அவர்களுடன் பாரதிய ஃபார்வர்ட் ப்ளாக், தனித்தமிழர் சேனை ஆகிய அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்கின்றன. நாம் அர்ஜுன் சம்பத்திடம் பேசினோம்.

எதற்காக இப்போது இந்தப் போராட்டம்?

“இலங்கையிலுள்ள தமிழ்ப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்காக இங்கே உள்ள பழ நெடுமாறன் போன்றவர்கள் முயற்சி எடுத்து சேமித்து வைத்திருக்கும் ஏறத்தாழ ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே பல தமிழ் அமைப்புகள் இது சம்பந்தமாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு போயும் கூட, இந்திய அரசு மௌனம் காக்கிறது.

இலங்கையில் ராணுவத் தாக்குதல்களால் அகதிகளாகிப் போயிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கங்கள் மூலமாகவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும், இந்திய அரசு அதற்கு அனுமதிக்க மறுக்கிறது. இலங்கை அரசு அனுமதிக்காமல் இருப்பதில் அர்த்தமிருக்கிறது. இந்திய அரசே அனுமதி மறுப்பது வியப்பாக இருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக கொடுப்பதை விரும்பவில்லை என்றால், அங்கே மாதா அமிர்தானந்தமயி, ரவிசங்கர் குருஜி போன்றவர்கள் நடத்தும் இந்துத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவாவது அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். ஏனெனில், அந்தப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஒரு வருஷம் ஆகப் போகிறது. அந்த மருந்துகள் காலாவதியாகும் சூழ்நிலையிலிருக்கிறது. இது மனித நேயத்தோடு செய்ய வேண்டிய காரியம். ஆனாலும்கூட, வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் இலங்கை அரசின் கை ஓங்கியிருப்பதால் நம் சகோதரர்கள் அங்கே செத்து மடிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனிதநேயமற்ற செயல். இவற்றையெல்லாம் கண்டித்துத்தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. ஆகவே, இந்து மத உணர்வுள்ளவர்களும் தமிழ் மொழி உணர்வுள்ளவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்!’’

தமிழ் ஈழம் கேட்கும் போராட்டக் குழுவுக்கு ஆதரவாக நீங்கள் இப்போது களம் இறங்கியதன் அவசியம் என்ன?

‘‘இதுவரை இலங்கைப் பிரச்னை என்பது மொழிப்பிரச்னையாகத்தான் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அது பௌத்த மதவாதிகளாக இருக்கக் கூடிய சிங்களர்களுக்கும் இந்துக்களாக இருக்கும் தமிழர்களுக்குமான பிரச்னை. தமிழர்கள் பௌத்தர்களாகவோ, முஸ்லிம்களாகவோ மாறிவிட்டால், அங்கே பிரச்னை இல்லை. அங்கே இருக்கும் பௌத்த பிட்சுக்களின் கைப்பாவையாகத்தான் இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பௌத்த பிட்சுக்களின் ஆதரவு இல்லையென்றால், உடனே அங்கே ஆட்சி கவிழ்ந்துவிடும். அந்தளவுக்கு ஆட்சியில் அவர்களின் கை நீண்டிருக்கிறது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை அரசு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பாகிஸ்தானுடன் நல்லுறவு வைத்து, பாகிஸ்தானின் ராணுவ ஒத்துழைப்பைப் பெற்றிருக்கிறார்கள். அங்கே ஐ.எஸ்.ஐ. நடவடிக்கைகள் அதிகரித்து விட்டன. ஐ.எஸ்.ஐ.யின் கைப்பாவையாக சில புத்த மத சாமியார்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிடியில்தான் இலங்கை அரசு இருக்கிறது. அதனால் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. சர்வதேசப் பார்வையில் விடுதலைப்புலிகளை, தனி ஈழம் கேட்போரை _ சுதந்திரம் கேட்கும் மக்களாகப் பார்க்காமல் ராஜிவ் காந்தி கொலை என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நடந்து முடிந்துபோன துக்கமான ஒரு விஷயம். எனவே, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையில் வசிக்கும் இந்துக்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்கவில்லையென்றால், அது மனித நேயமற்ற செயல்.

இதுவரை இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்துப் போராடிய அமைப்புகள் எல்லாம், நாத்திக அமைப்புகளாகவும் பிரிவினை அமைப்புகளாகவும் இருந்ததால், இந்தப் பிரச்னை தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே சுருங்கி விட்டது. நாங்கள் முயற்சி எடுத்து சிவசேனா தலைவரின் கவனத்துக்குக் கொண்டு போனதும் பால் தாக்கரே ஆதரவு தெரிவித்திருக்கிறார். கடந்த முறை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூட்டியிருந்த கூட்டத்தில் நான் பேசி, ‘இது இந்துக்களின் பிரச்னை. அங்கே தனிநாடு உருவானால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது. அங்கே மதரீதியாகவும் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்’ என்று நிலைமையை விளக்கியதும் இந்துமகாசபையின் ஆதரவும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்துமகாசபையின் தலைவர் சுவாமி சக்கரவர்த்தி உடனே ‘இலங்கையில் இந்துக் கோயில்களிலிருந்து ராணுவத்தை வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கக் கேட்டு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.’’

தனி ஈழம் அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

‘‘இலங்கை அரசின் துணைத்தூதரகத்தில் அம்சா என்று ஒரு முஸ்லிம் அதிகாரியை நியமித்ததும், அவர் இங்கே இருக்கக் கூடிய முஸ்லிம் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, இலங்கைப் பிரச்னையில் நாம் இலங்கை அரசுக்கு ஆதரவான முடிவை எடுக்க வேண்டும் என்று பேசி காரியங்கள் செய்து வருகிறார். செஞ்சோலையில் அநாதைக் குழந்தைகள் இல்லத்தின் மீது ராணுவத் தாக்குதல் நடந்ததைக் கண்டித்துத் தீர்மானம் போட்ட போது, உடனே அதை மறுத்து அறிக்கை அனுப்பிக் கொண்டிருந்தார் அந்த அதிகாரி. அவர், ஐ.எஸ்.ஐ. தொடர்புடையவர். வேண்டும் என்றே தமிழ்நாட்டிலிருக்கும் முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இலங்கை அரசுக்கு ஆதரவாக லாபி செய்கிறார். அதற்காக நியமிக்கப்பட்ட அவரும் எல்லா ஜமாத்தையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். முஸ்லிம் இனவாத அமைப்புகளோடும் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் இந்தவிஷயத்தில் நாடெங்கிலும் இருக்கக் கூடிய இந்துக்கள் ஒன்றுகூடி, அங்கே தமிழ் ஈழம் உருவாவதை ஆதரிக்க வேண்டும் என்று செயல்படுகிறோம். இந்திய மக்களுக்கு எதிராகச் செயல்படும் தூதர் அம்சாவை மாற்ற வேண்டும். அந்தத் தூதரகத்தை தமிழ் ஈழத் தூதரகமாக மாற்ற வேண்டும் என்று ஓராண்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தினோம். அதன் பின்னர், ஸ்ரீரங்கம் பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் இப்பிரச்னையில் கவனம் செலுத்துகிறோம். விரைவில் பா.ஜ.க., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் இந்தப் போராட்டத்தில் இணைக்கப் போகிறோம். இது ஓர் இந்துப் பிரச்னை என்று பிரசாரம் செய்யப் போகிறோம்.’’

இதில் மத அடிப்படை எப்படி வருகிறது?

‘‘தமிழ்நாட்டில் இந்தப் பிரச்னையைப் பேசியவர்கள் எல்லாருமே நாத்திகர்களாகப் போய்விட்டதால், வட இந்தியர்கள் எல்லாம் இதை நாத்திகர்களின் பிரச்னை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேல் கொஞ்சம் புரிதல் உள்ளவர்கள், இதனை தமிழர்களின் _ தமிழ் மொழி பேசுபவர்களின் பிரச்னை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உலகெங்கும் இருக்கக் கூடிய இந்துக்களின் பிரச்னை. இன்னும் பலர் இதனை ராஜிவ் காந்தியைக் கொன்றவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்றுள்ள பிரச்னை அல்ல. விவேகானந்தர் இந்து மதப் பிரசாரத்துக்காக அங்கே போனபோதே பௌத்தர்கள் அதனை எதிர்த்திருக்கிறார்கள். அங்கே நடப்பது ஒரு மதத்திணிப்பு. இதனை தெளிவுபடுத்துவதும் உலக அளவிலான ஆதரவை ஈர்ப்பதுமே எங்களின் வேலை!’’ என்றார்.

Wednesday, August 01, 2007

கோவை குண்டுவெடிப்பு: பாஷா உள்பட 153 பேர்

கோவை குண்டுவெடிப்பு: பாஷா உள்பட 153 பேர்குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஆகஸ்ட் 01, 2007 கோவை:

