இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது. நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர்.
காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம். 17.08.1920-ல் காந்தியடிகள் மெளலானா சவுகத் அலியுடன் கிலாபத் இயக்கப் பிரச்சாரத்திற்காக இந்நகருக்கு வருகை தந்தார். இம்மாவட்டத்தின் கிலாபத் இயக்கத்தின் செயலாளர் வி.எஸ். முகம்மது இப்ராஹீம் தமிழிலும், டாக்டர் அப்துல் கபான் இந்துஸ்தானியிலும் வரவேற்புப் பத்திரம் படித்து அளித்தனர்.
மெளலவி சையத் முர்த்துஸா சாகிப், மதுரை வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் உடனிருந்தார்கள். கூட்டம் முடிந்து அன்று நள்ளிரவு காந்தியடிகளும், சவுக்கத்தலியும் திருச்சிராப்பள்ளி புகைவண்டி நிலையத்திற்குச் சென்றபோது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்களும், முஸ்லீம்களும், அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம் என்று முழக்கமிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியினால் காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்களிடையே பெரும் ஆதரவு பெருகியது.
கி.பி. 1921-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த கேரளா மாப்பிள்ளை முஸ்லீம்களைக் கைது செய்த ஆங்கிலேய அரசு அவர்களைக் காற்றுப்புகாதவண்ணம் சரக்குப் புகைவண்டியில் அடைத்து கோயமுத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளிச் சிறைகளுக்கு அனுப்பியது. இதில் பலர் மரணமடைந்தனர். இறந்தவர்களின் உடல்களை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் அடக்கம் செய்த சையத் முர்த்துஸா சாகிப் அவர்கள் தலைமையில் அன்ஜூமனே ஹிமாயத்தே இஸ்லாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உடனடியாக ஏற்படுத்திக் காஜாமலை அடிவாரத்தில் உள்ள இடுகாட்டில் (கபர்ஸ்தான்) நல்லடக்கம் செய்தார்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற திருச்சிராப்பள்ளி இஸ்லாமியர்களில் முக்கிய தலைவர்களின் தியாக வாழ்வைக் காண்போம்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட இஸ்லாமிய பிரமுகர்களை கீழ்காண்போம்.
வள்ளல் ந.மு. காஜாமியான் ராவுத்தர்
திருச்சி மாநகரில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பாலக்கரையில் ந.முகமது மியான் ராவுத்தர் அவர்களின் மகனாக 1880 ஆம் ஆண்டில் பிறந்தார். ந.மு.காஜாமியான் அவர்கள். அறிவுத்திறமை, உழைக்கும் ஆற்றல், கருணைத்தன்மை, மார்க்கப்பற்று, நாட்டுப்பற்று கொண்டவராக விளங்கிய இவர்கள் தந்தையார் செய்து வந்த தோல் பதனிடும் தொழிலையே கற்று அதில் தனது முழுத்திறனையும் பயன் படுத்தி உலக நாடுகளே அதிசயிக்கும் வண்ணம் பல புதுமைகளைப் புகுத்திப் பெருமை பெற்றவர்.
ஆட்டுத்தோலைப் பாடம் செய்யும்போதே செயற்கை வண்ணங்களைச் சேர்த்து அதை, இயற்கை வண்ணம் போல் மாற்றி, தோல் அழிந்தாலும், இறுதிவரை வண்ணம் குன்றாத ஒரு தனி ரக உற்பத்தியை இந்தியாவிலேயே முதன்முதலாகக் கண்டுபிடித்த நிபுணராக இவர் புகழ் பெற்றார்.
இளமையிலேயே தேச சுதந்திரத்தில் ஆர்வம் கொண்டு கதர் உடுத்துபவராகவும், காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று அக்காலத்தில் ரூ.50 ஆயிரம் செலவில் கதர் ஆலையைத் தோற்றுவித்து அதனால் ஏற்பட்ட மாபெரும் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் தேசப் பணியாற்றினார்.
பல தேச பக்தர்களும் இவரது உதவியைப் பெற்றுள்ளார்கள். இவரது வள்ளல் தன்மைக்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. சேஷாயி மின் உற்பத்திக் கம்பெனியைத் திருச்சிராப்பள்ளியில் தொடங்க முதன் முதலில் 50 ஆயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கிய பெருமை இவரையே சாரும்.
