தென்காசியில் கலவரத்தை தடுக்க தனி போலீஸ் படை அமைப்பு
தென்காசி :தென்காசியில் கலவரத்தை தடுக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.தென்காசியில் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி இந்து முன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டார். கடந்த மார்ச் 2ம் தேதி த.மு.மு.க. மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் தாக்கப்பட்டார். இந்த இரு சம்பவங்களை தொடர்ந்தும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த கலவரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய வழக்குகளில் சிக்கியவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி தென்காசி கூலக்கடை பஜாரில் இரு பிரிவினரும் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இரு தரப்பைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டனர். சிலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து நகரில் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட 29 பேர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
கடந்த 3ம் தேதி தென்காசிவட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் வெடிகுண்டு புரளி என தெரிந்தது. அன்று இரவு எஸ்.பி.ஸ்ரீதர் தென்காசிக்கு வந்து போலீசாரின் வாகன சோதனை, கண்காணிப்பு பணியை ஆய்வு செய்தார்.இந்நிலையில் நகரில் அமைதி தொடர்ந்திடவும், இனி இதுபோன்ற வன்முறை, கலவரங்கள் ஏற்படாமல் தடுக்கவும் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையில் சப்இன்ஸ்பெக்டர்கள் பீமராஜன், சாகுல்கமீது மற்றும் 7 ஏட்டுகள் உள்ளனர். இவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment