Search This Blog

Monday, June 22, 2009

கேள்வி கேட்க மறந்த மக்கள்!!! - எஸ்.ஏ.ஆர். கிலானி

 

'மதவாதம், பாசிசம் மற்றும் ஜனநாயகம்-மிகையும், உண்மையும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தலைமை ஏற்க, நவம்பர் 6, 2008 அன்று காலை சரியாக 11.30 மணிக்கு நான் தில்லி பல்கலைக் கழகத்தின் கலைத் துறையை வந்து சேர்ந்தேன்.




 


நான் என் இருப்பிடத்தில் அமர்ந்த போது, இன்னும் சில நிமிடங்களில் என் மீது ஒரு வெட்கங்கெட்ட பாசிசத் தாக்குதல் நடைபெறப் போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நான் அமர்ந்த உடனேயே ஒரு மாணவர் என்னிடம் பேச முற்படுவது போல் என் அருகே நெருங்கினார். ஆனால் பேசுவதற்குப் பதில், என் முகத்தில் அவர் காறி உமிழ்ந்தார். அடுத்த நொடியே வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.




 


பார்வையாளர்களிடையேயும் வெளியிலும் விரவியிருந்த விசுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கூச்சலிடவும்-நாற்காலி, மேசைகள், ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கவும் தொடங்கினர். பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்ததைப் பற்றிய எந்த பாதிப்புமின்றி அவர்கள் என்னை மட்டுமல்ல; ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையுமே பழிக்கத் தொடங்கினர்.




 


ஒரு நொடி நான் அதிர்ந்து போனேன். ஆனால் என் மீது உமிழ்ந்த மனிதர் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கியவுடன் -அவர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கலாச்சாரத்தில் உள்ளவர் என்பதை உணர்ந்தேன். இவர்கள்தான் உஜ்ஜயினியில் பேராசிரியர் சபர்வாலை கொலை செய்தவர்கள். அண்மையில் ஒரிசாவிலும் கர்நாடகத்திலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்.இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக சொல்லிக் கொள்பவர்களின் பாசிசம் இதுதான்.




 


வன்முறைதான் இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என்ற தவறான செய்தியை இவர்கள் உலகுக்கு அளிக்கிறார்கள். டிசம்பர் 2001இல் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து, 2005 இல் நான் விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட, இந்த பாசிசத்தை நான் சந்தித்து வருகிறேன்.உண்மையில் நான் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்பட்ட பிறகான வாழ்க்கை எனக்கு மட்டுமல்ல; எனது குடும்பத்தினருக்கும் மிகக் கடினமாகவே இருக்கிறது. நான் குறி வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறேன்.




 


எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். 2005 இல் என்னைக் கொல்ல முயற்சி நடந்தது. 6 குண்டுகள் என்னை துளைத்தன. மருத்துவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஆனாலும் அதிசயமாக நான் பிழைத்துக் கொண்டேன். ஓராண்டு கழித்து, என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதன் பிறகும் பல முயற்சிகள் என் மீது நடந்தன. என்னைச் சுற்றி ஆபத்து இருப்பதை அறிவேன்.




 


இறுதியாக உயர் நீதிமன்றமும், பின்னர் உச்ச நீதிமன்றமும் என் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யென என்னை விடுவித்தன. சொல்லப் போனால், உயர் நீதிமன்றமும், காவல் துறையும் எனக்கு எதிராக பொய்யானசாட்சியங்களை உருவாக்கியதையும், போலி ஆவணங்கள் தயாரித்ததையும் கண்டுபிடித்துச் சொன்னது. ஆனால்தற்போது மக்கள் மனதில் ஆழப்பதிந்திருப்பது, ஊடகங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்த பிம்பமே. இது, மற்றவர்களுக்கும் பொருந்தும்.




 


அய்தராபாத்தில் உள்ள ஒரு நீதிமன்றம், சென்ற வாரம் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் கைதான ஒரு முஸ்லிம் இளைஞனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஊடகங்கள் இதை வெளியிட எந்த அக்கறையும் காட்டவில்லை. 2003இல் நடைபெற்ற ஒரு பேருந்து குண்டு வெடிப்பு வழக்கில், கைது செய்யப்பட்ட அனைவரையும் மும்பையில் உள்ள நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் ஒருவரும் இந்த செய்தியை வெளியிடவில்லை.




 


நான் உளவு நிறுவனங்களை மிக நெருக்கமாக கவனித்திருக்கிறேன். அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, நான் ஓர் அரசு அலுவலகத்திலோ அல்லது ஒரு ஜனநாயக நாட்டிலோ இருப்பதாக உணர்ந்ததே இல்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் இருப்பது போன்ற உணர்வையே அது ஏற்படுத்தியது. இந்த நிறுவனங்கள் எல்லாம் முற்றிலும் மதமயமாகிப்போயிருக்கின்றன.




 


வேதனையான செய்தி என்னவெனில், ஊடகங்களில் திட்டமிட்டு சொருகப்பட்ட செய்திகள் நிறைய வெளிவருகின்றன. இந்த உளவு நிறுவனங்கள் பல ஊடகவியலாளர்கள் மூலம் சில கதைகளைப் பரப்புகிறார்கள். அவர்களும் அதை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறார்கள்.இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்திய நாட்டின் மக்கள் தங்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்க மறந்து விட்டார்கள்.




 


நான் தொடர்ந்து மக்களிடம் கேட்கிறேன். "2001 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தைத் தாக்கியவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' யாருக்கும் தெரியாது. யாரும் கேட்கவும் இல்லை. அதனால் இது, இந்த நொடி இது மிக மோசமாகத் தோன்றுகிறது. பாரபட்சமான, முன்தீர்மானத்துடன் கூடிய சட்டத்திட்டங்கள், ஜனநாயகத்திற்கான இடத்தை சுருக்கிக் கொண்டே வருகின்றன.




 


ஜனநாயகத்திற்கான இடத்தை உறுதி செய்வதன் மூலம் நமது வருங்காலத் தலைமுறையினர் பயன் பெறுவதற்காக, நாம் துன்பங்களை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும்.






"முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்களும், மனித உரிமை மீறல்களும்' என்ற தலைப்பில் 29.11.2008 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த கருத்தரங்கத்தில் கிலானி பங்கேற்றார். அந்நிகழ்வில் கலந்து கொண்ட வரலாற்று ஆய்வாளரும், ஈழவத் தலைவரும், மனித உரிமை ஆர்வலருமான டாக்டர் எம்.எஸ். ஜெயப்பிரகாஷ் தன்னுடைய உரையில், "விசுவ இந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ். ஆகியோர் உள்ளிட்ட இந்து பயங்கரவாத சக்திகள், நமது அருமைச் சகோதரர் கிலானி மீது காறி உமிழ்ந்ததை நாம் அறிவோம்.




"இந்த அருவருக்கத்தக்க செயலுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், நான் கிலானி அவர்களுக்கு முத்தம் கொடுக்க விரும்புகிறேன்'' என்று கூறி கிலானியின் நெற்றியில் முத்தமிட்டார். அவர் மேலும், "அன்பான சகோதரர் கிலானி அவர்களே! எங்களிடம் எந்த ஆரிய ரத்தமும் இல்லை. எங்கள் உடலில் ஓடுவது சுத்தமான திராவிட ரத்தம். இந்தியாவின் தொல்குடிகளின் ரத்தம். இந்து பயங்கரவாதத்தின் அழுத்தத்தால் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தோடு, தலித் - பெரும்பான்மை மக்கள் கொண்டுள்ள நல்லிணக்கத்தையே இந்த முத்தம் வெளிப்படுத்துகிறது'' என்றும் கூறினார். அவரது இந்த செயலுக்கு ஒட்டுமொத்த அரங்கமும் தனது பலத்த கைத்தட்டலால் ஆதரவினைத் தெரிவித்தது.




நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், ஊடகங்கள் ஏன் இந்த அளவுக்கு எதிர் நிலையில் நின்றன? ஊடகங்கள் மட்டுமல்ல; இந்த வழக்கைப் பொருத்தவரையில், ஜனநாயக நிறுவனங்கள் அனைத்துமே - அது காவல் துறையாக இருந்தாலும் சரி, விசாரணை அமைப்புகளாக இருந்தாலும் சரி, நீதித் துறையாக இருந்தாலும் சரி - அனைத்துமே நிலைகுலையும் தருவாயில் உள்ளன. இந்த வழக்கில் ஊடகங்கள் அரசுக்கு சார்பாக நின்றதற்கு காரணம், காவல் துறை அவர்களுக்கு என்ன சொன்னதோ அதையே அவர்கள் பின்பற்றினார்கள்.




ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கதை. நீங்கள் கவனித்திருந்தீர்களானால், முதல் நாளே அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியே என்னவெனில், "பல்கலைக்கழக தாதா' - என்னைத்தான் அப்படி விளித்தனர். "பல்கலைக்கழக தாதா நாடாளுமன்ற வழக்கில்' என்று செய்தி வெளிவந்தது. அதன் பிறகு நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.நான் உலகெங்கிலும் இருந்து "வேலை'க்கு ஆட்களை எடுத்ததாகவும், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சிலிருந்து கூட நான் ஆட்களை "வேலை'க்கு எடுத்ததாகவும். காந்தகாரில் விமானக் கடத்தல் நடந்த போது ஜஸ்வந்த் சிங்கால் காந்தகாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்ட சயீதை, நான்தான் இந்தப் பணிக்கு அமர்த்தியதாகவும் பலவிதமான கதைகள் உலவின.




ஊடகங்களுக்கு காவல் துறைதான் தீனி அளித்தது. ஊடகங்களும் அதை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டன. இப்படித்தான் ஊடகங்கள் நடந்து கொண்டன. ஊடகங்கள் மட்டுமல்ல, நான் பல்வேறு சமூக, அரசியல் இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தேன். ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று கூறப்படுபவர்கள் என்னை தனிப்பட்ட முறையிலும் அறிந்திருந்தனர். இந்தியாவின் தேசிய அரசியலில் பெரும் புள்ளிகளாக இருப்பவர்களில் பலர் என்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தனர்.




ஆனால் அவர்கள் அனைவரும் வாயை மூடிக் கொண்டிருந்தனர். அதிலும் எவ்வித ஆதாரமும் இன்றியே சில சமூக, அரசியல் அமைப்புகள் எனக்கு எதிராக இருந்தன.இந்த நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது? குற்றம் முழுமையாக நிரூபிக்கப்படும் வரையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றமற்றவராகவே கருதப்படுவார். ஆனால் இந்த அரசியல் பெரும் புள்ளிகள், எனது நண்பர்களிடம் "அவர் குற்றமற்றவர் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், இது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. அதனால் அவரை எதிர்ப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை' என்றனர்.




அது மிக மோசமானது. மிக நீண்ட காலத்திற்குப் பிறகே அவர்கள் எனக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி அமைதியானார்கள். அது வரையில் எனக்கு எதிராக தீர்மானங்கள் போட்டார்கள். என் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்கள். இச்சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பிற அமைப்புகளும், ஜனநாயக நிறுவனங்களும் வெற்றுக் கூடுகளாகவே இருந்ததை உறுதிப்படுத்தின.




உங்கள் கைதுக்கு உங்கள் மாணவர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது? மாணவர்களின் எதிர்வினை எப்போதுமே நல்ல விதமாக இருந்தது. மாணவர்கள் என்னை நன்கு அறிந்து வைத்திருந்தனர். ஊடகங்கள் என்னை ஒரு சர்வதேச பயங்கரவாதியாக சித்தரித்த காலத்தில் கூட, மாணவர்கள் மிகத் தெளிவாக எங்களால் இதையெல்லாம் நம்ப முடியாது எனக் கூறினர்.




அவரைப் பற்றி எங்களுக்குத் தெரியும், அவர் எப்படியானவர் என்று எங்களுக்குத் தெரியும் என்று கூறினார்கள். அவர்கள் என்னை சிறையிலும் நீதிமன்றத்திலும் வந்து சந்தித்தனர். என்னை விடுவிக்க நடந்த பிரச்சாரத்தில் பல மாணவர்களும் ஈடுபட்டிருந்தனர். என்னுடன் பணியாற்றியவர்களும் மாணவர்களும்தான் முதலில் எனக்காகப் பிரச்சாரம் செய்தனர். பின்னர் பல அறிவுஜீவிகளும் அவர்களுடன் களம் இறங்கினர்.




பேராசிரியர் ரஜினி கோத்தாரி தலைமையில் என்னைக் காப்பதற்காக அகில இந்திய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பி.யு.சி.எல். இல் இருந்தும் அருந்ததி ராய் போன்றவர்களும் எனக்காக வாதிட்டனர். முக்கியமாக மிகப் பெரும் எண்ணிக்கையில் மாணவர்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.




உங்கள் மீதான வழக்கு தேசிய அளவில் மிக "சென்சிடி'வான வழக்கு. அக்காலகட்டத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுமே உங்களுக்கு எதிராக இருப்பது போன்ற தோற்றம் இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுபடுவோம் என நினைத்தீர்களா?




உண்மைதான். நீங்கள் சொல்வது போல ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களுக்கு எதிராகத்தான் இருந்தது. ஆனால் தொடக்கத்திலிருந்து நான் நேர்மறையான மனநிலையிலேயே இருந்தேன். இயல்பிலேயே நான் நேர்மறையாக சிந்திக்கக் கூடியவன். எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட அன்று எனது வழக்குரைஞர் சீமா கண்ணீருடன் நின்றார். நான் அவருக்கு தேறுதல் அளித்தேன்.




இதுவே முடிவல்ல; நாம் மேல் முறையீட்டில் இவற்றைத் தகர்ப்போம் என்று கூறினேன். இதற்கு மனந்தளர்ந்துவிட்டால் பின்னர் அடுத்ததை எப்படி எதிர் கொள்வது என்றேன். என்னை சிறையிலேயே கொலை செய்ய முயன்றனர். உணவில் விஷம் கலக்க முற்பட்டனர். என்னைத் தாக்க முயன்றனர். சிறையில் வைத்து மூன்று முறை என் மீது தாக்குதல் நடந்தது. ஒரு மனிதனை எந்த சூழலில் வைத்தால், அவன் முற்றிலும் நிலைகுலைந்து விடுவானோ, அத்தகைய சூழலில் என்னை வைத்திருந்தனர்.




ஒரு சிறிய அறையில், வெளிச்சமின்றி விளக்குகளின்றி, இரவு பகல் புரியாத நிலையில் பாழடைந்த இடத்தில், எவ்வித தொடர்புமின்றி, படிக்கக் கூட எதுவுமின்றி, இப்படியான நிலையில், இரவு பகல் புரியாத போது - மனிதத் தொடர்பே இல்லாத போது, பேசுவதற்கு ஆள் இல்லாத போது, படிக்க எதுவும் இல்லாத போது, இவை எல்லாமே கடும் துன்புறுத்தல்களாகவே இருந்தன.




அதற்கும் மேலாக, தொடர்ந்த மிரட்டல்கள், தூக்கிலிடப்படுவோம் என்ற அச்சுறுத்தல்கள், இவையெல்லாமே இருந்தன. ஆனால் இவற்றை எல்லாம் மீறி என் மனதின் ஆழத்தில் ஏதோ ஒன்று எனக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டே இருந்தது. நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன். நான் மக்களுடன் இருப்பதாக, எடுத்துக் கொண்ட உறுதிக்காகவே நான் துன்புறுகிறேன்.




மக்களுக்காகப் போராடுவதால் துன்புறகிறேன் என்றால், நடக்கட்டும். இது எனக்கு மேலும் பலத்தையே அளித்தது. நான் விரக்தியடையவேயில்லை. நான் நிச்சயம் ஒருநாள் வெளியே வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே இருந்தது.




அப்சல் "தெகல்கா' இதழுக்கு அளித்த நேர்காணலில், இந்த நாடாளுமன்றத் தாக்குதல் என்பதே போலியானது என்று சொல்லியிருக்கிறார். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?




உண்மை; முற்றிலும் உண்மை. உங்களுக்கு நினைவிருக்குமானால், நான் வெளி வந்த அன்றே கூறினேன். நேற்றும் இன்றும் கூறுகிறேன். நாடாளுமன்றத்தை உண்மையில் யார் தாக்கினார்கள் என்பது இன்று வரையில் யாருக்கும் தெரியாது. உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று உரிமை கொண்டாடும் இந்தியாவில் ஜனநாயகம் என்பதற்குப் பொருள் - அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்பது உண்மையானால், இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் ஏன் எந்த கேள்வியும் கேட்பதில்லை?




அந்த ஒட்டுமொத்த நிகழ்வும் போலியாக நடத்தப்பட்டதற்குக் காரணம் மக்கள் எந்த கேள்வியும் கேட்பதில்லை. ஆனால், அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட போது மக்கள் கேள்வி எழுப்பினார்கள். அந்த ஒட்டுமொத்த தாக்குதலையுமே சந்தேகக் கண் கொண்டு பார்த்த மக்கள் இருந்தார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த அறிவுஜீவிகள் பெரும் எண்ணிக்கையில் உண்மையை வெளிக்கொணரப் பாடுபட்டனர்.




இந்தத் தாக்குதலை "அல் கொய்தா' தான் நடத்தியது என்று நம்பியவர்கள் கூட கேள்விகளை எழுப்பினார்கள். ஏன் எங்களைத் தாக்க வேண்டும், ஏன் அந்தத் தாக்குதல் நடைபெற வேண்டும், அதன் அடிப்படைக் காரணம் என்ன?மக்கள் அதை அறிந்து கொள்ள விழைந்தனர்.




ஆனால், உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு என்று உரிமை கொண்டாடும் இந்த நாட்டில் ஒருவரும் கேள்வி கேட்பதேயில்லை. அரசு கூறியது போல் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது உண்மை என்று நம்புபவர்கள் கூட, அது ஏன் நடந்தது என்ற கேள்வியை எழுப்பவே இல்லை.




நாடாளுமன்றத்தை யார்தான் தாக்கினார்கள் என்று சொல்ல வருகிறீர்கள்?




நான் இந்த நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்றிருக்கிறேன் . நான் செல்லும் இடங்களில் எல்லாம் பெருந்திரளான மக்களிடையே உரையாற்றியிருக்கிறேன். எல்லா இடங்களிலும் நான் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறேன்: நாடாளுமன்றத்தை யார் தாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? எனக்கு பதிலாக கிடைத்ததெல்லாம் மவுனம்தான்.




ஏனெனில் உண்மையில் நாடாளு மன்றத்தைத் தாக்கியது யார் என்பது எவருக்கும் தெரியவில்லை. 5 பாகிஸ்தானியர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்கள் என்பதும், அவர்கள் கொல்லப்பட்டனர் என்பதும் தான் மக்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் உண்மையில் பாகிஸ்தானியர்கள் தானா என்று அரசைக் கேட்டிருக்கிறார்களா? அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதை உறுதிப்படுத்தச் சொல்லி அரசைக் கேட்டிருக்கிறார்களா?




அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று மக்கள் அறிந்தது எப்படியெனில், அன்றைய உள் துறை அமைச்சர் எல். கே. அத்வானி, வந்தவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று கூறினார். அவர்கள் பாகிஸ்தானியர்களைப் போல தோற்றம் அளிப்பதாகவும், அதனால் அவர்கள் பாகிஸ்தானியர்கள்தான் என்றும் எல். கே. அத்வானி கூறியதால் மட்டுமே மக்கள் அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று அறிந்தனர்.




நான் அச்சமயத்திலும், அதற்குப் பிறகும் கூட கூறினேன்.அத்வானி ஒரு பாகிஸ்தானியரைப் போலத் தோற்றம் அளிக்கிறார். ஏனெனில் அவர் ஒரு பாகிஸ்தானியர்தான். அதே போல முஷாரப் ஓர் இந்தியரைப் போலத் தோற்றம் அளிக்கிறார். ஏனெனில் அர் ஓர் இந்தியர் தான். அவர்கள் பாகிஸ்தானியர்களைப் போலத் தோற்றம் அளிப்பதால், அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று எப்படி முடிவெடுக்கலாம்?




நீதிமன்றத் தீர்ப்பை நோக்கினால் அதிலும் அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான காரணமாக நீதிமன்றம் சொல்வது என்னவெனில், அவர்கள் உடலை இந்தியாவில் யாரும் கோரவில்லை என்பதால், அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று சொல்கிறது.




செய்தித்தாள்களை தொடர்ந்து பார்க்கும் போது ஏறத்தாழ நாள்தோறும் தில்லி காவல் துறையின் ஒரு குறிப்பிட்ட விளம்பரம் வெளிவருவதைப் பார்க்கலாம். அடையாளம் காணப்படாத பிணங்களின் படங்களைப் போட்டு, அதனை அடையாளம் காண உதவுமாறு மக்களைக் கோரும் விளம்பரங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.




அப்படியானால் இவ்வாறு அடையாளம் காணப்படாத, உரிமைக் கோரப்படாத பிணங்கள் எல்லாம் பாகிஸ்தானியர்களின் பிணங்கள்தானா? இது, மொத்தமும் அபத்தம் இல்லையா?இந்த நிமிடம் வரை, உண்மையில் யார் நாடாளுமன்றத்தைத் தாக்கினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. நான் வெளிவந்த அன்றே முதன் முதலாக இது குறித்து நாடாளுமன்றத் தாக்குதல் பற்றிய முழு விவரத்தையும் குறித்து, அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரினேன்.




மறைந்த விமலா தேஷ்பாண்டே தலைமையில் ஒரு மனித உரிமைக் குழு அமைக்கப்பட்டது. சட்டத் துறை முன்னாள் அமைச்சர் சாந்தி பூஷன், அருந்ததி ராய் போன்று இந்தியாவின் முக்கியமான மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் எனப் பலர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். அக்குழு நாடாளுமன்றத் தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர், குடியரசுத் தலைவர், உள் துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தது.




ஆனால் இந்த கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவேயில்லை. அனைத்து விசாரணை நிறுவனங்களும் இதனைத் துரிதப்படுத்தவே விரும்பின. முழு உண்மைகளும் வெளிவருவதை அவர்கள் விரும்பவில்லை. அந்தக் காலகட்டத்தில் நடந்தவற்றை, அதற்கு முன்பும் பின்பும் நடந்தவற்றை நீங்கள் கவனித்தால், "உண்மை' எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதை நோக்கினால் நிச்சயம் இதற்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட சதி இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.




வெளிப்படுத்த இயலா உண்மைகள் இருப்பதையும் உணர முடியும்.அப்சல் குரு விஷயத்தில் ஏதேனும் நம்பிக்கை உள்ளதா?




நான் என்ன சொல்வேன் என்றால், இந்த நாட்டில் நீதி என்பது துளியாவது மிச்சம் இருந்தால், இந்த மனிதருக்கு தண்டனை அளிக்க எவ்வித சட்ட உரிமையோ, தார்மீக உரிமையோ இவர்களுக்குக் கிடையாது. தற்போது எல்லாமே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகத்திற்கும் அனைவருக்கும் எல்லாம் தெரியும். சட்ட ரீதியான ஓட்டைகள் பல இருந்தன. இந்த நாட்டின் சட்டம் சொல்கிறது: ஒருவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டுமென்றால், அவரது குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று. அவ்வாறு சந்தேகத்திற்கு இடமின்றி ஒருவரின் குற்றத்தை நிரூபிக்க வேண்டுமானால், அதற்கு தவறில்லாத விசாரணை வேண்டும்.




ஒருவரும் குற்றம் சாட்ட இயலாத விசாரணை வேண்டும். ஆனால் இந்த வழக்கின் ஒட்டுமொத்த விசாரணை குறித்து நீதிமன்றமே என்ன சொல்கிறது? உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பிலேயே காவல் துறை, சான்றுகளை பொய்யாக தயாரித்ததாகச் சொல்லியிருக்கிறது. ஆவணங்களைப் போலியாக தயாரித்ததாகச் சொல்லியிருக்கிறது.




அது மட்டுமின்றி, நீதிமன்றத்திலும் வெளியிலும் காவல் துறை நிறைய பொய்களைச் சொல்லியிருக்கிறது. இதை நான் சொல்லவில்லை; நீதிமன்றமே தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. நீதி மன்றமே இப்படிச் சொல்கிறது என்றால், நடத்தப்பட்ட விசாரணையின் தன்மையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.




எந்தவித சட்ட அறிவும் இல்லாத ஒருவர் இந்த மொத்த விசாரணை விவரங்களையும் படித்துப் பார்த்தால் கூட, அது ஒரு புனைக் கதை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த விசாரணையை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு இந்த மனிதரை நீங்கள் தண்டிக்க இயலும்?அது மட்டுமல்ல; விசாரணை நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும், அப்சல் எந்த போராளிக் குழுவையும் சேர்ந்தவர் இல்லை என்று சொல்லியிருக்கின்றன.




ஆனால் இன்றும் ஊடகங்கள் அவரது படத்தை வெளியிடும் போது "ஜெயிஷ் - இ - மொகமத்' பயங்கரவாதி அப்சல் குரு என்றே போடுகின்றனர். காவல் துறையோ, நீதிமன்றமோ சொல்லாத ஒன்றை ஊடகங்கள் சொல்கின்றன. அப்சலுக்கு எதிராக எந்த நேரடிச் சான்றும் இல்லை என்று நீதிமன்றம் சொல்கிறது. நீதிமன்றம் கண்டறிந்த உண்மைகளின்படி பார்த்தால் கூட, அப்சலை தண்டிக்க முடியாது.இதில் நீங்கள் சரப்ஜித்தின் வழக்கைப் பாருங்கள்.




இத்தகைய நீதி நம்மை நிலை குலைய வைக்கிறது. சரப்ஜித் பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வழக்கில், மனித உரிமையாளர்கள் மற்றும் சமூக அமைப்பினர் சரப்ஜித்தை விடுவியுங்கள் என்று வலியுறுத்துகின்றனர்... இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய அரசின் சார்பாக அதிகாரப் பூர்வமாகவே கோரிக்கை விடுக்கிறார்.




சரப்ஜித்தை மனித நேய அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுக்கிறார். நான் சரப்ஜித் விடுதலைக்கு எதிரானவன் அல்ல. அடிப்படையில் கருத்தியல் ரீதியாக, நான் மரண தண்டனைக்கு எதிரானவன்தான்.ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாக இருக்க உரிமை உண்டு. விசாரணையில் தவறு நடந்திருக்குமானால், அவர் விடுவிக்கப்பட வேண்டும்.




எல்லாம் சரிதான். ஆனால் இந்த இரட்டை அணுகுமுறைக்குத்தான் நான் எதிராக இருக்கிறேன். இங்கு நீங்கள் சரப்ஜித்தை மனித நேய அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறீர்கள். யாரை என்றால்.... அந்நாட்டின் நீதிமன்றம் அவருக்கு எதிராக வலுவான சான்றுகள் இருப்பதாகச் சொன்ன ஒரு மனிதரை. ஆனால் இங்கு அப்சல் என்று ஒரு மனிதர் இருக்கிறார். அவர் இந்த நாட்டில்தான் இருக்கிறார். இந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு எதிராக எந்த நேரடி சான்றும் இல்லை என்று சொல்கிறது.




சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் அவரை தண்டிக்கிறோம். அதைவிட கொடுமை என்னவெனில், இந்நாட்டின் உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால், இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக அப்சல் தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறது. ஒரு மனிதனைப் பலி கொடுப்பதின் மூலம் மக்களின் உணர்ச்சிகளை திருப்திப்படுத்த அது விழைகிறது.




சரப்ஜித்துக்கு வருகின்ற மனித நேய அடிப்படைகள் எங்கே போயின? ஏன் இந்த இரட்டை அணுகுமுறை?




நான் ஒவ்வொரு இடத்திலும் சொல்கிறேன்: இத்தகைய அநீதிகள் அனைத்தும் மக்களின் பெயராலேயே நிகழ்த்தப்படுகின்றன. இது ஒரு ஜனநாயக நாடு என்று உரிமை கோருகிறது. ஜனநாயகத்தில் அதிகாரம் மக்களின் கையில் இருக்கிறது. மக்கள் இது குறித்துப் பேச வேண்டும். எங்கள் பெயரில் இத்தகைய அநீதி நடப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது என மக்கள் சொல்ல வேண்டும். அதனால்தான் சொல்கிறேன். இந்த நாட்டில் நீதி உணர்வு கொஞ்சமேனும் மிச்சமிருந்தால், அப்சலை தண்டிக்கவே கூடாது.




அப்படி அவர் செய்யாத குற்றத்திற்காக, நிரூபிக்கப்படாத ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டால் - அது இந்திய ஜனநாயகத்தின் மீது படியும் என்றும் அழியாத கறையாகவே இருக்கும்.
 
Source:

__._,_.__
.

__,_._,___

No comments:

Six C's of Character - Yasir Fazaga