நகரின் கல்வி வளர்ச்சிக்குப் பெருமை சேர்த்து வரும் ஜமால் முகமது கல்லூரி அமைந்துள்ள 120 ஏக்கர் நிலப்பரப்பு அனைத்தும் பெருமைக்குரிய ந.மு. அவர்களின் நன்கொடையே.
தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் பெற்றவராகவும் விளங்கியுள்ளார். இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரத்திற்கு உதவியாக இஸ்லாமிய அச்சகம் தோற்றுவித்தார். தமிழ் மொழியில் திருக்குர் ஆனை மொழி பெயர்க்க மெளலானா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களுக்கு உதவினார்.
சுதந்திரப் போராட்டவாதி, இலக்கியவாதி, தொழில் மேதை, வள்ளல் ந.மு. காஜாமியான் ராவுத்தர் அவர்கள் 1954 நவம்பர் மாதம் 14 –ந் தேதி மரணமடைந்தார்.
சையத் முர்துஜா ஹஸ்ரத்
சையத் முர்துஜா ஹஸ்ரத் அவர்களின் பூர்வீகம் புகாரா (புகாரஸட் – ரஷ்யா) ஆகும். ஹஸ்ரத் அவர்கள் பிறந்தது, வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் பி.ஏ. வரை படித்து தேர்வு பெற்று, திருச்சி ஜில்லா மாவட்ட ஆட்சியர் காரியாலயத்தில் தலைமைக் குமாஸ்தா பதவியை ஏற்றார்கள். கல்வியில் இஸ்லாமியர்கள் சிறக்க வேண்டும் என்பதால் "இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி" என்ற பள்ளியைத் தோற்றிவித்தார். இப்போது இதன் பெயர் "சையத் முர்துஜா அரசு உயர்நிலைப்பள்ளி" என்று மாற்றப்பட்டுள்ளது.
ஹஸ்ரத் அவர்கள் சமுதாய கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அதே நேரத்தில் அரசியலிலும் பங்கெடுத்துத் தேசத்திற்காகவும் சேவை செய்து வந்தார்கள். கி.பி. 1912- ல் மதராஸ் சட்டக்கவுன்ஸில் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் இந்தியாவை ஆண்டு வந்த ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் ஹஸ்ரத்தை அழைத்து ஹானரபிள் என்ற பட்டம் வழங்கினார். ஆனால் இந்தப் பட்டத்தை தூக்கியெறிந்து விட்டு பிரிட்டிஷாரின் பகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். கி.பி. 1919 –க்குப் பின் கிலாபத் இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டு, காங்கிரஸ் உடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்திலும் கலந்து கொண்டார்கள்.
மெளலானா ஷவுகத் அலி, காந்திஜீ ஆகிய இரு பெருந்தலைவர்கள் திருச்சி வந்தபொழுது இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக ரூ.20 ஆயிரம் நிதி திரட்டிக் கொடுத்தார்கள். இதனால் ஹஸ்ரத் அவர்களின் புகழ் இந்தியாவின் எண்திசைகளிலும் பரவக் காரணமாகியது. கி.பி. 1923-ஆம் ஆண்டில் டத்திய சட்டசபை (தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் போன்றது) தேர்தல் நடந்தபொழுது, சென்னை மாநிலத்தின் பதினொரு ஜில்லாக்களின் சார்பில் நடைபெற்ற தேர்தலில் ஹஸ்ரத் அவர்கள் திருச்சி ஜில்லாவில் நின்று வெற்றி வாகை சூடினார். இவர் 24 வருடங்கள் தொடர்ந்து மத்திய சட்டசபையில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நீண்ட காலத்திற்கு ஹஸ்ரத் அவர்கள் மத்திய சட்டசபையில் சேவை செய்து வந்ததால் இந்தியாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் ஹஸ்ரத் அறிமுகமானவராக இருந்தார்.
பாகிஸ்தான் ஏற்படுவதை எதிர்த்த குறைந்த முஸ்லீம் தலைவர்களில் ஹஸ்ரத் அவர்களும் ஒருவராக இருந்தார்கள். இதனால் திருச்சி மக்கள் அனைவரும் இவரை "படே ஹஸ்ரத்" (பெரிய ஹஸ்ரத்) என்றே அன்புடன் அழைத்தனர். இவர் கி.பி. 1940 –ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 –ம் தேதி மறைந்தார்கள்.
எஸ்.எம். சுல்தான் பக்தாதி
எஸ்.எம். சுல்தான் பக்தாதி கி.பி. 1898 –ல் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருப்பத்தூரில் பிறந்தார். இவரது தந்தையார் இலங்கையில் பெரும் வணிகராக இருந்தார். எனவே பக்தாதி தமது ஆரம்பக் கல்வியை இலங்கையிலேயே பூர்த்தி செய்து விட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப் படிப்பைப் பயின்றார். இவருக்கு ஈராக் நாட்டில் தபால் துறையில் வேலை கிடைத்தது. (மூன்று ஆண்டுகள் அங்கு வேலை செய்து திரும்பியதால் இவரின் பெயருக்கு பின்னால் "பக்தாதி" எனும் சிறப்புப் பெயரும் சேர்ந்து கொண்டது). பின்னர் விடுமுறையைக் கழிக்கத் தாயகம் வந்த பக்தாதி காந்தியடிகளின் சொற்பொழிவைக் கேட்டுத் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவர் 1923ல் நடந்த கிலாபத் கிளர்ச்சியில் மிகத் தீவிரமாக பாடுபட்டார். மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய நாட்டுப் பொருட்களை விலக்குதல், சுதேசி உடைகளை அணிதல், வெள்ளையரை எதிர்த்தல் போன்ற கிளர்ச்சிகளில் ஈடுபட்டதன் காரணமாக 19 நபர்கள் கைதானார்கள். இப்படி கைதான அனைவருக்கும் சுல்தான் பக்தாதி அவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகிகளைப் பல்லாரி சிறைக்குக் கொண்டு போகும் ரயில் நிலையங்களில் மக்கள் திரளாக வந்து அவர்களைக் கண்டு வாழ்த்தினர். ஒரு சந்தர்ப்பத்தில் இவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தபொழுது சிறை அதிகாரிகள் அவரிடம் உன் தந்தை பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், மகாத்மா காந்தி என்றார். தாயார் பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு பாரத மாதா என்றார். சாப்பிட என்ன வேண்டும்? என்று கேட்டனர். இந்தியாவின் சுதந்திரம் என்றார். இதனால் இவரை சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தினர்.
சிறையில் இருந்து வெளியே வந்து திருச்சியில் நடந்து வந்த சமரசம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பை 1937- ல் ஏற்று அதனை வார இதழாகவும் பிறகு தினசரி பத்திரிக்கையாகவும் நடத்தி வந்தார். இதில் ஆங்கில அரசின் அடக்குமுறையை எதிர்த்து வந்தார். இதனால் ஆங்கிலேயர்கள் இவரைக் கண்காணித்து வந்தனர். வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகவும், சமுதாயத்திற்காகவும் தியாகம் செய்து விட்டு 15.03.1977 ல் மறைந்தார்.
பள்ளபட்டி கலிலூர் ரஹ்மான் ஹலரத்
மிகுந்த நாட்டுப்பற்றும், பேச்சாற்றலும், மணிமொழி மெளலானா என்னும் பட்டம் பெற்றவருமான இவர் 1905-ம் ஆண்டு ஜனவரி 29-ம் நாள் பள்ளப்பட்டியில் பிறந்தார். இவர் மாணவப் பருவத்திலேயே தேசிய உணர்வு மிக்கவராக இருந்தார். 1919-ம் ஆண்டு வேலூர் மதரஸாவில் படித்த பொழுது சக மாணவர்களை வைத்து இவர் அந்நியத் துணிகளையும், அங்கு ஆசிரியப்பணி செய்து வந்த கமானி ஹலரத் அவர்களின் திருமண உடைகளையும் (அவை அந்நிய நாட்டு துணிகளாகும்) மதரஸா அருகில் தீயிட்டுக் கொளுத்தினார். இதனால் இவர் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார். 1927 –ல் ஜமால் முஹம்மது ராவுத்தரின் மகள் ஸபுரா பீவியை மணமுடித்தார்.
