Search This Blog
Tuesday, July 24, 2007
இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்
இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்
பாலஸ்தீனப் பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடுமை ஒருபுறமிருக்க, பாலஸ்தீனச் சிறார்கள் அபுகுரைபுக்கும் குவாண்டனாமோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத கொடுமைகளுக்கு இஸ்ரேல் இராணுவத்தினரால் ஆட்படுத்தப்படுவதாக குழந்தைகள் பாதுகாப்புக்கான பன்னாட்டு அமைப்பு (Defense for Children International - DCI) குற்றம் சாட்டியுள்ளது.
உலகின் பிற நாடுகளைச்சேர்ந்த சிறார்களைப் போலவே பாலஸ்தீனச் சிறார்களும் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. இருப்பினும், அவர்கள் சிறார்கள், குழந்தைகள் என்கிற சிறு கரிசனம் கூட இல்லாமல் காட்டுமிராண்டித் தனமாக அவர்கள் இஸ்ரேலிய படையினரால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முஹம்மத் மஹ்சிரி என்ற 17 வயதான சிறுவன் ஒருவனை மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஆண்டு கைது செய்தது. இச்சிறுவன் அங்கிருக்கும் ஒரு அகதி முகாமில் தங்கியிருந்தான். அவனைக் கைது செய்ய இஸ்ரேலிய இராணுவம் கூறிய காரணம் அவன் இஸ்ரேலிய இராணுவ டாங்கிகளை நோக்கிக் கல்லெறிந்தது தான். அவனைப் பல்வேறு இராணுவ முகாம்களுக்கு விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்த இராணுவம் அவன் மீது சுமத்திய 'தீவிரவாதக்' குற்றம் நிரூபிக்கப்படாததால் 13 மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்தது.
இச்சிறுவன் DCI அமைப்பிடம் அடைக்கலமான பின் அவனது கண்ணீர்க்கதை தற்போது உலகிற்குத் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணி முதல் இரவு 11 மணிவரை ஒருவர் மாற்றி ஒருவராகப் பல்வேறு இராணுவ அதிகாரிகள் இச்சிறுவனைத் துன்புறுத்தி விசாரணை செய்தனர் என்று அவன் கூறினான்.
ஒருமுறை விசாரணையின் போது மழைபெய்ததால் மழையில் நனையவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளான். சில அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலையும் மேற்கொண்டதாகவும் அவன் கூறியுள்ளான்.
விசாரணையின் போது ஆட்டு மந்தையை இழுத்து வருவது போல சிறார்களை இராணுவத்தினர் இராணுவ நீதிமன்றத்துக்கு இழுத்து வருவார்கள் என்றும் அவன் தெரிவித்தான்.
மேலும் இதுகுறித்து தகவல் அளித்த DCI அலுவலர் ஒருவர், இஸ்ரேலிய இராணுவம் சிறார்களின் தூக்கத்தைக் கெடுப்பது, உணவோ குடிநீரோ அளிக்காமல் சித்திரவதை செய்வது போன்ற கொடும் உத்திகளை விசாரணையின் போது பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
DCI அலுவலர் இஸ்ரேல் நாடு குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க செய்யப்பட்ட உலகநாடுகளின் ஒருங்கிணைந்த பிரகடனத்தில் கையொப்பம் இட்டுள்ளது நகைப்புக்குரிய வேதனையான செய்தி ஆகும் என்று மேலும் தெரிவித்தார்.
செப்டம்பர் 28, 2000 முதல் மார்ச் 31, 2007 வரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணை என்ற பெயரால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 860 என்றும் தற்போது அதன் பிடியில் இருக்கும் சிறார்களின் எண்ணிக்கை 398 என்றும் அதன் அறிக்கை தெரிவிக்கிறது.
NANDRI: SATYAMARGAM.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment