Search This Blog

Wednesday, August 08, 2007

அமெரிக்க அதிபர் வேட்பாளர்: மக்கா மற்றும் மதீனாவை அழிக்கவேண்டும்

அமெரிக்க அதிபர் வேட்பாளர்: மக்கா மற்றும் மதீனாவை அழிக்கவேண்டும்


சனி, 04 ஆகஸ்ட் 2007
அமெரிக்கா மீதான தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டுமெனில் இஸ்லாமியப் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டு போட்டுச் சுவடின்றி அழிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் பிரமுகர் டாம் டான்க்ரெடோ என்பவர் கூறியுள்ளார்.
அமெரிக்க செனட்டில் கொலரோடா மாநிலப் பிரதிநிதியாக இருக்கும் இவர் நேற்று (3/8/2007) AFP நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இவர் அமெரிக்கா மீதான தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அவர்களின் புனிதத் தலங்களான மக்கா, மதீனா இரு நகரங்களையும் குண்டுமழை பொழிந்து அழிப்பது தான் தமக்குச் சரியாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.
இவ்வாறு இவர் கூறியுள்ளது உலக முஸ்லிம்களிடையேயும் அமெரிக்க அரசின் உயர் அலுவலர்களிடையேயும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. டாம் டான்க்ரடோவின் இந்தப் பேட்டி வெளியாகிய சில மணிநேரங்களிலேயே அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கும் டான்க்ரெடோவின் இந்தப் பேச்சுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். அவர் இவ்வாறு கூறியுள்ளது கண்டிக்கத் தக்கது என்றும் பைத்தியக்காரத்தனமான உளறல் (reprehensible and absolutely crazy) என்றும் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கெதிரான அமெரிக்காவின் போரில் மிகச் சிறந்த ஒத்துழைப்பை நல்கி வரும் மத்தியகிழக்கு நாடுகளையும் பல முஸ்லிம் நாடுகளையும் அமெரிக்கா ஒருபோதும் பகைத்துக் கொள்ளவிரும்பாது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க இஸ்லாமியக் குழுமத்தின் (Council for American Islamic Relations) செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஹூப்பர், இப்படிப்பட்ட பொறுப்பற்ற ரவுடித்தனமான பேச்சுகள் பொது வாழ்வில் போட்டியிட விரும்பும் எவருக்கும் பொருந்தாதவை என்று தெரிவித்தார். இது குறித்து முறையான புகார்கள் தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயங்கராவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களுக்கு இனி முஸ்லிம் நாடுகள் வழங்கி வரும் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Sunday, August 05, 2007

அர்ஜுன் சம்பத்

கடந்த இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது இந்தியாவுக்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு, ஒரு முக்கியமான பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதுவரை தமிழ் மொழி பேசுபவர்களுக்கும் (அதிலும் வடக்கே வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள், தெற்கே வாழும் இந்தியத் தமிழர்கள் அல்ல...) சிங்களமொழி பேசுபவர்களுக்குமான பிரச்னையாகவே இலங்கைப் பிரச்னை பார்க்கப்பட்டு வந்தது. இப்போது இலங்கையின் வடக்குப் பகுதிகளிலுள்ள இந்துமதக் கோயில்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டு, அதையே தங்கள் ராணுவ முகாமாகப் பயன்படுத்தி வரும் வேளையில், இந்தியாவில் உள்ள இந்துமத அமைப்புகளும் இந்துமதக் கட்சிகளும் இப்பிரச்னையைக் கையிலெடுத்துக் கொள்ள, இலங்கைப் பிரச்னை என்பது இப்போது ஒரு மதப் பிரச்னையாக புதுவடிவம் பெற்றுள்ளது.

இப்போது இந்த விவகாரம் தொடர்பாக, இந்து அமைப்புகள் ரோட்டில் இறங்கிப் போராட முடிவெடுத்துள்ளன. அதற்கு நிச்சயம் பா.ஜ.க.வின் ஆதரவும் இருக்கும்.

‘இலங்கையில் இந்து மத வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமித்து முகாம் அமைத்திருக்கும் இலங்கை ராணுவம், உடனே வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 10_ம்தேதி திருச்சி ரயில் நிலையம் முன்பாக, பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்’ என்று அறிவித்துள்ளார், இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான அர்ஜுன் சம்பத். அவர்களுடன் பாரதிய ஃபார்வர்ட் ப்ளாக், தனித்தமிழர் சேனை ஆகிய அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்கின்றன. நாம் அர்ஜுன் சம்பத்திடம் பேசினோம்.

எதற்காக இப்போது இந்தப் போராட்டம்?

“இலங்கையிலுள்ள தமிழ்ப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்காக இங்கே உள்ள பழ நெடுமாறன் போன்றவர்கள் முயற்சி எடுத்து சேமித்து வைத்திருக்கும் ஏறத்தாழ ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே பல தமிழ் அமைப்புகள் இது சம்பந்தமாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு போயும் கூட, இந்திய அரசு மௌனம் காக்கிறது.

இலங்கையில் ராணுவத் தாக்குதல்களால் அகதிகளாகிப் போயிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கங்கள் மூலமாகவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும், இந்திய அரசு அதற்கு அனுமதிக்க மறுக்கிறது. இலங்கை அரசு அனுமதிக்காமல் இருப்பதில் அர்த்தமிருக்கிறது. இந்திய அரசே அனுமதி மறுப்பது வியப்பாக இருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக கொடுப்பதை விரும்பவில்லை என்றால், அங்கே மாதா அமிர்தானந்தமயி, ரவிசங்கர் குருஜி போன்றவர்கள் நடத்தும் இந்துத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவாவது அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். ஏனெனில், அந்தப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஒரு வருஷம் ஆகப் போகிறது. அந்த மருந்துகள் காலாவதியாகும் சூழ்நிலையிலிருக்கிறது. இது மனித நேயத்தோடு செய்ய வேண்டிய காரியம். ஆனாலும்கூட, வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் இலங்கை அரசின் கை ஓங்கியிருப்பதால் நம் சகோதரர்கள் அங்கே செத்து மடிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனிதநேயமற்ற செயல். இவற்றையெல்லாம் கண்டித்துத்தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. ஆகவே, இந்து மத உணர்வுள்ளவர்களும் தமிழ் மொழி உணர்வுள்ளவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்!’’

தமிழ் ஈழம் கேட்கும் போராட்டக் குழுவுக்கு ஆதரவாக நீங்கள் இப்போது களம் இறங்கியதன் அவசியம் என்ன?

‘‘இதுவரை இலங்கைப் பிரச்னை என்பது மொழிப்பிரச்னையாகத்தான் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அது பௌத்த மதவாதிகளாக இருக்கக் கூடிய சிங்களர்களுக்கும் இந்துக்களாக இருக்கும் தமிழர்களுக்குமான பிரச்னை. தமிழர்கள் பௌத்தர்களாகவோ, முஸ்லிம்களாகவோ மாறிவிட்டால், அங்கே பிரச்னை இல்லை. அங்கே இருக்கும் பௌத்த பிட்சுக்களின் கைப்பாவையாகத்தான் இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பௌத்த பிட்சுக்களின் ஆதரவு இல்லையென்றால், உடனே அங்கே ஆட்சி கவிழ்ந்துவிடும். அந்தளவுக்கு ஆட்சியில் அவர்களின் கை நீண்டிருக்கிறது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை அரசு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் பாகிஸ்தானுடன் நல்லுறவு வைத்து, பாகிஸ்தானின் ராணுவ ஒத்துழைப்பைப் பெற்றிருக்கிறார்கள். அங்கே ஐ.எஸ்.ஐ. நடவடிக்கைகள் அதிகரித்து விட்டன. ஐ.எஸ்.ஐ.யின் கைப்பாவையாக சில புத்த மத சாமியார்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிடியில்தான் இலங்கை அரசு இருக்கிறது. அதனால் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. சர்வதேசப் பார்வையில் விடுதலைப்புலிகளை, தனி ஈழம் கேட்போரை _ சுதந்திரம் கேட்கும் மக்களாகப் பார்க்காமல் ராஜிவ் காந்தி கொலை என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நடந்து முடிந்துபோன துக்கமான ஒரு விஷயம். எனவே, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையில் வசிக்கும் இந்துக்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்கவில்லையென்றால், அது மனித நேயமற்ற செயல்.

