தி.க. கம்பெனியின்
'நாட்டாமை"க்குப் பவள விழா
பெரியார் கொள்கைக்கு மூடு விழா
'நாட்டாமை"க்குப் பவள விழா
பெரியார் கொள்கைக்கு மூடு விழா
இன உணர்வுத் திருவிழா ஒன்றை சென்னையில் நடத்தப் போவதாக கி.வீரமணியின் திராவிடர் கழகம் அறிவித்தவுடனே, பரவாயில்லையே; தொய்வாகிக் கிடந்த பெரியாரின் தொண்டர்கள் பார்ப்பன மதவெறிக்கு எதிராகக் கிளம்பி எழப்போகிறார்கள் போலும்! அதைப் பார்க்காமல் விட்டுவிட்டால் நாளைய வரலாறு நம்மைப் பழித்துவிடுமே எனும் அச்சத்தில்"இன உணர்வைத் தட்டி எழுப்பும்' டிசம்பர் 2ஆம் தேதியன்று பெரியார் திடலுக்குள் எட்டிப் பார்த்தோம்.
சென்னை மாநகரம் முழுக்க பளபளக்கும் டிஜிட்டல் பேனர்களில் "ஓய்வறியாதவராகவும்', "அசுரர் குலத்தலைவராகவும்',"தமிழர் தலைவராகவும்' எழுந்தருளியிருந்த வீரமணியாரின் 75 ஆவது பிறந்த நாளைத்தான் கருஞ்சட்டைப் படையினர் "இன உணர்வுத் திருவிழா'வாக இரண்டு நாட்களாகக் கொண்டாடும் விசயம் நமக்குப் புரி பட்டது. இருக்கட்டும். பிறந்த நாளை முன்வைத்து பெரியாரின் சுயமரியாதைக்கு புதுப்பாணியில் தெம்பூட்டப்போகிறார்கள் போலும் என்று எண்ணிக்கொண்டோம்.
பிறந்தநாள் விழாவுக்கு அச்சிட்ட அழைப்பிதழைப் பார்த்தவுடன் நமக்கு ஒன்றும் புரியவில்லை. சினிமா பட "பூஜை' ஏதும் நடத்தப் போகிறார்களோ எனும் ஐயம் ஏற்பட்டது. அழைப்பிதழ் செலவு மட்டுமே 100 ரூபாய்க்கு மேல் இருக்கும். வழக்கமாக கோடம்பாக்கத்தில்தான் இப்படி வக்கிரக் கூத்துகள் நடக்கும். "தமிழர் தலைவராகி' பெரியாரை பன்னாட்டு நிறுவனமாக்கி ஜோராக வியாபாரம் செய்பவர், இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?
உள்ளே கல்வியாளர் அரங்கம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. பவள விழா நாயகரை ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் ""சாக்ரடீசுக்கு கிடைத்த மாணவர் பிளாட்டோ போல பெரியாருக்கு ஒரு தமிழர் தலைவர்'' என்று முழங்கிக் கொண்டிருந்தார். இரண்டு மணிநேரம் வரை இந்தக் கூட்டம் நடக்கும் என்பதனாலும் அக்கூட்டத்தில் வீரமணி அடுத்தடுத்து மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, சேகுவேரா என பல அவதாரங்களை எடுக்கும் பேராபத்து இருந்ததாலும் அங்கிருந்து தப்பித்து எங்காவது சுயமரியாதையை ஒளித்து வைத்திருப்பார்களோ எனத் தேடிக்கொண்டிருக்கும்போது, ஆம்பூர் ஆட்டுக்கறிப் பிரியாணியை 5000 பேருக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். தலைவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்பவர்கள் 75 ரூபாய் கொடுத்து படத்தை வாங்கிக் கொண்டு வீரமணியின் பிரியாணிப் பொட்டலத்தில் பகுத்தறிவைக் கிளறிக் கொண்டிருந்தார்கள். சுயமரியாதைப் பிரியாணி தொண்டைக்குள் விக்காமல் இருக்க அனைவருக்கும் 15 ரூபாய் தண்ணீர் பாட்டிலை இலவசமாக வழங்கினார்கள்.
