ஹனீபுக்கு எதிரான ஆதாரம் ஆஸி. போலீசார் முரண்பாடு
புதுடெல்லி, ஜூலை 21: ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் முகமது ஹனீப்பின் செல்போன் சிம் கார்டு, ஸ்காட்லாந்து விமான நிலைய தாக்குதல் சம்பவத்தில் கைப்பற்றப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால், இங்குதான் அவரது சிம்கார்டு கைப்பற்றப்பட்டதாக ஆஸ்திரேலியா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ஸ்காட்லாந்து விமான நிலையத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஜீப்பை மோதி தகர்க்கும் தீவிரவாதிகளின் திட்டம் தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் கபீல் அகமது, அவரது உறவினர் சபீல் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், இவர்களின் மற்றொரு உறவினர் டாக்டர் முகமது ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.வெடிகுண்டு ஜீப்பை ஓட்டி வந்த சபீல் அகமதுவுக்கு தனது செல்போன் சிம்கார்டு கொடுத்ததாக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள முகமது ஹனீப் மீது அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கே பொய்யானது என்று தெரியவந்துள்ளது.தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஜீப்பில் முகமது ஹனீப்பின் சிம்கார்டு இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால், ஜீப்பில் இருந்து எந்த செல்போனும் கைப்பற்றப்படவில்லை என்றும், சம்பவம் நடந்து 8 மணி நேரத்துக்கு கைதான கபீல் அகமதுவிடம் இருந்துதான் முகமது ஹனீப்பின் சிம்கார்டு கைப்பற்றப்பட்டதாகவும் இப்போது தெரியவந்துள்ளது. இதை ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. ஆனால், இதுகுறித்து ஆஸ்திரேலியா போலீசார் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment