Search This Blog

Tuesday, October 02, 2007

வேதாந்தியின் விளக்கத்திற்குப் பிறகு...

வேதாந்தியின் விளக்கத்திற்குப் பிறகு...
நன்றி : விடுதலை 29-09

விசுவ இந்துபரிசத்தின் பிரமுகரும், பா.ஜ.க., சார்பில் இருமுறை மக்களவை உறுப்பினராக இருந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், இராமன்பற்றி இராமாய ணத்தில் உள்ளவற்றை எடுத்துச் சொன்னதற்காக தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலையைச் சீவ வேண்டும்; நாக்கை அறுக்கவேண்டும் என்று அறிவிப்பு (பாத்வா) கொடுத்ததைத் தொடர்ந்து தமிழ் மண் தகித்து நிற்கிறது!
பிரச்சினை முற்றவே அந்த ஆசாமி விளக்கம் அளிக்க முன்வந்துள்ளார். இதுகுறித்து `ஜூனியர் விகடன் இதழில் ( 30.9.2007) பக்கம் 6 இல் ஒரு பேட்டி வெளிவந்துள்ளது.
கேள்வி: ஒரு சாதுவாகயிருந்தும் தமிழக முதல்வர்பற்றி இவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கிறீர்களே?
வேதாந்தி: தெய்வமான ராமரை கருணாநிதி இழிவாகப் பேசியது குறித்து அயோத்தியில் சாதுக்களின் சபை கூடி ஆலோசித்தது. அப்போது, இந்துக் கடவுள்களைப்பற்றி இழிவாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கழுத்தை அல்லது நாக்கைத் துண்டிக்க வேண்டும் என்று பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினேன். இதைச் சாதுக்கள் ஏற்றுக்கொண்டதன் பேரில்தான் அதை வெளியிலும் சொன்னேன் என்று கூறியிருக்கிறார்.
இதன்மூலம் ஓர் உண்மை வெளியில் வந்துவிட்டது. இந்துக்களின் புனித நூல், தெய்வ நூல், பகவான் கிருஷ்ணன் அருளிய நூல் என்றெல்லாம் பார்ப்பனர்களால் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் கீதையாகிய தூண் சுக்கல் நூறாக உடைந்து சிதறிவிட்டது. மிக உயர்ந்த ஒழுக்கத்தைப் போதிக்கும் தெய்வத்தன்மை பொருந்திய மகத்தான நூல் என்று இதுவரை பார்ப்பனர்கள் கட்டி வைத்திருந்த பூடகம் உடைந்து தூள் தூளாகிவிட்டது.
கீதை என்பது உயர்ந்த நூலும் அல்ல - புடலங்காயும் அல்ல - அது கொலை வெறியைத் தூண்டும் நூல் என்பது அம்பலமாகிவிட்டது.
காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பானும்கூட நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், தான் செய்த கொலையை நியாயப்படுத்த கீதையைத்தான் சாட்சிக்கு அழைத்தான். கீதையில் மட்டுமல்ல, இராமாயணத்திலும் புத்தர்களை, நாத்திகர்கள் என்று கூறி நாட்டை விட்டு விரட்டவேண்டும் என்று இராமன் உத்தரவிட்டுள்ளான்.
எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிப் படுகொலை செய்யவில்லையா? திருவத்திபுரம் கோயிலுக்குச் சென்று இன்று பார்த்தாலும் தெரியுமே - சமணர்களைக் கழுவிலேற்றும் காட்சி கற்களில் செதுக்கப்பட்டுள்ளனவே! பவுத்தர்களின் நாலந்தா பல்கலைக் கழகத்தைக் கொளுத்தவில்லையா? நாடு முழுவதுமிருந்த ஆயிரக்கணக்கான பவுத்த விகாரங்களையும், சமணப் பள்ளிகளையும் அடித்து நொறுக்கவில்லையா? அவர்களின் விகாரங்களையும், பள்ளிகளையும் இன்று கோயில்களாக மாற்றிடவில்லையா?
சுதன் வா என்னும் பெயருடைய அரசன் சேதுமுதல் இமயமலை வரையில் உள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டதாக `சங்க விஜயம் எனும் நூல் கூறுகிறது.
வெகுதூரம் போவானேன்? இன்றைக்குப் பெரும் பிரச்சினைக்கு ஆளாகியிருக்கிற தசரத புத்திரனான இராமனே, சூத்திரன் தவம் இருந்தான் என்ற காரணத் திற்காக சம்புகனை வாளால் வெட்டிப் படுகொலை செய்யவில்லையா?
அதைத்தான் இந்த ராம்விலாஸ் வேதாந்தி இப்பொழுது கூறியிருக்கிறான். உண்மையைத்தான் சதிர்காய்போல உடைத்து இருக்கிறான். இதற்குப் பிறகாவது இந்து மதம் என்பதும், அதிலிருந்து வரும் இந்துத்துவா என்பதும் கொலை வெறித்தன்மை கொண்டவை; மனித குலத்துக்கும், மேன்மையான பண்பாட் டிற்கும், நாகரிகத்திற்கும் எதிரானது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!
இத்தகைய இந்து மதத்தை அனுமதிக்கலாமா? அதன் வேத, புராண, இதிகாசக் குப்பைகளை விட்டு வைக்கலாமா?
வேதாந்தியின் விளக்கத்திற்குப் பிறகு, இந்தக் காலகட்டத்திலாவது இந்த வினாக்கள் எழவேண்டியது மிகவும் அவசியமாகும்.
நன்றி: விடுதலை

No comments:

Six C's of Character - Yasir Fazaga