கல்வியாளர்கள் பாராட்டு மழையை ஒருபக்கம் பொழிந்தால், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தி.க. பொறுப்பாளர்களும் ""பெரியார் 95 வயது வரை வாழ்ந்தார். தலைவர் இன்னும் கூடுதலாக வாழவேண்டும்'' என்று வாழ்த்தினார்கள். பெரியாரின் தொண்டர்களை எண்ணிப் பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டோம். தி.க.வின் ஒவ்வொரு விழாவிற்கும் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை ஆயிரம், இரண்டாயிரம் எனக் கட்டாய நன்கொடையாக தங்கள் சம்பளத்தில் பறிகொடுக்கும் வல்லம், திருச்சி பெரியார் கல்வி நிறுவன ஊழியர்களோ ""இன்னும் 20 ஆண்டுகளா'' எனப் பதறியதைக் காண முடிந்தது.
பெரியார் உயிருடன் இருந்த காலத்தில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு சுயமரியாதைப் பிரச்சாரக் கூட்டங்களும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதேபோன்று பிரச்சாரம் ஏதாவது ஒன்றை இவர்கள் செய்யக்கூடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஒரு ஆடியோ சி.டி. வெளியிட்டார்கள். தொழில்முறைக் கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்ட அந்த சிடியோ "தமிழர் தலைவரின்' புகழை மட்டும் பாடிக் கொண்டிருந்தது. தி.க.தொண்டர் ஒருவர் வீரமணியின் முழு வாழ்க்கை வரலாற்றைப் பல தொகுதிகளாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறாராம். அதில் அவர் பிறந்ததில் இருந்து முதல் 20 வருடங்களின் "வரலாற்றினை'க் கூறும் முதல் தொகுதியினை விலைக்கு வைத்திருந்தார். விலை ரூ.1500 என்றார்கள்.
தலைவரின் பிறந்தநாளுக்காக பத்து லட்சம் ரூபாயை அமெரிக்க நண்பர்கள் கொடுத்தார்கள். வீரமணியின் இடுப்பு உயரத்திற்கு ஒரு உண்டியல் வைக்கப்பட்டு மொய் வசூல் ஜோராகப் போய்க் கொண்டிருந்தது. ""விடுதலை'' பத்திரிகைக்கு சந்தாவாக 50 இலட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 75 தங்கக் காசுகளை மாலையாக்கி அணிவித்தார்கள். ரூபாய் நோட்டு மாலையுடன் "வசூல்ராஜா வீரமணி எம்.ஏ., பி.எல்.,' தி.க. பக்தர்களுக்கு காட்சி அளித்து மகிழ்ந்தார்.
வீரமணியின் கொத்தடிமைகளாலும் பல காக்கைகளாலும் தயாரிக்கப்பட்ட வீரமணியாரின் பிறந்தநாள் மலரை ரூ.100க்கு விற்பனைக்கு வைத்திருந்தார்கள். ஒரு கோடிக்கும் அதிகமாய் செலவு செய்து கொண்டாடப்பட்டுள்ள "இன உணர்வுத் திருவிழா'வை ""விடுதலை'' நாளிதழ் ஒரு வாரமாகக் கொண்டாடியது. இக்கொண்டாட்டத்திற்கு மட்டும் 3 தலையங்கங்களை எழுதித் தள்ளியது. ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு மட்டும் தலையங்கம் எழுதியது பத்திரிக்கை உலகில் நிச்சயமாக ""சாதனை கல்'' தான்.
கொண்டாட்டத்தின் இறுதிக்காட்சியாக கருணாநிதி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு விழா. அங்கே வீரமணி நடத்திவரும் கல்வி நிறுவனத்தில் பயிலும் பெண்கள் வீரமணியின் அருமை பெருமைகளைப் பாடி ஆடி விளக்கினர். சினிமாக் கலை இயக்குநர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் "வேந்தர்' வீரமணி டாக்டர் பட்ட கவுனுடன் கட் அவுட்டாகி இருந்தார். வள்ளுவர் கோட்ட மேடையில் பேசுபவர்கள் கருணாநிதியையும் வீரமணியையும் பாகுபாடின்றிப் புகழ வேண்டிய சிரமத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கையில் ""தாங்கள் சுட்டு விரலை நீட்டினால் எதிரிகளை நிர்மூலமாக்கக் காத்துக் கிடக்கிறது கருஞ்சட்டைப் பட்டாளம்'' என்று துரை.சந்திரசேகரன் எனும் கருஞ்சட்டை சீரியசாகப் பேசியது. வீரமணி என்றைக்கும் சுட்டு விரலை நீட்டப்போவதில்லை என்பதை அறியாமலா பேசி இருப்பார்? பாம்பறியும் பாம்பின் கால் அல்லவா?
