Search This Blog

Monday, July 16, 2007

சர்வதேச பயங்கரவாதிபின்லேடனின் புதிய வீடியோவால் திடீர் பரபரப்பு

சர்வதேச பயங்கரவாதிபின்லேடனின் புதிய வீடியோவால் திடீர் பரபரப்பு
வாஷிங்டன், ஜுலை. 16-
பின்லேடனின் புதிய வீடியோ பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைக்கு விலை
அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடனை, அமெரிக்கா தீவிரமாக தேடி வருகிறது. பின்லேடனின் தலைக்கு நிர்ணயம் செய்திருந்த விலையை கூட இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்கா உயர்த்தி உள்ளது.
அதன்படி, பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடித்து கொடுப்பவருக்கு ரூ.200 கோடி அளிக்கப்படும். இந்த அறிவிப்புக்கு அமெரிக்க செனட், கடந்த வெள்ளியன்று ஒப்புதல் அளித்து விட்டது.
இந்த நிலையில் தீவிரவாத ஆதரவு இணைய தளங்களுக்காக பின்லேடனின் புதிய வீடியோ கேசட் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று அந்த கேசட்டை வழி மறித்து பதிவு செய்து விட்டது. கேசட் குறித்த தகவல்களை சேனலின் மூத்த ஆசிரியர் ஆக்டோவியா தெரிவித்தார்.
பழைய படங்கள்
நாற்பது நிமிடங்கள் ஓடும் அந்த கேசட்டில் 50 வினாடிகள் மட்டும் பின்லேடன் தோன்றுகிறார். மீதி நேரங்களில் எல்லாம் பின்லேடனின் பழைய படங்கள் காண்பிக்கப்படுகின்றன. மேலும் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட உடன் வெளியிட்ட கேசட்டில் இருந்த அதே பின்னணி காட்சிகள்தான் புதிய கேசட்டிலும் இருக்கின்றன.
ஆனால் பின்லேடனின் பேச்சு மட்டும் புதியதாக உள்ளது. பின்லேடனின் பேச்சு, அரேபிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பின்லேடனின் புதிய கேசட்டின் உண்மை தன்மை குறித்து அமெரிக்க தொலைக்காட்சி சேனல் எந்த உறுதியும் அளிக்கவில்லை.
உயிர் தியாகம்
புதிய கேசட்டில் பின்லேடன், "ஒரு தியாகியாக உயிர் தியாகம் செய்வதை நான் விரும்புகிறேன். இறைவனால் உருவாக்கப்பட்ட எனது உயிர் அவனது கையிலேயே இருக்கிறது. இறைவனுக்காக தியாகம் செய்வதே அவனுக்கு மகிழ்ச்சி தருவது ஆகும். இறைவனின் கூற்றும் இதுவே.
நான் உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்பதும் இறைவனது விருப்பம். முஸ்லிம்களின் பெருமைமிகு வாழ்க்கைக்காக உயிர் தியாகம் செய்யும் ஒவ்வொருவரும் இறைவனுக்காக தியாகம் செய்துள்ளனர். அவர்களை நான் பாராட்டுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
நல்ல தகவல்
பாகிஸ்தானில் உள்ள லால் மசூதியில் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்லேடனின் பேச்சு, அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது போல அமைந்துள்ளது.
பின்லேடனின் கேசட்டை வழி மறித்தது எப்படி என்பது குறித்து அந்த தொலைக்காட்சி சேனல் தெரிவிக்கவில்லை. ஆனால் பின்லேடனின் பேச்சை அல்-கொய்தா அமைப்பின் செய்திப்பிரிவான அல் சஹாப் தயாரித்து உள்ளதாக தெரிவித்தது.
பின்லேடனிடம் இருந்து விரைவில் நல்ல தகவல் வரும் என அவரது ஆதரவாளர்கள் சமீப காலமாக தெரிவித்து வந்தனர். அதன்படி இந்த புதிய கேசட் வெளியாகி உள்ளது.
பின்லேடன் இறந்து விட்டதாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் தோன்றும் வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Six C's of Character - Yasir Fazaga