Search This Blog

Monday, July 23, 2007

குடியரசுத் தலைவர் தேர்தல்- பி.ஜே.பி. பிரசாரம்

அமெரிக்க ஜனநாயகத்தில் அத்தரும், பன்னீரும் மணக்கும் என்பார்கள். ஆனால், அங்கே நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் சேற்றின் நாற்றமும், புழுதியின் வாடையும்தான் வீசும். அங்கே இரண்டு கட்சி ஆட்சிமுறைதான் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறவர்களும் தொழில் சாம்ராஜ்ய அதிபர்களாக இருப்பார்கள். குறிப்பாக, ஆயுத உற்பத்தி விற்பனையில் தொடர்புடையவர்களாக இருப்பார்கள். எனவே, அங்குள்ள தொலைக்காட்சிகளும் ஏடுகளும் இதர பிரசார சாதனங்களும் இரண்டுபட்டு நின்று பிரசாரம் செய்யும்.
தங்கள் எதிர் அணி வேட்பாளரை எந்த அளவிற்குத் தரம் தாழ்த்தி விமர்சிக்க முடியுமோ, அந்த அளவிற்குத் தாழ்ந்து வந்து தாக்குதல் தொடுக்கும். அந்த வேட்பாளர், பள்ளியில் படிக்கும்போது யாரைக் காதலித்தார் தெரியுமா என்று ஆரம்பித்து, அவருடைய காதலிகளின் பட்டியலை வெளியிட்டு இப்போது கரம் பிடித்திருப்பவரின் வாழ்க்கையையும் விமர்சிக்கும்.
அதன் எதிர் அணி சும்மா இருக்குமா? வேட்பாளரின் தாத்தாவிற்கு எத்தனை காதலிகள், பாட்டிக்கு எத்தனை காதலர்கள் என்று ஆரம்பிக்கும். இரு தரப்பின் களங்கம், முறைகேடுகள், புகார்கள் அம்பலத்திற்கு வரும்.
ஆனால், இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் முன்னர் கண்ணியமாக, நாகரிகமாக நடைபெற்று வந்தது. தனி நபர் தாக்குதல் எந்தக் காலத்திலும் முன்னிறுத்தப்படவில்லை. ஆனால், அண்மையில் நடந்த தேர்தலை அமெரிக்கத் தரத்திற்கு பி.ஜே.பி. இழுத்துச் சென்றுவிட்டது. ஏற்கெனவே தத்துவ வறட்சியில் தள்ளாடும் அந்தக் கட்சி அண்மைக்காலமாக அரசியல் வறட்சியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமது அரசியலை நகர்த்த குடியரசுத் தலைவர் தேர்தல் அதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும்படி அப்துல் கலாமைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தது. அவர் மறுத்துவிட்டார். அதன் பின்னர், பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று ஊருக்கு உபதேசம் செய்தது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது என்று காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் ஐக்கிய முன்னணி முடிவு செய்ததும், நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் ராஜஸ்தான் கவர்னராக இருந்த பிரதிபா பாட்டீலை நிறுத்தியது.
பொது வேட்பாளர் என்ற தமது இரண்டாவது முயற்சியிலும் தோல்வி கண்ட பி.ஜே.பி., வேறு வழியின்றி தமது தானைத் தலைவர்களில் ஒருவரான பைரோன்சிங் ஷெகாவத்தை சுயேச்சை வேட்பாளராக நிறுத்தியது. பொட்டும் பூவும் சுமங்கலிக்குச் சுமையாக இருக்காது. ஷெகாவத்தை பி.ஜே.பி. வேட்பாளராக நிறுத்தியிருந்தால், கட்சியின் மானமாவது காப்பாற்றப்பட்டிருக்கும். கட்சி முத்திரை சுமையாகிப் போனது.
