Search This Blog

Sunday, August 05, 2007

அர்ஜுன் சம்பத்

கடந்த இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது இந்தியாவுக்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு, ஒரு முக்கியமான பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதுவரை தமிழ் மொழி பேசுபவர்களுக்கும் (அதிலும் வடக்கே வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள், தெற்கே வாழும் இந்தியத் தமிழர்கள் அல்ல...) சிங்களமொழி பேசுபவர்களுக்குமான பிரச்னையாகவே இலங்கைப் பிரச்னை பார்க்கப்பட்டு வந்தது. இப்போது இலங்கையின் வடக்குப் பகுதிகளிலுள்ள இந்துமதக் கோயில்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டு, அதையே தங்கள் ராணுவ முகாமாகப் பயன்படுத்தி வரும் வேளையில், இந்தியாவில் உள்ள இந்துமத அமைப்புகளும் இந்துமதக் கட்சிகளும் இப்பிரச்னையைக் கையிலெடுத்துக் கொள்ள, இலங்கைப் பிரச்னை என்பது இப்போது ஒரு மதப் பிரச்னையாக புதுவடிவம் பெற்றுள்ளது.

இப்போது இந்த விவகாரம் தொடர்பாக, இந்து அமைப்புகள் ரோட்டில் இறங்கிப் போராட முடிவெடுத்துள்ளன. அதற்கு நிச்சயம் பா.ஜ.க.வின் ஆதரவும் இருக்கும்.

‘இலங்கையில் இந்து மத வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமித்து முகாம் அமைத்திருக்கும் இலங்கை ராணுவம், உடனே வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 10_ம்தேதி திருச்சி ரயில் நிலையம் முன்பாக, பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்’ என்று அறிவித்துள்ளார், இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான அர்ஜுன் சம்பத். அவர்களுடன் பாரதிய ஃபார்வர்ட் ப்ளாக், தனித்தமிழர் சேனை ஆகிய அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்கின்றன. நாம் அர்ஜுன் சம்பத்திடம் பேசினோம்.

எதற்காக இப்போது இந்தப் போராட்டம்?

“இலங்கையிலுள்ள தமிழ்ப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்காக இங்கே உள்ள பழ நெடுமாறன் போன்றவர்கள் முயற்சி எடுத்து சேமித்து வைத்திருக்கும் ஏறத்தாழ ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே பல தமிழ் அமைப்புகள் இது சம்பந்தமாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு போயும் கூட, இந்திய அரசு மௌனம் காக்கிறது.

இலங்கையில் ராணுவத் தாக்குதல்களால் அகதிகளாகிப் போயிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கங்கள் மூலமாகவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும், இந்திய அரசு அதற்கு அனுமதிக்க மறுக்கிறது. இலங்கை அரசு அனுமதிக்காமல் இருப்பதில் அர்த்தமிருக்கிறது. இந்திய அரசே அனுமதி மறுப்பது வியப்பாக இருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக கொடுப்பதை விரும்பவில்லை என்றால், அங்கே மாதா அமிர்தானந்தமயி, ரவிசங்கர் குருஜி போன்றவர்கள் நடத்தும் இந்துத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவாவது அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். ஏனெனில், அந்தப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஒரு வருஷம் ஆகப் போகிறது. அந்த மருந்துகள் காலாவதியாகும் சூழ்நிலையிலிருக்கிறது. இது மனித நேயத்தோடு செய்ய வேண்டிய காரியம். ஆனாலும்கூட, வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் இலங்கை அரசின் கை ஓங்கியிருப்பதால் நம் சகோதரர்கள் அங்கே செத்து மடிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனிதநேயமற்ற செயல். இவற்றையெல்லாம் கண்டித்துத்தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. ஆகவே, இந்து மத உணர்வுள்ளவர்களும் தமிழ் மொழி உணர்வுள்ளவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்!’’

தமிழ் ஈழம் கேட்கும் போராட்டக் குழுவுக்கு ஆதரவாக நீங்கள் இப்போது களம் இறங்கியதன் அவசியம் என்ன?

‘‘இதுவரை இலங்கைப் பிரச்னை என்பது மொழிப்பிரச்னையாகத்தான் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அது பௌத்த மதவாதிகளாக இருக்கக் கூடிய சிங்களர்களுக்கும் இந்துக்களாக இருக்கும் தமிழர்களுக்குமான பிரச்னை. தமிழர்கள் பௌத்தர்களாகவோ, முஸ்லிம்களாகவோ மாறிவிட்டால், அங்கே பிரச்னை இல்லை. அங்கே இருக்கும் பௌத்த பிட்சுக்களின் கைப்பாவையாகத்தான் இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பௌத்த பிட்சுக்களின் ஆதரவு இல்லையென்றால், உடனே அங்கே ஆட்சி கவிழ்ந்துவிடும். அந்தளவுக்கு ஆட்சியில் அவர்களின் கை நீண்டிருக்கிறது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை அரசு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பாகிஸ்தானுடன் நல்லுறவு வைத்து, பாகிஸ்தானின் ராணுவ ஒத்துழைப்பைப் பெற்றிருக்கிறார்கள். அங்கே ஐ.எஸ்.ஐ. நடவடிக்கைகள் அதிகரித்து விட்டன. ஐ.எஸ்.ஐ.யின் கைப்பாவையாக சில புத்த மத சாமியார்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிடியில்தான் இலங்கை அரசு இருக்கிறது. அதனால் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. சர்வதேசப் பார்வையில் விடுதலைப்புலிகளை, தனி ஈழம் கேட்போரை _ சுதந்திரம் கேட்கும் மக்களாகப் பார்க்காமல் ராஜிவ் காந்தி கொலை என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நடந்து முடிந்துபோன துக்கமான ஒரு விஷயம். எனவே, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையில் வசிக்கும் இந்துக்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்கவில்லையென்றால், அது மனித நேயமற்ற செயல்.

