Search This Blog

Tuesday, July 03, 2007

தீவிரவாதி மைதீனை சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்க ஆணை

மேலப்பாளையத்தில் 3 பேரை வெட்டிக் கொன்ற வழக்கு: தீவிரவாதி மைதீனை சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்க ஆணை

திருநெல்வேலி, ஜூலை 3: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அல் உம்மா தீவிரவாதிகளால் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய எதிரியான எஸ்.கே.மைதீனை சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்க திருநெல்வேலி முதலாவது விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலப்பாளையத்தில் கடந்த 1997-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி டாக்டர் செல்வக்குமார், பூக்கடை கண்ணன், டெய்லர் சங்கர் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலைகள் தொடர்பாக, மேலப்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.கே.மைதீன் என்ற அப்துல் காதர், கிச்சான் புகாரி (23), ஷேக் பாதுஷா (22), சாகுல் அமீது (27), சித்திக் அலி (21), முட்டை சேட் (31), முகமது ரசூல் (22), கலீலூர் ரகுமான் (19) உள்ளிட்ட 16 அல் உம்மா தீவிரவாதிகள் மீது போலீஸôர் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எஸ்.கே.மைதீன் நீதிமன்றத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். கொலை நடந்தபோது தான் சிறுவன் என்றும், ஆதலால், தன்னை சிறுவர் நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்ததால், மதுரை உயர் நீதிமனறக் கிளையில் மைதீன் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், மைதீனுக்கு வயது கண்டறியும் சோதனை நடத்த அரசுக்கு உத்தரவிட்டு, மனு மீது விசாரணை நடத்துமாறு திருநெல்வேலி முதலாவது நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரால் எஸ்.கே. மைதீனுக்கு வயது கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் அறிக்கை, திருநெல்வேலி முதலாவது விரைவு நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆர். காமத், மனுதாரரின் மனுவை ஏற்றுக்கொண்டு சிறுவர் நீதிமன்றத்தில் மைதீனிடம் தனியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் மைதீன் ஆஜரானதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

No comments:

Six C's of Character - Yasir Fazaga