முன்னாள் ராணுவத்தினர் சங்கம் அமைத்திருப்பது போல, முன்னாள் முதலமைச்சர்கள் ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவு கோரி செல்வி ஜெயலலிதாவிற்கு பி.ஜே.பி. தூது அனுப்பியது. எந்தப் பக்கம் அடியெடுத்து வைப்பது என்று தெரியாது அந்தச் சங்கம் தடுமாறிக் கொண்டிருந்தாலும், ஷெகாவத்தை ஆதரிப்பதற்கு இல்லை என்று கைவிரித்துவிட்டது. ஆகவே, அடுத்து இன்னொரு தோல்வியை பி.ஜே.பி. சந்தித்தது.
இன்னொரு பக்கம், சொந்தக் கூட்டணிக்குள்ளேயே வெடிச் சத்தங்கள் கேட்டன. மாநில உணர்வோடு பிரதிபா பாட்டீலைத்தான் ஆதரிப்போம் என்று சிவசேனா அறிவித்தது. பி.ஜே.பி. கலங்கிப்போனது. ஷெகாவத்திற்கு ஆதரவு உண்டா இல்லையா என்று கடைசி நிமிடம் வரை திரிணாமுல் காங்கிரஸ் முடிவெடுக்க மறுத்தது. எனவே, தொட்டால் சிணுங்கியாக பி.ஜே.பி. துவண்டுபோனது.
வெற்றிக்கான எல்லா வழிகளும் இயல்பாய் அடைபட்ட பின்னர், அந்தக் கட்சிதான் என்ன செய்யும்? மேலும் ஓட்டப் பந்தயத்திற்குப் பொய்க்கால் குதிரை ஆசைப்பட்டிருக்கக் கூடாது.
கடைசியாக, புதைபொருள் ஆராய்ச்சியில் பி.ஜே.பி. இறங்கியது. நாற்பது ஆண்டுகளாக அடிமேல் அடியெடுத்து வைத்து பொது வாழ்வில் முன்னேறியவர் பிரதிபா பாட்டீல். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் வரை அவர் ராஜஸ்தான் கவர்னராக இருந்தார். அந்த மாநிலத்தில் பி.ஜே.பி. ஆட்சிதான் நடைபெறுகிறது. அதுவரை பிரதிபா பாட்டீல் மீது எவரும் எந்தக் குற்றச்சாட்டும் கூறியதில்லை.
ஆனால், தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதும் பிரதிபா பாட்டீலின் சொத்துக் கணக்கை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டும் என்று பி.ஜே.பி. கோரியது. அந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. ஆனால், சொத்துக் கணக்கை பிரதிபா வெளியிட்டார்.
நாடு விடுதலை பெற்ற அறுபது ஆண்டுகளுக்குப் பின்னால், முதன் முதலாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
நாளை குடியரசுத் தலைவியாக அமரப்போகும் அந்தப் பெண், நாட்டின் முதல் குடிமகள். முப்படைகளுக்கும் தலைவி. அமைகின்ற ஜனநாயக அரசுகளுக்கெல்லாம் அங்கீகாரம் அளிக்கப் போகும் தலைமகள். எனவே, அவருக்கு எதிராக பி.ஜே.பி. பிரசாரம் தொடங்கினாலும் அதனை ஓர் எல்லைக்குள் நிறுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாகரிக உலகின் நம்பிக்கையை பி.ஜே.பி. அடியோடு தகர்த்துவிட்டது. குடியரசுத் தலைவரின் சிறப்பைக் குலைத்துவிட்டது.
இறுதியாக, பிரதிபா பாட்டீல் மீது அவதூறு பரப்புவதற்காகவே ஒரு வெப் சைட்டை பி.ஜே.பி. தொடங்கியது.
அருண்ஷோரி, குல்கர்னி போன்ற பி.ஜே.பி.யின் பிரசார எழுத்தாளர்கள் பிரபல ஏடுகளில் பிரதிபா பாட்டீலுக்கு எதிராகவும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும் எழுதிக் குவித்தனர்.
ஒரு காலத்தில் பிரதிபா பாட்டீல் அங்கம் வகித்த அல்லது, தொடங்கிய நிறுவனங்களில் எப்போதோ நடந்ததாக முறைகேடுகள், ஊழல்கள் என்று பட்டியல் போட்டனர். அவை அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்று ஆதாரங்களோடு மறுக்கப்பட்டன.
பிரதிபா பாட்டீலை சிறுமைப்படுத்தி சித்திரிப்பதற்காக தனியார் தொலைக்காட்சியில் அருண்ஷோரியின் பெரிய பேட்டி ஒளிபரப்பப்பட்டது. பேட்டி கண்டவர் கரன் தாப்பர். ஆனால், அருண்ஷோரி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பது பின்னர் தாப்பருக்கே தெரிந்தது.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகப் பேட்டி அளிக்க அந்தத் தொலைக்காட்சி பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங்கை அழைத்தது. கரன் தாப்பரே பேட்டி கண்டார். 'அருண்ஷோரி சொன்ன தகவல்கள் அனைத்தும் தவறானவை. அதனை நம்பி ஒளிபரப்பியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்' என்று அவர் சொன்னார். பி.ஜே.பி. தலைகுனிந்தது. ஆனால், அதற்காக வெட்கப்படவில்லை.
ராஜஸ்தான் கவர்னராக இருந்தவர் பிரதிபா பாட்டீல். இன்றைக்கும் இந்தியாவின் குடியரசுத் துணை தலைவராக இருப்பவர் ஷெகாவத். அரசியல் கண்ணியம் கருதி, அவர் தமது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு தேர்தல் களத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனாலும், அவர் வகிக்கும் பதவியின் மரியாதை கருதி காங்கிரஸ் கட்சி எந்தக் கடுமையான விமர்சனத்தையும் வீசவில்லை. ஆனால், பிரதிபா பாட்டீல் மீது தினம் ஒரு அவதூறு பரப்பும் பெரும் பொறுப்பை சுஷ்மா சுவராஜிற்கு பி.ஜே.பி. அளித்திருந்தது.
அத்வானியும் ஜார்ஜ் பெர்னாண்டஸ§ம் பிரதிபா பாட்டீலுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர். தங்கள் வேட்பாளர் ஷெகாவத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று இவர்கள் தெரிவித்திருந்தால், அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
1942_ம் ஆண்டிலிருந்து நாட்டின் விடுதலைப் போராட்டம் வேகம் பெற்றது. அப்போது இந்த ஷெகாவத் என்ன செய்து கொண்டிருந்தார்? வெள்ளையர் ஆட்சிக்குக் காவல் துறை அதிகாரியாகச் சேவகம் செய்து கொண்டிருந்தார் என்று இடதுசாரிக் கட்சிகள் ஒரே ஒரு குற்றச்சாட்டைக் கூறின. அதற்கு இன்றுவரை ஷெகாவத் பதில் சொல்லவில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தை பி.ஜே.பி. கொள்கை ரீதியான போர்க்களமாக்கி இருக்கலாம். ஆயுதங்களே இல்லாதவர்கள் எப்படிக் கொள்கை போராட்டம் நடத்த முடியும்? எனவே, அமெரிக்கா பாணியில் புழுதிப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் பிரசாரம் இதுவரை இவ்வளவு கீழான நிலையை எட்டியதில்லை. அந்தக் காரியத்தையும் பி.ஜே.பி. தொடங்கி வைத்துவிட்டது.
அடுத்து, அவர்களுடைய அரசியல் வறட்சி தமிழகத்திற்கு இழுத்து வரும். இல்லாத ராமர் பாலத்தைத் தேடி அவர்கள் பொல்லாத போராட்டம் நடத்துவார்கள். தற்போது அந்தக் கட்சி ஆட்சியிலிருக்கும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஷ்கரில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் அதற்குச் சோதனையாக அமையும். பீகாரில் அந்தக் கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் உள்ள உறவு எலியும் தவளையுமாகும். அது கூட்டணியாகி வருகிறது. இந்தச் சூழலில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் தலையிட்டு தோல்வியையும் களங்கத்தையும் தேடிக் கொண்டிருக்கிறது.

நன்றி: ரிப்போர்ட்டர்

No comments:

Six C's of Character - Yasir Fazaga