இதுவரை இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்துப் போராடிய அமைப்புகள் எல்லாம், நாத்திக அமைப்புகளாகவும் பிரிவினை அமைப்புகளாகவும் இருந்ததால், இந்தப் பிரச்னை தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே சுருங்கி விட்டது. நாங்கள் முயற்சி எடுத்து சிவசேனா தலைவரின் கவனத்துக்குக் கொண்டு போனதும் பால் தாக்கரே ஆதரவு தெரிவித்திருக்கிறார். கடந்த முறை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூட்டியிருந்த கூட்டத்தில் நான் பேசி, ‘இது இந்துக்களின் பிரச்னை. அங்கே தனிநாடு உருவானால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது. அங்கே மதரீதியாகவும் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்’ என்று நிலைமையை விளக்கியதும் இந்துமகாசபையின் ஆதரவும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்துமகாசபையின் தலைவர் சுவாமி சக்கரவர்த்தி உடனே ‘இலங்கையில் இந்துக் கோயில்களிலிருந்து ராணுவத்தை வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கக் கேட்டு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.’’

தனி ஈழம் அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

‘‘இலங்கை அரசின் துணைத்தூதரகத்தில் அம்சா என்று ஒரு முஸ்லிம் அதிகாரியை நியமித்ததும், அவர் இங்கே இருக்கக் கூடிய முஸ்லிம் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, இலங்கைப் பிரச்னையில் நாம் இலங்கை அரசுக்கு ஆதரவான முடிவை எடுக்க வேண்டும் என்று பேசி காரியங்கள் செய்து வருகிறார். செஞ்சோலையில் அநாதைக் குழந்தைகள் இல்லத்தின் மீது ராணுவத் தாக்குதல் நடந்ததைக் கண்டித்துத் தீர்மானம் போட்ட போது, உடனே அதை மறுத்து அறிக்கை அனுப்பிக் கொண்டிருந்தார் அந்த அதிகாரி. அவர், ஐ.எஸ்.ஐ. தொடர்புடையவர். வேண்டும் என்றே தமிழ்நாட்டிலிருக்கும் முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இலங்கை அரசுக்கு ஆதரவாக லாபி செய்கிறார். அதற்காக நியமிக்கப்பட்ட அவரும் எல்லா ஜமாத்தையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். முஸ்லிம் இனவாத அமைப்புகளோடும் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் இந்தவிஷயத்தில் நாடெங்கிலும் இருக்கக் கூடிய இந்துக்கள் ஒன்றுகூடி, அங்கே தமிழ் ஈழம் உருவாவதை ஆதரிக்க வேண்டும் என்று செயல்படுகிறோம். இந்திய மக்களுக்கு எதிராகச் செயல்படும் தூதர் அம்சாவை மாற்ற வேண்டும். அந்தத் தூதரகத்தை தமிழ் ஈழத் தூதரகமாக மாற்ற வேண்டும் என்று ஓராண்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தினோம். அதன் பின்னர், ஸ்ரீரங்கம் பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் இப்பிரச்னையில் கவனம் செலுத்துகிறோம். விரைவில் பா.ஜ.க., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் இந்தப் போராட்டத்தில் இணைக்கப் போகிறோம். இது ஓர் இந்துப் பிரச்னை என்று பிரசாரம் செய்யப் போகிறோம்.’’

இதில் மத அடிப்படை எப்படி வருகிறது?

‘‘தமிழ்நாட்டில் இந்தப் பிரச்னையைப் பேசியவர்கள் எல்லாருமே நாத்திகர்களாகப் போய்விட்டதால், வட இந்தியர்கள் எல்லாம் இதை நாத்திகர்களின் பிரச்னை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேல் கொஞ்சம் புரிதல் உள்ளவர்கள், இதனை தமிழர்களின் _ தமிழ் மொழி பேசுபவர்களின் பிரச்னை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உலகெங்கும் இருக்கக் கூடிய இந்துக்களின் பிரச்னை. இன்னும் பலர் இதனை ராஜிவ் காந்தியைக் கொன்றவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்றுள்ள பிரச்னை அல்ல. விவேகானந்தர் இந்து மதப் பிரசாரத்துக்காக அங்கே போனபோதே பௌத்தர்கள் அதனை எதிர்த்திருக்கிறார்கள். அங்கே நடப்பது ஒரு மதத்திணிப்பு. இதனை தெளிவுபடுத்துவதும் உலக அளவிலான ஆதரவை ஈர்ப்பதுமே எங்களின் வேலை!’’ என்றார்.

No comments:

Six C's of Character - Yasir Fazaga