அனைவரும் ஒரே மாதிரி ""பெரியார், ஓரிரண்டு நிறுவனங்களைத்தான் தொடங்கினார். அவற்றின் எண்ணிக்கையை 50 வரை உயர்த்திய உயர்ந்த உள்ளம்'' என்று வீரமணியின் வியாபார விரிவாக்கத்தை மட்டுமே புகழ்ந்து கொண்டிருந்தபோது, கருணாநிதி ஒரு குட்டிக்கதை சொல்லி வைத்தார். பெரியாரிடம் வீரமணி பேச்சாளராக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒருநாள் வீரமணியை, தான் வளர்க்கும் நாய்க்குட்டிக்குப் பால் வாங்கிவரச் சொன்னாராம் பெரியார். கடைக்குப் போன வீரமணி வெறும் செம்புடன் திரும்பி விட்டாராம். ""பிராமணாள் கபே'' மட்டும் திறந்திருந்ததால், அக்கடையில் பாலை வாங்காமல் வந்துவிட்டதாக வீரமணி சொன்னாராம். நமக்கெல்லாம் சுயமரியாதை ஊட்ட பெரியார் ""பிராமணாள் கபே''யைப் புறக்கணிக்கச் சொல்லி இருந்தபோதிலும், அக்கொள்கையை நாய்க்குட்டி விசயத்திலும் கடைப்பிடித்த கொள்கைக் குன்று நமது இளவல் என்று கருணாநிதி சொன்னதும் பலத்த கைதட்டல். ஆனால் இக்கதை எதற்காக சொல்லப்பட்டது என்பதை வீரமணி நிச்சயம் உணர்ந்திருப்பார். அப்பேற்பட்ட "கொள்கைக் குன்று' போயஸ் தோட்டத்துப் பாப்பாத்தியின் நாய்க்குட்டியாகக் குரைக்கப் போனதை உள்ளுறையாக உணர்த்துவதுதான் அக்கதை என்பது தெரியாதவரா வீரமணி?
பெரியார் திடலில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரை தேடித்தேடிப் பார்த்தும் இவ்விழாவில் பெரியார் கொள்கைகள் பேசப்படவே இல்லை. முழுக்க முழுக்க துதிப்பாடல்கள். தன்னைப் பெரியாரின் நம்பிக்கைக்குரிய தொண்டன் என்று சொல்லிக்கொள்ளும் வீரமணி, தனது பிறந்தநாளைக் கொண்டாடி தன்னை அனைவரையும் புகழ வைத்துக் கொண்ட அழகைப் பார்க்கையில் நம்மையும் அறியாமல் திருவாரூர் நீதிக்கட்சி மாநாடு நினைவுக்கு வருகிறது.
1940இல் நடந்த அம்மாநாட்டில் பெரியாரைத் தலைமை தாங்கச் சொல்லி டாக்டர் தர்மாம்பாள், சவுந்திரபாண்டியன், சோமசுந்தரபாரதியார் உட்பட 15 பேர் உரையாற்றி முடித்த பிறகு பெரியார் பேசினார். ""என்னை நீங்கள் மக்களுக்காக அதிகம் கஷ்டப்பட்டதாக எடுத்துக் கூறி 15 பேரும் பேசினீர்கள். எனக்கு கஷ்டம் என்று படக்கூடிய காரியம் எதையும் நான் செய்தது கிடையாது. ஆனால், ஏதாவது கஷ்டப்பட்டேன் என்று சொல்ல வேண்டுமானால், என்னை பிரேரேபித்த (முன்மொழிந்த) 15 பேருடைய பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தேனே; அதுதான் உண்மையில் பெரிய கஷ்டமாக இருந்தது'' என்றார். ஆனால் இரண்டுநாள் பஜனையை பெரியாரின் "உண்மைச் சீடர்' வீரமணியோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அமர்ந்திருந்தார்.
விழா முடிவில் கருணாநிதியிடம் அரசு சார்பாக சென்னையில் 95 அடி உயர பெரியார் சிலை அமைக்க வீரமணி கேட்டுக் கொண்டார். முதல்வரும் ஏற்றுக் கொண்டார். பெரியார் பொறியியற் கல்லூரி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் போன்று 46 நிறுவனங்களைப் பெரியார் பேரில் வளர்த்த வீரமணி, பெரியார் சிலையை அரசின் பொறுப்பில் விட்டுவிட்டார். வருவாய் ஏதும் தந்து விடாத பெரியார் சிலையை விட, நன்கொடை தரும் நிறுவனங்களில் அல்லவா முதலீடு செய்யவேண்டும் என்பதுதான் இந்த "மானமிகு'வின் தந்திரம் போலும்.
எதற்காக வீரமணியின் பவளவிழாவை இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடினார்கள்? அதற்கு ""நடைபெற்றது தனிநபருக்கான விழா அல்ல; ஓர் இயக்கத்தின் உயிரோட்டத்துக்கான உரைகல்'' என்று வீரமணியின் விடுதலை ஏடு விளக்கம் தருகிறது.
ஓர் இயக்கம் செத்துப் போகாமல் மூச்சு இருக்கிறதா எனப் பார்க்க ஒரு கோடி ரூபாயைக் கரியாக்கி மகிழ்ந்த இயக்கம், அநேகமாக உலகிலேயே வேறு எங்கும் இருக்க முடியாது. உரசிப் பார்க்கத்தான் எதிரி சென்ற ஆண்டு சிறீங்கம் பெரியார் சிலையை உடைத்து பைசா செலவில்லாமலே ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி இருந்தானே! அப்போது தி.க. என்ன செய்தது? கருணாநிதியின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று சாக்குப் போக்கு சொல்லி பெரியார் சிலை உடைப்பை அறிக்கை அக்கப்போரிலேயே முடக்கி வைத்தது. ம.க.இ.க. தோழர்கள் சிலை உடைப்பை மையப்படுத்தி தமிழ்நாடெங்கும் பார்ப்பன பயங்கரவாதத்தைத் திரைகிழித்தபோதும் கூட தி.க. மவுனமாகிக் ""கோமா''வில் கிடந்ததே! அதற்கு உயிரூட்டி எழுப்பிட ஒரு கோடி செலவு. எழுந்து உட்கார்ந்த இயக்கமோ தனது முதலாளிக்கு முதுகு சொறிந்து விட்டு மறுபடியும் நீளõதுயிலுக்குச் சென்றிருக்கிறது.
ஊதாரித்தனமான பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மத்தியில் வீரமணி பகிரங்கமாக ஒன்றை சொல்லி இருக்கிறார். ""நாம் களத்திலே நின்று கொண்டிருக்கிறோம். அப்படிப் போராடிக் கொண்டிருக்கின்றபோது அதனுடைய கருவிகளை மாற்றவேண்டும். காலத்துக்கேற்ப கருவிகளை மாற்றிக் கொள்ளும்போது கருத்துக்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.'' இந்த ஒப்புதல் வாக்குமூலத்திற்காக வீரமணியை நாம் பாராட்டியே தீரவேண்டும்.
ஆம். வீரமணியின் கருத்து இன்றைக்கு மாறி இருக்கிறது. அவரிடம் முன்னர் இருந்த பார்ப்பன எதிர்ப்பும், நாத்திகமும் மறைந்து விட்டன. நிறுவனங்களை விரிவுபடுத்தி, பெரியாரின் சொத்துக்களைப் பன்மடங்காக்கி ஆதாயம் அடைந்து கொண்டிருக்கும் "தமிழர் தலைவர்' இன்று பார்ப்பனியத்தையும், கருத்துமுதல்வாதத்தையும் (ஆன்மீகம்) ஆதரித்து "வாழ்வியல் சிந்தனை'களாக எழுதிப் பிரச்சாரம் செய்து வருவதைத்தான் அவரே ""கருத்துக்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று முடிவாகச் சொல்லி பெரியாரின் சிந்தனைகளைச் சவப்பெட்டியில் ஏற்றி இறுதி ஆணியை அறைந்திருக்கிறார்.
இன்னமும் பல பெரியார் தொண்டர்கள், வீரமணியின் அனைத்துப் பித்தலாட்டங்களையும் சகித்துக்கொண்டு, பெரியார் ஆரம்பித்த இயக்கம் என்கிற ஒரே காரணத்துக்காக தி.க.வில் இருக்கிறார்கள். பாட்டன் வெட்டிய கேணியே என்றாலும், அதில் ஊறுவது உப்புத்தண்ணீர் என்றால், அதனைக் குடித்துக் கொண்டா இருப்பது? பெரியாரியலுக்கு மூடுவிழா நடத்திவிட்ட வீரமணியின் தலைமையைத் துறந்து, பெரியாரின் கொள்கைகளை வீச்சோடு எடுத்துச் சென்று பார்ப்பனிய பயங்கரவாதத்தை எதிர்த்து களத்தில் நிற்கும் புரட்சிகர அமைப்புகளில் பகுத்தறிவாளர்கள் இணைவதைத் தவிர இனி வேறென்ன வழி இருக்கிறது?
· இளம்பிறை
· இளம்பிறை
___
.
__,_._,___
No comments:
Post a Comment