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா தலைவர் பாஷா உள்பட 153 பேரை நீதிமன்றம் இன்று குற்றவாளிகளாக அறிவித்தது. அதே நேரத்தில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார். கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 58 பேர் கொல்லப்பட்டனர், 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பாஜக அலுவலகம், ரயில் நிலையம், சண்முகம் ரோடு, கனி ராவுத்தர் வீதி ஆகிய இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. பாஜக தலைவர் அத்வானி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவிருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களிலும் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் அப்ரூவராக மாறிவிட்டார். இந்த வழக்கை விசாரிக்க கோவை மத்திய சிறை வளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சுமார் 2,000 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். போலீசார் 17,000 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். கடந்த 9 ஆண்டுளாக நடந்து வந்த விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று முதல் படிப்படியாக தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை முதல் கட்டமாக மதானி, பாஷா உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து 15 பேர் கொண்ட குழுவாக மொத்தம் 166 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான தீர்ப்பை நீதிபதி வாசித்தார். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி, பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரி, தாஜூதீன், நவாப் கான், பாசிக், முகம்மத் பாசிக், முகம்மது அலி கான் உள்ளிட்ட உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவர்கள் மீதான கிரிமினல் சதித் திட்டம், மத ஒற்றுமையை சீர்குலைத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி அறிவித்தார். இவர்களில் பாட்ஷா உள்ளிட்ட 73 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த சதித் திட்டம், ஆயுதங்கள் பதுக்கியது உள்ளிட்ட முக்கியக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீது சுமத்தப்பட்ட சதித் திட்டம், மத வெறியைத் தூண்டும் பேச்சு, வெடிபொருட்களை கேரளாவிலிருந்து கோவைக்குக் கொண்டு வந்தது உள்ளிட்ட புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார். மேலும் 5 பேருக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்த நீதிபதி உத்திராபதி அவர்கள் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 6ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். அன்றைய தினமே அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை விவரமும் வெளியிடப்படவுள்ளது. மொத்தம் உள்ள 168 பேரில் ஒருவர் விசாரணையின் போதே இறந்து விட்டார், ஒருவர் அப்ரூவராகி விட்டார்.

இதனால் மிச்சமுள்ள 166 பேரில் இன்று 5 பேர் தவிர மற்ற 161 பேர் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. இன்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ள 80 பேரும் ஆகஸ்ட் 6ம் தேதி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 9 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் நான்கு பேர் சிறு குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. தீர்ப்பையொட்டி கோவை மற்றும் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவை நகருக்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது.

அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. குறிப்பாக கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் படு தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. நகரில் உள்ள பேருந்து நிலையங்கள், பெரியகடை வீதி, ஒப்பணகார வீதி உள்ளிட்ட முக்கிய இடங்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையம், பாலங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. கோவை நகரின் பாதுகாப்புக்காக அண்டை மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களிலிருந்தும் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ம.பி: 9ம் வகுப்பு வரலாறு பாடத்தில் இந்துத்வா!

ம.பி: 9ம் வகுப்பு வரலாறு பாடத்தில் இந்துத்வா!

ஆகஸ்ட் 01, 2007 போபால்: பாஜக ஆட்சிப் பொறுப்பின் கீழ் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் முஸ்லீம் மன்னர்கள் குறித்த செய்திகள் குறைக்கப்பட்டு, இந்து மன்னர்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அதிக அளவில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில்தான் இது நடந்துள்ளது. சண்டல் மகாராஜா ராணி துர்காவதி குறித்து அதிக பக்கங்களில் பாடம் உள்ளது. அதேசமயம், முகலாய சக்கரவர்த்தி அக்பர் குறித்து மிகக் குறுகிய அளவிலேயே பாடம் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மகாராணா பிரதாப் சிங், சிவாஜி ஆகியோர் குறித்தும் விரிவான அளவில் பாடம் உள்ளது. இதுகுறித்து பாடப் புத்தகத் தயாரிப்பு குழு உறுப்பினர்களில் ஒருவரான பாகீரத் கும்ராவத் கூறுகையில், முகலாய மன்னர்கள் நம் நாட்டுக்குள் ஊடுறுவி ஆக்கிரமிப்பு செய்தவர்கள். அவர்கள் குறித்த உண்மையை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் மூலம் நமது வரலாற்றை மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள். சிவாஜியின் வீர தீர பராக்கிரத்தை மாணவர்களுக்கு விரிவாக சொலல் வேண்டியது அவசியம் என்றார். சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இந்து மத நம்பிக்கைகள் குறித்த பாடங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி கூறுகையில், பாஜக சிறுபான்மை விரோத கட்சி. எனவே இந்தப் பாடங்களை வரலாற்றுப் பாட நூலிலிருந்து நீக்க வேண்டும். ம.பி. மாநிலத்தில் தங்களது வரலாற்றை மாணவர்களுக்குப் போதிக்க அவர்கள் முயலுகிறார்கள் என்றார் காட்டமாக. இதேபோல எட்டாவது வகுப்புப் பாடப் புத்தகத்தில், நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து எட்டு பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து ஒரு வரி செய்திதான் உள்ளது. இதுவும் காங்கிரஸை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

Six C's of Character - Yasir Fazaga