இதுவரை இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்துப் போராடிய அமைப்புகள் எல்லாம், நாத்திக அமைப்புகளாகவும் பிரிவினை அமைப்புகளாகவும் இருந்ததால், இந்தப் பிரச்னை தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே சுருங்கி விட்டது. நாங்கள் முயற்சி எடுத்து சிவசேனா தலைவரின் கவனத்துக்குக் கொண்டு போனதும் பால் தாக்கரே ஆதரவு தெரிவித்திருக்கிறார். கடந்த முறை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூட்டியிருந்த கூட்டத்தில் நான் பேசி, ‘இது இந்துக்களின் பிரச்னை. அங்கே தனிநாடு உருவானால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது. அங்கே மதரீதியாகவும் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்’ என்று நிலைமையை விளக்கியதும் இந்துமகாசபையின் ஆதரவும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்துமகாசபையின் தலைவர் சுவாமி சக்கரவர்த்தி உடனே ‘இலங்கையில் இந்துக் கோயில்களிலிருந்து ராணுவத்தை வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கக் கேட்டு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.’’

தனி ஈழம் அமைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

‘‘இலங்கை அரசின் துணைத்தூதரகத்தில் அம்சா என்று ஒரு முஸ்லிம் அதிகாரியை நியமித்ததும், அவர் இங்கே இருக்கக் கூடிய முஸ்லிம் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, இலங்கைப் பிரச்னையில் நாம் இலங்கை அரசுக்கு ஆதரவான முடிவை எடுக்க வேண்டும் என்று பேசி காரியங்கள் செய்து வருகிறார். செஞ்சோலையில் அநாதைக் குழந்தைகள் இல்லத்தின் மீது ராணுவத் தாக்குதல் நடந்ததைக் கண்டித்துத் தீர்மானம் போட்ட போது, உடனே அதை மறுத்து அறிக்கை அனுப்பிக் கொண்டிருந்தார் அந்த அதிகாரி. அவர், ஐ.எஸ்.ஐ. தொடர்புடையவர். வேண்டும் என்றே தமிழ்நாட்டிலிருக்கும் முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இலங்கை அரசுக்கு ஆதரவாக லாபி செய்கிறார். அதற்காக நியமிக்கப்பட்ட அவரும் எல்லா ஜமாத்தையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். முஸ்லிம் இனவாத அமைப்புகளோடும் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் இந்தவிஷயத்தில் நாடெங்கிலும் இருக்கக் கூடிய இந்துக்கள் ஒன்றுகூடி, அங்கே தமிழ் ஈழம் உருவாவதை ஆதரிக்க வேண்டும் என்று செயல்படுகிறோம். இந்திய மக்களுக்கு எதிராகச் செயல்படும் தூதர் அம்சாவை மாற்ற வேண்டும். அந்தத் தூதரகத்தை தமிழ் ஈழத் தூதரகமாக மாற்ற வேண்டும் என்று ஓராண்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தினோம். அதன் பின்னர், ஸ்ரீரங்கம் பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் இப்பிரச்னையில் கவனம் செலுத்துகிறோம். விரைவில் பா.ஜ.க., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் இந்தப் போராட்டத்தில் இணைக்கப் போகிறோம். இது ஓர் இந்துப் பிரச்னை என்று பிரசாரம் செய்யப் போகிறோம்.’’

இதில் மத அடிப்படை எப்படி வருகிறது?

‘‘தமிழ்நாட்டில் இந்தப் பிரச்னையைப் பேசியவர்கள் எல்லாருமே நாத்திகர்களாகப் போய்விட்டதால், வட இந்தியர்கள் எல்லாம் இதை நாத்திகர்களின் பிரச்னை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேல் கொஞ்சம் புரிதல் உள்ளவர்கள், இதனை தமிழர்களின் _ தமிழ் மொழி பேசுபவர்களின் பிரச்னை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உலகெங்கும் இருக்கக் கூடிய இந்துக்களின் பிரச்னை. இன்னும் பலர் இதனை ராஜிவ் காந்தியைக் கொன்றவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது இன்றுள்ள பிரச்னை அல்ல. விவேகானந்தர் இந்து மதப் பிரசாரத்துக்காக அங்கே போனபோதே பௌத்தர்கள் அதனை எதிர்த்திருக்கிறார்கள். அங்கே நடப்பது ஒரு மதத்திணிப்பு. இதனை தெளிவுபடுத்துவதும் உலக அளவிலான ஆதரவை ஈர்ப்பதுமே எங்களின் வேலை!’’ என்றார்.

Wednesday, August 01, 2007

கோவை குண்டுவெடிப்பு: பாஷா உள்பட 153 பேர்

கோவை குண்டுவெடிப்பு: பாஷா உள்பட 153 பேர்குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஆகஸ்ட் 01, 2007 கோவை:

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா தலைவர் பாஷா உள்பட 153 பேரை நீதிமன்றம் இன்று குற்றவாளிகளாக அறிவித்தது. அதே நேரத்தில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார். கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 58 பேர் கொல்லப்பட்டனர், 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பாஜக அலுவலகம், ரயில் நிலையம், சண்முகம் ரோடு, கனி ராவுத்தர் வீதி ஆகிய இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. பாஜக தலைவர் அத்வானி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவிருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களிலும் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் அப்ரூவராக மாறிவிட்டார். இந்த வழக்கை விசாரிக்க கோவை மத்திய சிறை வளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சுமார் 2,000 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். போலீசார் 17,000 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். கடந்த 9 ஆண்டுளாக நடந்து வந்த விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று முதல் படிப்படியாக தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை முதல் கட்டமாக மதானி, பாஷா உள்பட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து 15 பேர் கொண்ட குழுவாக மொத்தம் 166 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான தீர்ப்பை நீதிபதி வாசித்தார். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி, பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரி, தாஜூதீன், நவாப் கான், பாசிக், முகம்மத் பாசிக், முகம்மது அலி கான் உள்ளிட்ட உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவர்கள் மீதான கிரிமினல் சதித் திட்டம், மத ஒற்றுமையை சீர்குலைத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி அறிவித்தார். இவர்களில் பாட்ஷா உள்ளிட்ட 73 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த சதித் திட்டம், ஆயுதங்கள் பதுக்கியது உள்ளிட்ட முக்கியக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீது சுமத்தப்பட்ட சதித் திட்டம், மத வெறியைத் தூண்டும் பேச்சு, வெடிபொருட்களை கேரளாவிலிருந்து கோவைக்குக் கொண்டு வந்தது உள்ளிட்ட புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார். மேலும் 5 பேருக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்த நீதிபதி உத்திராபதி அவர்கள் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 6ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். அன்றைய தினமே அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை விவரமும் வெளியிடப்படவுள்ளது. மொத்தம் உள்ள 168 பேரில் ஒருவர் விசாரணையின் போதே இறந்து விட்டார், ஒருவர் அப்ரூவராகி விட்டார்.

இதனால் மிச்சமுள்ள 166 பேரில் இன்று 5 பேர் தவிர மற்ற 161 பேர் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. இன்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ள 80 பேரும் ஆகஸ்ட் 6ம் தேதி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 9 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் நான்கு பேர் சிறு குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. தீர்ப்பையொட்டி கோவை மற்றும் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவை நகருக்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது.

அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. குறிப்பாக கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் படு தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. நகரில் உள்ள பேருந்து நிலையங்கள், பெரியகடை வீதி, ஒப்பணகார வீதி உள்ளிட்ட முக்கிய இடங்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையம், பாலங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. கோவை நகரின் பாதுகாப்புக்காக அண்டை மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களிலிருந்தும் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ம.பி: 9ம் வகுப்பு வரலாறு பாடத்தில் இந்துத்வா!

ம.பி: 9ம் வகுப்பு வரலாறு பாடத்தில் இந்துத்வா!