திருமணத்திற்குப் பின் பள்ளப்பட்டி அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பின்னர் பெங்களூர் சென்று அங்கும் பள்ளியொன்றில் 1929 முதல் 1939 வரை பேஷ் இமாமாகப் பணிபுரிந்தார். இக்காலத்தில் இவர் முஸ்லீம் லீக்கின் பிரதம ஊழியராகவும் செயலாற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் டோக்கியோ செல்லும் வழியில் சைகோனில் தங்கியிருந்த காலமெல்லாம் அவரின் நெருங்கிய சகாவாகவும் இவரே இருந்தார். நேதாஜி இவரை எப்பொழுதும் "மெளலவி சாகிப்" என்றே அன்போடு அழைப்பார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த பின் நேதாஜிக்கும், தமக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு இவர் தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்தார். பாங்காங்கில் தம்பி சாகிப் மரைக்காயரின் வணிக நிலையத்தில் தங்கிய இவரை, பிரிட்டிஷ் உளவாளிகள் மோப்பம் பிடித்துக் கைது செய்து டில்லி செங்கோட்டையில் ஐ.என்.ஏ. விசாரணை முடியும் வரை தங்களின் கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்திய விடுதலையைத் தவிர ஜப்பானியருக்கு உதவி செய்யும் எந்த நோக்கமும் இவரிடம் இல்லாததால் தாயகம் திரும்ப இவருக்கு பாஸ்போர்ட் வழங்கினர் பிரிட்டிஷார்.
1946 –ல் இந்தியா திரும்பிய இவர் பின்னர் சிங்கப்பூர் சென்று 'மலேசியா நண்பன்' என்ற பத்திரிக்கையில் இக்பாலின் கவிதைகளை ஒவ்வொரு நாளும் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தார். பின்னர் இலங்கை சென்று ஹனபி மஸ்ஜிதில் பேஷ் இமாமாகப் பணியாற்றினார். கி.பி. 1960ல் இவர் தாயகம் திரும்பி சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்டு இருந்துவிட்டு கி.பி. 1969 ஜூன் 12 ம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். பள்ளப்பட்டி (ஊர்) மக்கள் இவரை சிறப்பிக்கும் விதமாக இவரின் கல்லறையைப் பள்ளப்பட்டி ஜும்மா பள்ளிவாசலின் உள்ளேயே அமைத்து (அடக்கம் செய்து) உள்ளனர்.
ஜே. நன்னா சாயபு
இவர் கி.பி. 1903 –ம் வருடம் கரூரில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் ஜமீன் சாகிப் என்பதாகும். இவர் இளம் வயதிலேயே விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். கி.பி. 1920 முதல் கி.பி. 1940 வரை அனைத்து இயக்கங்களிலும் பங்கு கொண்டார். கி.பி. 1930 –ல் இந்திய விடுதலை இயக்கத்தைப் பற்றியும், ஆங்கிலேயரின் கொடுமையான ஆட்சியைப் பற்றியும் மக்களிடம் தெருமுனைப் பிரச்சாரம் செய்ததால் ஆங்கில அரசு இ.பி.கோ. 145 பிரிவின்கீழ் இவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்தது. கி.பி. 1942 –ம் ஆண்டு கரூரில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். கி.பி. 1943 –ல் இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் 1 வருடம் 2 மாதம், 25 நாட்கள் அரசியல் கைதியாகக் காவலில் வைக்கப்பட்டார். இந்தியா விடுதலை பெற்ற பின் கரூர் நகராட்சித் துணைத் தலைவராகவும், கரூர் நகரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்து 19.01.1963-ல் காலமானார். இவரது கல்லறையில் தேசியக் கொடி பொறிக்கப்பட்டு உள்ளது. இவரது குடும்பத்தாரை இன்றும் "தியாகி குடும்பத்தார்கள்" என்று மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
நா. பியாரி பீபீ
இவர் திண்டுக்கலில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத் இஸ்மாயிலுக்கு 1922-ல் மகளாகப் பிறந்தார். இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் கரூர் நன்னா சாகிபு அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. அது முதல் இவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார். கி.பி. 1941-ல் இந்திய பாதுகாப்பு விதியின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லீம் பெண்மணி இவரே என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம் பெண்ணான இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றதற்கு கரூர் நகர முஸ்லீம் மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஜமாத்தில் இருந்த இவரது குடும்பத்தையே சிறிது காலம் ஒதுக்கி வைத்தனர்.
