ம.பி: 9ம் வகுப்பு வரலாறு பாடத்தில் இந்துத்வா!
ஆகஸ்ட் 01, 2007 போபால்: பாஜக ஆட்சிப் பொறுப்பின் கீழ் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் முஸ்லீம் மன்னர்கள் குறித்த செய்திகள் குறைக்கப்பட்டு, இந்து மன்னர்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அதிக அளவில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில்தான் இது நடந்துள்ளது. சண்டல் மகாராஜா ராணி துர்காவதி குறித்து அதிக பக்கங்களில் பாடம் உள்ளது. அதேசமயம், முகலாய சக்கரவர்த்தி அக்பர் குறித்து மிகக் குறுகிய அளவிலேயே பாடம் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மகாராணா பிரதாப் சிங், சிவாஜி ஆகியோர் குறித்தும் விரிவான அளவில் பாடம் உள்ளது. இதுகுறித்து பாடப் புத்தகத் தயாரிப்பு குழு உறுப்பினர்களில் ஒருவரான பாகீரத் கும்ராவத் கூறுகையில், முகலாய மன்னர்கள் நம் நாட்டுக்குள் ஊடுறுவி ஆக்கிரமிப்பு செய்தவர்கள். அவர்கள் குறித்த உண்மையை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் மூலம் நமது வரலாற்றை மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள். சிவாஜியின் வீர தீர பராக்கிரத்தை மாணவர்களுக்கு விரிவாக சொலல் வேண்டியது அவசியம் என்றார். சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இந்து மத நம்பிக்கைகள் குறித்த பாடங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி கூறுகையில், பாஜக சிறுபான்மை விரோத கட்சி. எனவே இந்தப் பாடங்களை வரலாற்றுப் பாட நூலிலிருந்து நீக்க வேண்டும். ம.பி. மாநிலத்தில் தங்களது வரலாற்றை மாணவர்களுக்குப் போதிக்க அவர்கள் முயலுகிறார்கள் என்றார் காட்டமாக. இதேபோல எட்டாவது வகுப்புப் பாடப் புத்தகத்தில், நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து எட்டு பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து ஒரு வரி செய்திதான் உள்ளது. இதுவும் காங்கிரஸை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment