Search This Blog

Sunday, July 19, 2009

இட்லர் பாதையில்...

இட்லர் பாதையில்...
 
 பழ. நெடுமாறன்
 
 கோத்ரா இரயில் எரிப்பு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து குசராத்து மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட திட்டமிட்ட வன்முறையும், பெருக்கெடுத் தோடிய இரத்த ஆறும், குவிந்த பிணமலைகளும் இன்று நினைத்தாலும் நமது நெஞ்சங்களைப் பதறவைக்கின்றன.
 
2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் சங்கப்பரிவாரங்கள் நடத்திய இந்த அட்டூழியங்களின் விளைவாக ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,50,000 பேர்களுக்கு மேல் வீடு, கடை, தொழில் ஆகிய எல்லா வற்றையும் இழந்து ஏதிலிகளாகத் தெருவில் நின்று புலம்பினார்கள்.
 
நூற்றுக்கணக்கான முசுலீம்கள் பொடா சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டுப் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டனர். மேலும் பல ஆயிரம் முசுலீம்கள் தாங்கள் பிறந்து வாழ்ந்த மண்ணைவிட்டு வெளியேறினர்.
 
பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான முசுலீம்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. விசுவ இந்து பரிசத் தலைவர்கள் ஆணவமாகவும், அடங்காத களிப்புடனும் பின் வருமாறு கொக்கரித்தனர்.
 
""குசராத்தில் பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதை மற்ற மாநிலங்களிலும் செய்து பார்ப்போம்''
 
கோத்ரா இரயில் எரிப்பு முசுலீம்களின் சதி வேலை என இந்துத்வா கும்பல் திட்டமிட்டுப் பொய்ப்பிரச்சாரம் செய்தது. முதலமைச்சர் மோடி இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடையத்திட்டமிட்டுச், சட்டமன்றத்தைக் கலைத்து மறு தேர்தலைச் சந்திக்க ஆயத்தமானார்.
 
கலவரச் சூழ்நிலையில் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. சில மாதங்கள் தள்ளி வைத்தது. எனினும் இந்துத்வா வெறியைக் கிளப்பி அதன்மூலம் மோடி மறுபடியும் ஆட்சியைப் பிடித்தார். இதுவரை மக்களை ஏமாற்றி வந்த மோடிக் கும்பலின் மோசடித் திட்டங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.
 
இரயில்வே அமைச்சரான லல்லு பிரசாத் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பானர்ஜியை கோத்ரா இரயில் எரிப்பு நிகழ்ச்சி குறித்து விசாரணை நடத்த ஆணையிட்டார்.
 
நீதிபதி பானர்ஜியின் இடைக்கால அறிக்கை மோடியை முழுமையாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. ""இரயில் எரிப்பில் எத்தகைய சதியும் இல்லை. இது ஒரு விபத்து'' என அவர் அறிவித்துள்ளார். பெட்ரோல் ஊற்றி யாரோ சிலர் நெருப்பு வைத்ததாகவும் குசராத்துக் காவல்துறை கூறிய குற்றச்சாற்று அடிப்படை இல்லாதது எனப் பானர்ஜி கூறியுள்ளார்.
 
இவ்வாறு செய்வதற்குரிய சாத்தியமே இல்லை என்றும், உயிர் தப்பியவர்களில் ஒருவர்கூட அவ்வாறு குற்றம் சாற்றவில்லை என்றும், தீக்காயம் ஏற்பட்ட பயணிகளுக்கு செய்யப்பட்ட மருத்துவச் சோதனையின் போது அவர்களில் எவருக்கும் உடலின் கீழ்ப்பாகத்தில் காயம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
இந்நிகழ்ச்சி குறித்துத் தனியாக விசாரணை செய்த ஹஸார்ட்ஸ் மையம் என்னும் அமைப்பும் இவ்வாறே கருதுகிறது. இக்குழுவில் பல தொழில் வல்லுநர்கள் பங்கேற்றார்கள். தீவிர விசாரணைக்குப் பிறகு இவர்களும் இது ஒரு விபத்தே என்று கூறியுள்ளார்கள்.
 
தங்களது பொய்ம்மை முகமூடி கிழிக்கப்பட்டதனால் கடுங்கோபம் கொண்ட சங்கப்பரிவாரம் நீதிபதி பானார்ஜி மீது புழுதிவாரி இறைத்துள்ளது.
 
ஆனால் நீதிக்கும் நேர்மைக்கும் பேர்போன நீதிபதி பானர்ஜி மாட்டுத் தீவன வழக்கில் லல்லுவுக்குப் பிணை (ஜாமீன்) கொடுக்க மறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இட்லர் வழி:
 
மோடிக் கும்பல் இட்லரின் வழியை அப்படியே பின்பற்றிக் குசராத்தில் வெறித்தாண்டவமாடியது.
 
1934ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5ஆம் தேதி செர்மானிய மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை எதிர் நோக்கியிருந்தனர். இட்லரின் நாஜிக் கட்சிக்கு கம்யூனிஸ்டுகள் வலிமையான போட்டியாக விளங்கினர்.
 
ஆனால் எதிர்பாராத விதமாக பிப்ரவரி 27ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. யார் தீ வைத்தது என்பது தெரியாத நிலையில் கம்யூனிஸ்டுகள் மீது இட்லர் கும்பல் பழி சுமத்தியது. அதை யொட்டி நாடெங்கும் கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகங்களை இட்லரின் எஸ்.எஸ். படையினர் தாக்கினார்கள். யூதர்களுக்கு எதிரான நரவேட்டை நடத்தப்பட்டது.
 
அந்தக் கலவரச் சூழ்நிலையில் இட்லரின் நாஜிக்கட்சி வெற்றிபெற்றது. அதே வழியைப் பின்பற்றி மோடி கும்பல் கோத்ரா இரயில் எரிப்பு நிகழ்ச்சிக்கு முசுலீம்கள் மீது பழிபோட்டு அவர்களைக் கொன்று குவித்துச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டது.
 
இன்று நேற்றல்ல நீண்டகாலமாகவே இட்லரைத் தங்களது வழிகாட்டியாக சங்கப்பரிவாரம் கொண்டுள்ளது. 1938ஆம் ஆண்டில் ""காவி சுவஸ்திகா'' என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவரான குருஜி கோல்வால்கர் எழுதிய நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
 
""தனது இனம், கலாச்சாரம் ஆகியவற்றின் தூய்மையைப் பாதுகாத்துக் கொள்ளத் தனது நாட்டிலிருந்து செமிட்டிக் இனத்தைச் சேர்ந்த யூதர்களைச் செர்மனி விரட்டியடித்தது. இனப் பெருமிதத்தின் உச்சக்கட்டமாக இது நிகழ்த்தப்பட்டது. அடிப்படையாக வேறுபட்ட இனங்களும் கலாச்சாரங்களும் இணைந்து வாழ முடியாது. ஏதாவது ஒன்று அழிந்தால்தான் மற்றொன்று தலையெடுக்க முடியும்.
 
இதற்கு செர்மனி மிகச் சிறந்த முறையில் வழிகாட்டியுள்ளது. இந்தப் பாடத்தை இந்துஸ்தானைச் சேர்ந்த நாம் தெளிவாகப் புரிந்துகொண்டு அதன்மூலம் ஆதாயம் அடைய வேண்டும்.''
 
இட்லரும் கோல்வால்கரும் ஒரே அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட பாசிஸ்டுகள். இட்லர் யூதர்களை வேட்டையாடினார். இவர்கள் முசுலீம்களையும் கிறித்துவர்களையும் வேட்டையாடுகிறார்கள்.
 
நீதிபதி பானர்ஜி அறிக்கைக்குப் பிறகாவது இந்து பாசிஸ்டுகளின் உண்மை உருவத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட தென்செய்தி, மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.
 
தென்செய்தி, 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை  600 004. தொலைபேசி : 914424640575, தொலைநகலி : 914424953916
 
 பழ. நெடுமாறன்

No comments:

Six C's of Character - Yasir Fazaga