Search This Blog

Sunday, September 23, 2007

விடுலை தலையங்கம் 22-09-2007

இராமாயணத்தை யார் தூக்கிப் பிடித்தாலும் அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறைபிடிக்கப்பட வேண்டியவர்களே !
நன்றி : விடுலை தலையங்கம் 22-09-2007
ராமனைப்பற்றி விமர்சனம் செய்ததற்காக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - ராமன்பற்றி கூறியவற்றை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் ; மத உணர்வுகளைப் புண்படுத்தினால் மூன்று ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் வாய் நீளம் காட்டியுள்ளார் பா.ஜ .க .,வின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான எல் .கே. அத்வானி. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான திருவாளர் எல் .கே . அத்வானி - அந்தக் குற்றம் புரிந்து 15 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாமல் , துள்ளித் திரிகிற தைரியத்தில் இப்படிப் பேசுகிறார் என்பதை நினைவு கூரவேண்டும் .
நூறு கோடி மக்களின் அடி நாதத்தையே உலுக்கிய உலக மக்களையே வெட்கத்தால் தலைகுனியச் செய்த `பாபர் மசூதி இடிப்புப் புகழ் குற்றவாளி ஒருவர் இன்னும் தாம் செய்த குற்றத்துக்காகத் தண்டனை பெறாத நிலையில் உள்ளார் .
இந்திய நிர்வாகத் துறையும் , நீதித்துறையும் எவ்வளவுக் கீழிறக்கத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா?
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வ தெல்லாம் வெறும் காகித அம்புகள்தானா ?
பா .ஜ. க., சங் பரிவார்க் கும்பலின் முக்கிய தலைவர்கள் எல்லாம் , அவர்கள் செய்த குற்றத்திற்காக உரிய தண்டனை வழங்கப்பட்டு , சிறைக் கொட்டடியில் நெட்டித் தள்ளப்பட்டு இருந்தால் அவர்களின் ஆட்டபாட்டமெல்லாம் சப்த நாடிகள் எல்லாம் ஒடுங்கியேபோயிருக்கும் .
காங்கிரசிலும் இந்துத்துவாவாதிகள் , சங் பரிவார்க் கூட்டாளிகள் இருக்கத்தானே செய்கிறார்கள் - அவர்களின் தயவில் இந்தக் குற்றவாளிகள் குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறார்கள் போலும் !
எதற்காக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தாம் கூறிய சொற்களை வாபஸ் வாங்கிக் கொள்ளவேண்டும் ? சவால் விட்டே கலைஞர் அவர்கள் பேசியிருக்கிறாரே - ராமன் , ராமாயணம்பற்றி ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று அறைகூவலிட்டுள்ளாரே - துணிவு இருந்தால் அறிவு நாணயம் இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே?
உண்மையைச் சொல்லவேண்டுமானால் , இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான பார்ப்பனர் அல்லாதாரை , திராவிடர்களை சூத்திரர்கள் என்றும் , குரங்குகள் என்றும் , ராட்சதர்கள் என்றும் , அரக்கர்கள் என்றும் எழுதப்பட்ட தற்காக , இந்துத்துவாவாதிகள் ஒரு பகிரங்கமான மாநாடு கூட்டி, அதில் ஜீயர்களையும் கூட்டி வைத்து, இராமாயணத்தை அல்லவா வாபஸ் வாங்கிக் கொள்ள முன்வர வேண்டும்?
நூற்றுக்கு 97 சதவிகித மக்கள் இராமாயணத்தில் இழிவுபடுத்தப்பட்டுள்ளார்களே - என்ன தைரியமிருந்தால் ஒரு சிறு கூட்டம் பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் ஓர் இதிகாசத்தை இன்னும் பெருமையுடன் பறை சாற்றும்? பெரும்பான்மை மக்களிடத்தில் போதுமான உணர்வு கொந் தளித்து எழவில்லை என்ற தைரியத்தில் பேசுகிறார்களா ?
இந்த வகையில் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் இந்தியாவுக்கே வழிகாட்டிவிட்டதே ! இராமனை , இராமாயணத்தை , அதன் முக்கிய பாத்திரங்களை எரியூட்டிக் காட்டினோம் . அதன் பொருளை அத்வானிகள் புரிந்துகொள்ள வேண்டாமா ?
பாதிக்கப்பட்டவர்கள் கோபப்படுதல் , கொந்தளித்து எழுதல் நியாயம் - அதனைத் தான் தந்தை பெரியார் வழிவந்த திராவிட இயக்க வழிவந்த மானமிகு கலைஞர் அவர்கள் செய்துள்ளார் .
இந்தச் சின்ன கருத்தைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்திருக்கிறாரே - இன்னும் பிரதமராக ஆகக்கூட தொண்டை அளவு ஆசையைத் தேக்கி வைத்துக்கொண்டு இருக்கிறாரே !
இராமாயணம்பற்றிஉலக வரலாற்று ஆசிரியர்கள் எழுதியவனவெல்லாம் இந்தக் கூட்டத்துக்குத் தெரியாதா?

நியாயமாக இராமாயணத்தை யார் தூக்கிப் பிடித்தாலும் அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறைபிடிக்கப்பட வேண்டியவர்களே ! ஆனால் , மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதியாக தலைகீழாகப் புரட்டுதலை அனுமதிக்கலாமா ? இதுதான் வெகுமக்கள் மத்தியில் வெடித்தெழ வேண்டிய கேள்வியாகும்.

நன்றி விடுதலை

No comments:

Six C's of Character - Yasir Fazaga