ஆகஸ்ட் 01, 2007 போபால்: பாஜக ஆட்சிப் பொறுப்பின் கீழ் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் முஸ்லீம் மன்னர்கள் குறித்த செய்திகள் குறைக்கப்பட்டு, இந்து மன்னர்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அதிக அளவில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில்தான் இது நடந்துள்ளது. சண்டல் மகாராஜா ராணி துர்காவதி குறித்து அதிக பக்கங்களில் பாடம் உள்ளது. அதேசமயம், முகலாய சக்கரவர்த்தி அக்பர் குறித்து மிகக் குறுகிய அளவிலேயே பாடம் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மகாராணா பிரதாப் சிங், சிவாஜி ஆகியோர் குறித்தும் விரிவான அளவில் பாடம் உள்ளது. இதுகுறித்து பாடப் புத்தகத் தயாரிப்பு குழு உறுப்பினர்களில் ஒருவரான பாகீரத் கும்ராவத் கூறுகையில், முகலாய மன்னர்கள் நம் நாட்டுக்குள் ஊடுறுவி ஆக்கிரமிப்பு செய்தவர்கள். அவர்கள் குறித்த உண்மையை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் மூலம் நமது வரலாற்றை மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள். சிவாஜியின் வீர தீர பராக்கிரத்தை மாணவர்களுக்கு விரிவாக சொலல் வேண்டியது அவசியம் என்றார். சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இந்து மத நம்பிக்கைகள் குறித்த பாடங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி கூறுகையில், பாஜக சிறுபான்மை விரோத கட்சி. எனவே இந்தப் பாடங்களை வரலாற்றுப் பாட நூலிலிருந்து நீக்க வேண்டும். ம.பி. மாநிலத்தில் தங்களது வரலாற்றை மாணவர்களுக்குப் போதிக்க அவர்கள் முயலுகிறார்கள் என்றார் காட்டமாக. இதேபோல எட்டாவது வகுப்புப் பாடப் புத்தகத்தில், நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து எட்டு பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து ஒரு வரி செய்திதான் உள்ளது. இதுவும் காங்கிரஸை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

Tuesday, July 31, 2007

மீண்டும் படரும் காவி இருள்

மீண்டும் படரும் காவி இருள்
மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவும்; டெல்லி மாநகராட்சித் தேர்தல் மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறிக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பத்திரிகைகள் குறிப்பிட்டன. உத்திரப்பிரதேச தேர்தல் தோல்வியை வைத்து இந்துத்துவ அரசியல் பின்னடைவுக்கு ஆளாகிவிட்டதாகவும் சில அறிஞர்கள் ஆய்வுரை எழுதக்கூடும். இந்த வெற்றி தோல்விகள் எனப்படுபவையெல்லாம் தேர்தல் அரசியல் குறித்த மக்களுடைய கண்ணோட்டத்தைத்தான் வெளிப்படுத்துகின்றனவேயன்றி, இவை இந்து பாசிசக் கும்பலின் பலம் அல்லது பலவீனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் அல்ல.
தேர்தல் அரசியலின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால், சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் திரட்டப்பட்ட ஒரு பாசிச அமைப்பாக சங்கப் பரிவாரம் இருக்கிறது. தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அறைக்குள் முடங்கிக் கொண்டு, அறிக்கை அரசியல் நடத்தும் பிற முதலாளித்துவக் கட்சிகளைப் போல அது முடங்கிக் கொள்வதில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பதவிச் சண்டையாலும், உட்கட்சிப் பூசல்களாலும், பாரதிய ஜனதாக் கட்சியே முடங்கி விட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் கணித்தன. நாடாளுமன்ற அரசியல் சீரழிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, கட்டுப்பாடான, ஒழுக்கமான கட்சியாகத் தன்னை சித்தரித்துக் கொள்ள முயன்றதில்தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததேயன்றி, அத்தகைய சீரழிவுகள் இப்பாசிச கும்பலின் பலத்தை குன்றச் செய்துவிடவில்லை.
மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, காங்கிரசு கூட்டணி அரசின் மீது மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்துவரும் இன்றைய சூழலில், இத்தகைய மக்கள் பிரச்சினைகள் எதற்காகவும் போராடாத அதேநேரத்தில், தன்னுடைய பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை சங்கப் பரிவாரம் முடுக்கி விட்டிருக்கிறது. சமீபத்திய பல நிகழ்வுகள் இதனை நிரூபிக்கின்றன.
மதம் மாறிக் காதலிக்கும் நபர்களை காவி வெறியர்கள் கடந்த காலங்களில் ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. குஜராத்தில் தனது முசுலீம் கணவனின் உயிரைக் காக்க முனைந்த "குற்றத்திற்காக' நடுவீதியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இந்துப் பெண்ணான கீதா பென்னின் கதை நாம் அறிந்ததுதான்.
சமீபத்தில் ம.பி. மாநிலத் தலைநகர் போபாலில் அத்தகைய அபாயத்திலிருந்து மயிரிழையில் ஒரு காதல் ஜோடி தப்பியது. முசுலீம் மதத்தைச் சேர்ந்த உமரும், இந்து மதத்தைச் சேர்ந்த பிரியங்காவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடுமையான எதிர்ப்பு உருவாகக் கூடும் என அஞ்சி மும்பைக்குத் தப்பியோடி, உமர் தன்னைச் "சுத்திகரிப்பு' சடங்கு செய்து கொண்டு, இந்துவாக மதம் மாற்றி கொண்டார். இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

உடனே இந்த "சர்வதேச'ப் பிரச்சினைக்காக பஜ்ரங் தள் களத்தில் (கலவரத்தில்) இறங்கியது. உமரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போபாலில் உமரின் மீது ஆள்கடத்தல் குற்றம் பதிவு செய்யப்பட்டது. உமரின் அண்ணன் போலீசால் கைது செய்யப்பட்டார். மும்பை உயர்நீதி மன்றத்தில் பாதுகாப்பு கோரி, உமரும், பிரியங்காவும் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களுக்கு மும்பையிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உமரும், பிரியங்காவும் போபாலுக்குள் நுழையக் கூடாதென்றும், மீறி நுழைந்தால் உயிர் மிஞ்சாதெனவும் பஜ்ரங் தள் அவர்களுக்கு மிரட்டல் விடுத்தது. ஏப்ரல் 12 அன்று போபாலில் இப்பிரச்சினைக்காக பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்தது. மேலும் இவ்வாறு "ஆசை காட்டி மதமாற்றம் செய்யும்' முசுலீம்களிடமிருந்து இந்துப் பெண்களைக் காப்பதற்காக, "இந்துப் பெண்கள் பாதுகாப்புக் கமிட்டி' என்றொரு அமைப்பையும் உருவாக்கியுள்ளது. ""பெண்கள் ஆண்களோடு இரு சக்கர வண்டிகளில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியக் கூடாது. நவீன ஆடைகள் அணியக் கூடாது'' என்று தாலிபான்களை விஞ்சும் விதத்தில் பல "கட்டுப்பாடுகளை'யும் அறிவித்திருக்கிறது, இந்த அமைப்பு. இவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அம்பலப்படுத்திய ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறது, இந்து பாசிச குண்டர் படை.
1998ஆம் ஆண்டு ஒரிசாவிலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் எனும் பாதிரியார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதும், குஜராத்தில் பைபிள்கள் எரிக்கப்பட்டதும், தேவாலயங்கள் தாக்கப்பட்டதும், கன்னியாஸ்திரீகள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும் பழைய கதைகள் அல்ல. அன்று பா.ஜ.க. ஆட்சியிலிருந்த காரணத்தினால் மட்டும் அவை நடந்துவிடவுமில்லை.
ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஜெய்ப்பூரில் வால்ட்டர் மசி எனும் பாதிரியாரின் வீடு புகுந்து நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் தொலைக்காட்சிகளில் வெளிவந்து வடமாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தாக்குதலை சந்தர்ப்பவசமாக படமாக்கிய ஆஜ்தக் செய்தி நிறுவனத்தின் நிரூபர் சரத்குமார், ""அப்பாதிரியாரின் பரிதாபக் கதறல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு குரூரத்தை, உதவிக்கு ஆளில்லாத ஒற்றை மனிதனை இத்தனை பேர் ஈவிரக்கமின்றித் தாக்கியதை இது வரை நான் கண்டதேயில்லை'' என மனமுடைந்து கூறினார்.
ஊடகங்களில் வெளிவந்த இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மே 6ஆம் தேதியன்று மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் மாவட்டத்தின் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் பட்டப் பகலில் நடுவீதியில் இரு கிறித்தவ நிறுவன ஊழியர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டனர். அடித்தவர்களில் ஒருவரைக் கூடக் கைது செய்யாத போலீசு, மதமாற்றம் செய்ய முயன்ற "குற்றத்திற்காக' குற்றுயிராகக் கிடந்த இருவரையும் கைது செய்தது.
அதேநாளில் கர்நாடகாவில் கோலார் தங்க வயலுக்கு அருகிலுள்ள நரசப்பூரில் வழிபாட்டை முடித்துக் கொண்டு தேவாலயங்களிலிருந்து வெளியில் வந்த கிறித்தவர்கள் தாக்கப்பட்டனர். பத்து நாட்களில் தேவாலயம் மூடப்பட வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மே 3ஆம் தேதியன்று சத்திஸ்கரில் பிரார்த்தனைக்காக கூடிய கிறித்தவர்களை வீடு புகுந்து தாக்கிய பஜ்ரங் தள் வெறியர்கள், அவர்களது கை, கால்களை முறித்தனர். மே 1ஆம் தேதியன்று ஆக்ராவில் ஒரு கிறித்தவப் பள்ளி தாக்கப்பட்டது.
···
ஆர்.எஸ்.எஸ்.இன் ""கண்காணிப்பு'' இப்பொழுது கல்விக் கூடங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டது. மே 9ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவில் மாணவர்களின் ஓவியங்கள் ஆண்டுத் தேர்விற்காக ஆசிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் பி.ஜே.பி. குண்டன் நீரஜ் ஜெயின் என்பவனுடைய தலைமையில் அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், மாணவர் சந்திரமோகன் வரைந்த ஓவியங்கள் இந்துக் கடவுள்களையும், இயேசுவையும் அவமதிக்கும் விதமாக இருப்பதாகக் கூறி அவரைத் தாக்கினர்.
இங்கேயும் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை. மாறாக தாக்கப்பட்ட சந்திரமோகன் "மத விரோதத்தைத் தூண்டினார்' எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு துணைவேந்தர் இத்தாக்குதல் பற்றி மௌனம் சாதிக்க, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டங்களுக்கு போலீசு அனுமதி மறுக்கவே, மாணவர்கள் இந்துப் பாசிசத்தை அம்பலப்படுத்துமுகமாக காமரசத்தை வெளிப்படுத்தும் பழங்கால இந்திய ஓவியங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
சந்திரமோகன் தாக்கப்படும்போது அமைதி காத்த துணைவேந்தர், இப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். அக்கண்காட்சியை மூட உத்தரவிட்டார். துணைவேந்தரின் நடவடிக்கையை மாணவர்கள் எதிர்த்தனர். மாணவர்களை ஆதரித்த குற்றத்துக்காக கல்லூரி முதல்வர் சிவாஜி ராவ் பணிக்கர் மே 12ஆம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். இக்கண்காட்சிக்கு வந்த பி.ஜே.பி. உறுப்பினர்கள், ""உங்களுடைய நிர்வாணப் படங்களை நாங்கள் மாட்டுவோம்'' என்று கல்லூரி மாணவிகளை மிரட்டினர். தற்பொழுது பல்கலைக்கழகத்தின் கலை வரலாற்றுத் துறையே இழுத்து மூடப்பட்டு விட்டது. கைது செய்யப்பட்ட மாணவர் சந்திரமோகன், நாடு தழுவிய எதிர்ப்பைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போல உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரதிய ஜனதா ஒரு குறுந்தகடை வெளியிட்டது. சங்கப் பரிவாரம் நடத்திவரும் அருவறுக்கத்தக்க முசுலீம் எதிர்ப்பு வெறி பிரச்சாரத்தின் அனைத்து முடை நாற்றமும் "பாரதத்தின் குரல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறுந்தகட்டில் நாடக வடிவில் பச்சையாகவே பதிவாகியிருக்கிறது.
""இந்துக்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சும்மாயிருப்பார்கள். ஆனால், முசுலீம்கள் ஐந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு 35 நாய்களைப் பெற்றெடுத்து நாட்டையே முசுலீம் நாடாக்கி விடுவார்கள்.'' (முசுலீம்கள் கூறுவது போன்ற காட்சியில்) ""ஹா! ஹா! ஹா! இந்துப் பெண்கள் நம்மிடம் சிக்கிக் கொண்டு திணறும் பொழுது கத்திக் கூச்சலிடுவார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். ஹா! ஹா! ஹா''""பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போடவில்லையென்றால் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும். இந்த நாடு அடிமையாகி விடும். உங்கள் நெற்றியில் உள்ள திலகங்களை அழித்துவிட்டு நீங்கள் தாடி வளர்க்க வேண்டியிருக்கும்.''
தேர்தலுக்கு முன் இந்தக் குறுந்தகடுப் பிரச்சினையையொட்டி பயங்கரமாகச் சண்டமாருதம் செய்த தேர்தல் ஆணையம், இதற்காக எந்தத் தலைவரையும் கிரிமினல் வழக்கில் கைது செய்யவில்லை என்பதையும் காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஆரம்பகாலக் கூச்சலுக்குப் பின் மூச்சு விடவும் இல்லை என்பதையும் நாம் இங்கே நினைவிற் கொள்ளவேண்டும்.···குஜராத் கலவரத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடி, அங்கே ஒரு "ராம ராஜ்ஜியத்தை' நிறுவி விட்டான் என்றால் அது மிகையல்ல. குஜராத் கலவரத்தில் தமது உடைமைகளையும், உறவினர்களையும் இழந்து விரட்டியடிக்கப்பட்ட முசுலீம்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இன்றும் தங்கள் வீடுகளுக்கு திரும்பச் செல்ல முடியவில்லை. இந்துக் குடியிருப்புகளும், முசுலீம் சேரிகளும் குஜராத்தில் தனித்தனித் தீவுகளாக பிரிக்கப்பட்டு விட்டன. படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கே வெளிப்படையாக உலவுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களும் வழக்குத் தொடுத்தவர்களும் பதுங்கி வாழ்கிறார்கள். பாபு பஜ்ரங்கி, நீரஜ் ஜெயின் போன்ற காலிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சமூக, கலாச்சாரக் காவலர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். குஜராத் கலவரம் குறித்து பொதுவான மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட "பர்ஜானியா' என்ற திரைப்படத்தைக்கூட குஜராத்தில் வெளியிட முடியவில்லை.
உத்திரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெளியிட்ட குறுந்தகட்டில் ஒரு வசனம் வருகிறது. ""தான் இந்துவென்று அழைத்துக் கொள்ளவே அஞ்சவும், நம்மை ஆத்மராமென்றோ, ராதாகிருஷ்ணன் என்றோ, சோகன்லால் என்றோ, மோகன்லால் என்றோ அழைத்துக் கொள்ளவே அஞ்சும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாம் எங்கு பார்த்தாலும் அப்பாஸ்களும், நக்விக்களும், ரிஜ்விக்களும், மௌல்விக்களும் மட்டுமே இருப்பார்கள்.''
எதிர்காலத்தில் நடைபெறப் போவதாக ஊதிப் பெருக்கப்படும் இந்த கோயபல்சுகளின் பொய் பிரச்சாரம் நேரெதிரான விதத்தில் குஜராத்தில் கண்கூடாகக் காணக் கிடக்கிறது. இன்று அங்கே ஜீகன்புராவில் வசிக்கும் முசுலீம்கள் நாராயண்புரா எனும் இந்துப் பகுதிக்கு வேலைக்குச் செல்வதில்லை. செல்ல நேர்ந்தாலும், தாங்கள் முசுலீம் என்பதை சொல்லிக் கொள்வதில்லை. நாளை இந்நாடே இவர்களின் குரு கோல்வால்கர் கண்ட ஆரியக் கனவாக, மோடி நிதர்சனமாக்கிய குஜராத்தாக மாறுமேயானால், அங்கே முசுலீம் என்று மட்டுமல்ல, பகுத்தறிவாளன், சாதி மறுப்பாளன், மொழி உணர்வாளன், கம்யூனிஸ்டு என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. வீதிதோறும் பஜ்ரங்கிகளும், ரிதம்பராக்களும் காந்தி கண்ட ராமராஜ்ஜியத்தின் தருமகர்த்தாக்களாக நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் அதிகாரம் செய்வார்கள்.
மறுகாலனியாக்கக் கொள்கைகளின் கோரத் தாக்குதல் மக்கள் மத்தியில் தோற்றுவித்து வரும் அதிருப்தி அலையை விழுங்கிக் கொள்வதற்கு பார்ப்பன பாசிசம் தம் பதுங்கு குழியிலிருந்து மேலெழும்புகிறது. மக்களின் வெறுப்பை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டு ஆட்சி அமைக்குமானால், அந்த ஆட்சி இந்துத்துவத்தின் இன்னுமொரு ஆட்சி என்பதைவிட, குஜராத்தைப் போல, நாடே இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக மாற்றப்படும் ஆட்சியாக அமையும்.· அழகு

Six C's of Character - Yasir Fazaga