10 ஆண்டுகளுக்கு முன் மூவர் கொலை: அல் - உம்மா தீவிரவாதிகள் 14 பேர் மீதான வழக்கில் ஜூலை 25-ல் தீர்ப்பு
திருநெல்வேலி, ஜூலை 12: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்து அமைப்பினர் மூவர் கொலைச் செய்யப்பட்டது தொடர்பாக அல் - உம்மா தீவிரவாதிகள் 14 பேர் மீதான வழக்கில் இம்மாதம் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, திருநெல்வேலி விரைவு நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.
மேலப்பாளையத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த டாக்டர் செல்வகுமார், கண்ணன், சங்கர் ஆகிய மூவர் கடந்த 1997-ம் ஆண்டு ஆக. 11-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து திருநெல்வேலி சி.பி.சி.ஐ.டி. போலீலார் வழக்குப் பதிந்து, மேலப்பாளையம் அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கிச்சன் புகாரி, சேக்பாஷா, சித்திக், சாகுல் ஹமீது, அப்துல் ரகுமான் உள்ளிட்ட 14 பேரை கைது செய்து திருநெல்வேலி விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, கடந்த மூன்று நாள்களாக அரசு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
நிறைவாக புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் செல்வராஜ் ஆஜரானார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, இவ் வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 25-ம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
No comments:
Post a Comment