Search This Blog

Sunday, April 23, 2006

கூட்டங்களை நிர்வகித்தல்

கூட்டங்களை நிர்வகித்தல்
கலாநிதி அலி ஹம்மாதி ( தமிழில் : யூ.கே.றமீஸ்).

1. அல்லாஹ்வை புகழ்ந்து ஆரம்பித்தல்:
“ அல்லாஹ்வை புகழ்ந்து ஆரம்பிக்கப்படாத செயற்பாடுகள் இடையில் அறுந்துவிடும்” (அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரழி) நூல்: அபூதாவூத்). இதன்படி இறைவனை புகழ்ந்து கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

2. வரவேற்பும், வழிகாட்டலும்
அனைவரினதும் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, நடவடிக்கைகளை தெளிவுபடுத்தி, ஒழுங்குகளை முன்வைத்து ஒரு வழிகாட்டல் உரை நிகழ்த்தப்படல் வேண்டும். இதுதான் கூட்டம் சிறப்பாக நடப்பதற்கான தயார் நிலையை பங்கேற்பவர்களிடத்தில் ஏற்படுத்தி விடுகின்றது. அத்தோடு அவர்களது உணர்வுகளையும் தூண்டி விடுகின்றது.

3. கலந்துரையாடலுக்கான ஒழுங்குகள் பொருத்தமான சொற்களை தெரிவு செய்து பேசுதல், அடுத்தவர்களை மோசமாக விமர்சித்து காயப்படுத்தாதிருத்தல், நல்லதையும் சரியானதையுமே பேசுதல் போன்றவற்றை கலந்து கொள்பவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். “நபியே எதனை பேசிய போதிலும் நல்லதையே பேசுமாறு எனது அடியார்களுக்கு குறிப்பிடுங்கள்.ஏனெனில் ஷைத்தான் அவர்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்தி விடுவான் … ( குர்ஆன் 17:53)
“அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பியவர் பேசினால் நல்லதையே பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும். ( புஹாரி, முஸ்லிம்)
உரையாடல் சூடேறிவிட்டால், தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கினால் உடனடியாக வரையறைகளை பேணுவதற்காக செயற்படுவது அவசியமாகும். இதன் கருத்து பங்கு பெறுபவர்கள் தங்களது கருத்துக்களை, கண்ணோட்டங்களை தெரிவிக்காது மௌனமாக இருக்க வேண்டும் என்பதல்ல என்பதனையும் தலைவர் தெரிவிக்க வேண்டும்.

4. நேரத்தை பேணலும் அதனை சிறப்பாக பயன்படுத்தலும்
இது கூட்டத்தலைவரின் மிக முக்கிய பணிகளுள் ஒன்றாகும். பங்கு பெறுபவர்களும் இவ்விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும். மிக குறைந்த நேரத்தில் கூட்டத்தின் இலக்குகள் நிறைவேறினால்தான் அது வெற்றி பெறும். ஏனெனில் நேரம்தான் வாழ்க்கையாகும்.
இறைவா! எங்கள் நேரங்கள் மீது பரகத் செய்வாயாக என உமர்(ரழி) அவர்கள் பிரார்த்திப்பவராக இருந்தார்கள். மேலும் நேரத்தை வீணடிப்பது அழிவை ஏற்படுத்தும் என்றும் கூறினார்கள். காலத்தின் மீது சத்தியம் செய்வதன் மூலம் அல்லாஹ் நமக்கு நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறான். காலம் பொன்னை விட மேலானது. தேவையற்ற விடயங்களை கூட்டத்தில் பேசக் கூடாது.
குறித்த நேரத்தில் கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் இதுவே கூட்டத்தின் நேரத்தை பேண உதவுவதுடன் தாமதித்து வருவோருக்குப் படிப்பினையாகவும் அமையும். மேலும் சரியான நேரத்தில் கூட்டத்தை ஆரம்பிக்காமல் இருப்பதன் மூலம் குறித்த நேரத்தில் வந்தவர்களை தண்டிக்கவோ, தவறான முன்மாதிரிக்கு காரணமாக அமையவோ கூடாது.

5. தலைப்பில் கவனமாக இருத்தல்
தலைப்பை விட்டு வேறு விடயங்களை பேசும் தவறு பல இடங்களில் நடைபெறுவதனை பார்க்க முடியும்.இது கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். தலைப்புக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பேசுவதை தலைவர் தடுக்க வேண்டும்.

6.நிகழ்ச்சி நிரலை பேணிக்கொள்ளல்
நிகழ்ச்சி நிரலில் புதிதாக எதனையும் இணைத்துக் கொள்ளக் கூடாது. ஏதேனும் ஒரு விடயம் கட்டாயம் கலந்துரையாடப்பட வேண்டும் என பங்கேற்பாளர்கள் வற்புறுத்தி விடயமும் முக்கியமானதாக இருப்பின், அவ்விடயத்தை கலந்துரையாடுவதே பொருத்தமானதாகும்.

6. கலந்துரையாடலில் முடிவு
இதுவும் பலர் செய்கின்ற ஒரு தவறாகும். கலந்துரையாடிவிட்டு முடிவொன்றை எடுக்காது அடுத்த விடயத்தை பேச முனைகின்றனர். இதன் மூலம் சக்தியையும், நேரத்தையும் வீணடிக்கின்றனர். இது அங்கத்தவர்களுக்கு நம்பிக்கையின்மையும், விரக்தியையும் ஏற்படுத்தும்.

7.ஒழுங்குகளை பேணிக் கொள்ளல்
ஒரு நேரத்தில் ஒருவரே பேச வேண்டும். ஒருவர் பேசும்போது அடுத்தவர்கள் இடையூறு செய்யக் கூடாது. அவற்றை தடுக்க வேண்டும். அதேபோல் சிலர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள். அதனையும் அனுமதிக்க கூடாது. அனைவரும் கருத்து தெரிவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது தலைவரின் பொறுப்பாகும்.தலைவரின் கருத்துக்களில் தவறுகள் காணப்படின் அதனை வாபஸ் வாங்க தயங்கக் கூடாது. ஏனெனில் ஒரு கருத்தில் பிடிவாதமாக இருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.

8. செவிமடுக்கும் ஆற்றல்
கூட்டத்தின் தலைமையும்,அங்கத்தவர்களும் செவிமடுக்கும் ஆற்றலை பெற்றிருப்பது அவசியமாகும். ஒருவர் பேசும்போது வேறு குறிப்புகளை வாசித்துக் கொண்டிருப்பதும், பேசிக் கொண்டிருப்பதும், இடையூறு விளைவிப்பதும் உரையாடுபவரின் ஆர்வத்தை குறைத்து விடுகின்றன.

No comments:

Six C's of Character - Yasir Fazaga