தினமணிக்கு ஓர் அறைகூவல்
நன்றி விடுதலை 24-09-2007
``இதிகாசம், புராணம், சரித்திரம் ஆகிய எல்லாமே எந்தவொரு சமுதாயத்தின் அருமை பெருமைக்கும் ஆதாரமாக உள்ளவை. அவற்றை எள்ளி நகையாடுவது தான் பகுத்தறிவுவாதம் என்றால், அவர்கள் பகுத்தறிவுக்குச் சரியான விளக்கம் தெரியாதவர்கள் என்றுதான் கூற வேண்டும். - இவ்வாறு பகுத்தறிவுக்குப் புது விளக்கம் கொடுத்துள்ளது - ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடாகவே நிர்வாணக் கூத்தாடும் தினமணி - அதன் தலையங்கத்தில் ( 20.9.2007).
இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் இராமாயணம் ஒட்டுமொத்தமான சமுதாயத்தின் அருமை பெருமைகளைப் பேசுகின்றதா?`தினமணிக்கு மறுப்பாக நாம் எடுத்து வைக்கும் விவாதங்களுக்குப் பதில் அளிக்க முடியாத ஆத்திரத்தில் - பந்தை அடிக்க முடியாதவன் காலை அடிப்பதுபோல எழுத்தாணியைப் பிடிக்கிறது.
இதுவரை பதில் அளிக்கத் தவறியிருந்தாலும், இப்பொழது நாம் எழுப்பும் வினாக்களுக்கு அறிவு நாணயமான முறையில் பதில் அளிக்க முன்வருமா தினமணி?
(1) சூத்திரன், சம்புகன் தவமிருந்ததால் வருண தர்மம் கெட்டு விட்டது என்று கூறி அவன் கழுத்தை வெட்டினானே ராமன் - இதனை எந்த அருமை பெருமைக்கு உரியதாகக் கொள்வது?
(2) சூத்திரன் சம்புகனின் தலையை ராமன் வாள் கொண்டு வெட்டி எறிந்ததால் செத்துப்போன பார்ப்பனச் சிறுவன் உயிர் பிழைத்துக் கொண்டான் என்று இராமாயணம் கூறுகிறதே - இதனை நியாயப்படுத்துகிறார்களா? இது பார்ப்பனர் - சூத்திரர் என்ற பேதத்தின் அடிப்படையில் ஒரு வருணத்தை உயர்த்தி இன்னொரு வருணத்தை தாழ்த்தி எழுதப்பட்ட மிகக் கேவலமான பேத உணர்வு அல்லவா?
இதனை சுட்டிக்காட்டினால், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் வேறு எதையாவது சொல்லித் திசை திருப்புவதாக தினமணி எழுதுகிறதே - அது சரியா? இந்த வருண பேதம்தான் இராமாயணம் காட்டும் சமுதாயத்தின் அருமை பெருமையா?
(3) குதிரைக்கும் - தசரதனின் மனைவிக்கும் இராமன் பிறந்தான் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதே - இதனை எள்ளி நகையாடாமல் துள்ளிக் குதித்துப் பாராட்ட வேண்டுமா? ஆம், ராமன் அப்படித்தான் பிறந்தான். அதில் என்ன குற்றம்? அதனை எப்படி எள்ளி நகையாடலாம் என்று தினமணி எழுதப் போகிறதா?
(4) இராமன் உண்மை என்றும், வரலாறு என்றும் தினமணி எழுதும்போது, அது நடந்த கதையல்ல என்று கூறி அதற்கு ஆதாரமாக வரலாற்று ஆசிரியர்கள் (நேரு, கே.எம். முன்ஷி போன்றவர்கள்) கூறிய எடுத்துக்காட்டினால் தினமணி அகராதியில் திசை திருப்புவது என்று பொருளா?
(5) பகுத்தறிவுவாதம் திராவிட இயக்கம் சொல்லுவதல்ல - உண்மையான பகுத்தறிவுவாதிகள் பொதுவுடைமை வாதிகள் என்று, பிரித்தாளும் தன்மையோடு, `தினமணி தலையங்கத்தில் எழுதுகிறதே - அந்தப் பொதுவுடைமை வாதிகளும் சேர்ந்துதானே இராமாயணம் நடந்த கதையல்ல - ராமன் பாலம் என்பதற்கு அறிவியலின் அடிப்படையில் ஆதாரம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்களே - `தினமணியும், அதன் வகையறாக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே? தி.க.,வும், தி.மு.க.,வும் சொன்னால்தான் போலி பகுத்தறிவு - தினமணி நம்பும் உண்மை பகுத்தறிவுவாதிகளான பொதுவுடைமைவாதிகள் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே?
(6) ஞானிகளும், சித்தர்களும் சொல்லி விடாத பகுத்தறி வையா திராவிட இயக்கங்கள் சொல்லிவிடப் போகின்றன என்று எழுதுவதில் `தினமணிக்கு ஓர் அற்பத் திருப்தி.
சரி, இருக்கட்டும், `தினமணி பாராட்டும் அந்தச் சித்தர்களின் பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறதா?
சாத்திரத்தைப்பொய்யாக்கி, சதுர்மறையைச் சுட்டெரித்துச்சூத்திரத்தைக்கண்டு துயர் அறுப்பது எக்காலம்? என்று பத்திரகிரியார் எக்காளமிட்டுள்ளாரே - அதனை ஏற்றுக்கொண்டு `தினமணி சதுர்மறையைச் சுட்டெரிக்க முன்வருமா? சாத்திரத்தைப் பொய்யென்று ஒப்புக்கொள்ளுமா? இந்த வினாக்களுக்கெல்லாம் முடிந்தால் பதில் சொல்ல `தினமணி முன்வருமா? சவால் விட்டே கேட்கி றோம்!
நன்றி விடுதலை 20-09-2007
No comments:
Post a Comment