லண்டன் கார் குண்டு தாக்குதல் சதி: இரு இந்திய டாக்டர்கள் கைது
கார் குண்டை வெடிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் முகம்மது ஆஷா. இவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன், ஜூலை 4: லண்டனிலும், கிளாஸ்கோ நகரிலும் கார் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த அல்-காய்தா அமைப்பினர் போட்ட சதித் திட்டம் தொடர்பாக 2 இந்திய டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரில் படித்தவர்கள்.
ஒருவர் பிரிட்டனின் லிவர்பூல் நகரிலும் மற்றொருவர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனிலும் கைது செய்யப்பட்டார்.
லிவர்பூல் நகரில் கைதான இந்திய டாக்டரின் பெயர் தெரியவில்லை. அவரது வயது 26. பெங்களூரைச் சேர்ந்த அவர் முதுநிலை மருத்துவ பயிற்சி டாக்டர் என்று டெய்லி டெலகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிஸ்பேனில் திங்கள்கிழமை இரவு கைதான இந்திய டாக்டர் பெயர் முகம்மது ஹனீப் (27). இவர் பெங்களூரில் உள்ள ராஜீவ் காந்தி கல்வி நிறுவனத்தில் பயின்றவர் என்று ஆஸ்திரேலிய பத்திரிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
லண்டனில் இரு கார் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவது, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் தீப்பற்றி எரியும் காரை விமான நிலையத்துக்குள் ஓட்டிச்சென்று தாக்குவது தீவிரவாதிகளின் சதித்திட்டம். ஆனால் இந்த சதித் திட்டங்களை போலீஸôர் சில தினங்களுக்கு முன் முறியடித்தனர்.
ஆஸ்திரேலியாவில் சிக்கிய டாக்டர் ஹனீப் அங்குள்ள மருத்துவமனையில் பதிவாளராக இருந்தவர். அவர் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று பிரிட்டனில் பணியாற்றி வந்தார். பிரிட்டன் பத்திரிகையில் வெளியான விளம்பரம் மூலம் விண்ணப்பித்து குயீன்ஸ்லாந்து மாநில கோல்டுகோஸ்ட் மருத்துவமனையின் பதிவாளராக வேலைவாய்ப்பு பெற்றார் என்று பிரதமர் ஜான் ஹோவர்டு தெரிவித்தார்.
தாற்காலிக வேலைவாய்ப்பு அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு குடியேறியவர் இவர். பிரிஸ்பேன் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வழியாக இந்தியா செல்ல இருந்தார் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
கார்குண்டு தொடர்பாக ஏற்கெனவே 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள். எனவே பிரிட்டிஷ் கார்குண்டு சதித் திட்டம் உலக அளவில் பின்னிப் பிணைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
கார்குண்டு தாக்குதல் சதித்திட்டம் தொடர்பாக கைதான 8 பேரில் மேலும் 3 பேர் டாக்டர்களாகவோ அல்லது மருத்துவப்பணி சார்ந்தவர்களாகவோ இருப்பார்கள் என பிபிசி உள்ளிட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, பயங்கரவாத சதித்திட்ட விவகாரத்தில் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளனர் இங்கிலாந்து போலீஸôர். இதனால் கிளாஸ்கோ நகரின் பாலக்ஷீல்டு பகுதியில் உள்ள ஒரு மசூதி எதிரே சந்தேகத்துக்கு இடமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை வெடிவைத்து போலீஸôர் தகர்த்தனர்.
பிரிட்டிஷ் பிரதமருக்கு புஷ் வாழ்த்து:பிரிட்டனில் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதித் திட்டத்தை முறியடித்ததற்காக பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெüனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். தனது பண்ணை இல்லத்திலிருந்து சிறப்பு விமானத்தில் வாஷிங்டன் புறப்படுகையில் திங்கள்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டிய புஷ், தேவைப்படும் உதவியை அமெரிக்கா வழங்கும் என்றும் அறிவித்தார்.
No comments:
Post a Comment