இவர் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒவ்வொரு புகைவண்டி நிலையத்திலும் ஏராளமான முஸ்லீம்கள் இவர் மீது கல் எறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் இவர் சிறை செல்லும் பொழுது ஐந்து மாத கர்ப்பவதியாக இருந்தார். பின்பு அங்கேயே கருக்கலைப்பும் ஏற்பட்டுவிட்டது. இதனால் இவரை இரு வாரங்கள் அரசு மருத்துவமனையில் வைத்திருந்து பின்பு விடுதலை செய்தனர். இன்றும் இவர் கதர் ஆடைகளையே அணிந்து வருகிறார். இவரை இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகிய பிரதமர்கள் டெல்லிக்கு வரவழைத்து வெள்ளித்தட்டு பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர்.
மேலும் உறையூரைச் சேர்ந்த ஆர்மோனியம் டி.எம்.காதர் பாட்ஷா நாட்டு விடுதலைக்காக மேடைகளில் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார்.
வேலாயுதம்பாளையம் எம்.எம். பாஜான் தனது பள்ளிப் பருவத்திலேயே ஆங்கில அரசர் எட்வர்டு மன்னருக்கு வாழ்த்துக் கூறும் பாடலைப் பாட மறுத்தவர். வேலாயுதம்பாளையத்தில் நேரு வாலிபர் சங்கம் என்ற அமைப்பை நிறுவி விடுதலைக்கும், கதர் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்நகரின் பெரும் தானிய வணிகர் பிச்சை ராவுத்தரின் புதல்வர் முகம்மது இப்ராஹீம் கலிபுல்லாகான் கிலாபத் இயக்கத்தில் பெரும் பங்காற்றி நகர் மன்றத் தலைவராகவும், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும், புதுக்கோட்டை திவானாகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார். காந்தியடிகளுடனும், அலி சகோதரர்களுடனும் தமிழகம் எங்கும் இவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எஸ்.ஏ.எஸ். முகம்மது சாகிப், உறையூர் எம்.சேக் பாபா, பெரிய செளராஷ்டிரா தெரு அப்துல் அஜீஸ், அப்துல் கரீம், அப்துல் காதர், பாலக்கரை அப்துல் ரஹ்மான், பெல்லாரி சிறையில் வாடிய அரியலூரைச் சேர்ந்த குலாம் காதர், கே.எம். ஹமீர் கான், தங்கமீரான் ராவுத்தர், முர்ஷா ராவுத்தர், ஷேக் தாவூத் சாகிப், வரகனேரி ஷேக் தாவூத் மகன் முகம்மது சுல்தான் நேதாஜியின் இந்திய தேசீய இராணுவத்தில் 219 கொரில்லா பிரிவு 61625 எண் யூனிட்டில் சிப்பாயாக பணியாற்றிய இவர் போன்ற பல இஸ்லாமிய தியாகிகள் தேச விடுதலைக்காகப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.
முடிவுரை
வரலாற்றில் ஒரு சிலரை மட்டுமே இந்திய சுதந்திரத்திற்காகப் பாடு பட்டவர்களாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும் தலைவர்கள் கூறிய வார்த்தைகளை தெய்வவாக்காகக் கொண்டு தெருவில் இறங்கி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த லட்சக் கணக்கான தொண்டர்களை இந்த நாட்டு மக்களும் அரசும் மறந்து விட்டது. எங்கேயோ வாழ்ந்து இறந்த விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப் பேசி மகிழ்பவர்கள், தங்கள் வசிக்கும் உள்ளூரிலேயே இருக்கும் விடுதலை போராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் பட்ட துன்பத்தையும் அவர்கள் செய்த தியாகத்தையும் அறியாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட இவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நன்றி : தி ஜமால் 2006 – 2007
( திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஆண்டு மலர் )--
No comments:
Post a Comment