3 ஆண்டுகளில் 5 மடங்கு கோடீஸ்வரியான மாயாவதி
புதுடெல்லி, ஜூன் 27-நாட்டில் உள்ள மிகப்பெரிய தொழில் அதிபர்கள் ஆச்சரியமும், பொறாமையும் படும் அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் தனது சொத்தை 5 மடங்கு பெருக்கி சாதனை படைத்துள்ளார் உ.பி.முதல்வர் மாயாவதி.இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி ஒரு மாநில முதல்வராக இருப்பவர் அந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். உ.பி.முதல்வர் மாயாவதி தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லாத காரணத்தால் மாநில மேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு ரூ52.6 கோடி சொத்து இருப்பதாக கணக்கு கொடுத்துள்ளார். இவர் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் உ.பி.மாநிலம் அக்பர்பூர் தொகுதியில் போட்டியிட்ட போது தன்னிடம் ரூ11 கோடி அளவுக்கு மட்டும் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். சரியாக 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் அவருடைய சொத்துக்கள் 52 கோடியாக கிட்டத்தட்ட 5 மடங்கு உயர்ந் திருப்பது அரசியல் நோக்கர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது:உ.பி.முதல்வர் மாயாவதி கடந்த முறை தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட அசையா சொத்துக்களில் ஒரு சில டெல்லியில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் அவற்றின் விலை இரு மடங்கு வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம். 5 மடங்கு உயர்ந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை. மேலும் கடந்த முறை தன்னிடம் ரூ31 லட்சம் மதிப்புடைய தங்க நகை இருப்பதாக கூறியவர் தற்போது ரூ70 லட்சம் மதிப்புள்ள தங்க நகை இருப்பதாக கூறியுள்ளார். தற்போது காட்டியுள்ள சொத்துக் கணக்கில் டெல்லி சர்தார் பட்டேல் மார்க் பங்களா ஒன்றை சேர்த்துள்ளார். அதன் மதிப்பு ரூ18 கோடி என கணக்கு கொடுத்துள்ளார். ஆனால் உண்மையில் அதன் மதிப்பு பல மடங்கு இருக்கும். எம்.பி. சம்பளத்தில் இந்த அளவு சொத்து சேர்க்க முடியாது. எந்த வகையில் சொத்து சேர்ந்தது என்பது மாயாவதிக்கு மட்டும் தெரிந்த ரகசியம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன