Search This Blog

Tuesday, July 03, 2007

அமெரிக்க அரசு "கொலை எந்திரமாக' செயல்படுகிறது: காஸ்ட்ரோ தாக்கு

அமெரிக்க அரசு "கொலை எந்திரமாக' செயல்படுகிறது: காஸ்ட்ரோ தாக்கு
ஹவானா, ஜூலை 3: பல பத்தாண்டுகளாக அமெரிக்க அரசு கொலை எந்திரமாகவே செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ (80).
கூலிப் படையின் மூலம் விஷம் கொடுத்து காஸ்ட்ரோவை கொல்ல, அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ முயற்சித்ததை விவரமாக வெளிப்படுத்தும் ஆவணம் கடந்த வாரம் வெளியானது. இதை சுட்டிக்காட்டி காஸ்ட்ரோ மேற்குறிப்பிட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கியூபாவின் அதிகாரபூர்வ செய்தி ஏடான "ஜுவென்டட் ரிபெல்டே'-வில் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கட்டுரையில், "கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆவணத்தில், கொலை செய்ய சி.ஐ.ஏ. கையாளும் வழிமுறைகளாக விவரிக்கப்பட்டுள்ளவை முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்தவை; அந்த வழிமுறைகளை தற்போது கையாள்வதில்லை என உலகை நம்ப வைப்பதற்காகவே சிஐ.ஏ.வின் ரகசிய ஆவணத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது' என்று கூறியுள்ளார் காஸ்ட்ரோ.
"அந்த ஆவணத்தில் விவரிக்கப்படும் வழிமுறைகள் அனைத்தும், இன்னும் கொடூரமான முறையில் உலகம் முழுவதும் இன்றும் கையாளப்படுகின்றன. அமெரிக்காவிலேயே நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளும் இதில் அடங்கும்' என்று கூறியுள்ளார் காஸ்ட்ரோ.
"குடும்ப நகைகள்' என்று புனைபெயரில் குறிப்பிடப்படும், நீண்டகாலமாக ரகசியாக பாதுகாக்கப்பட்டு வரும் உளவுத்துறையின் ஆவணங்களில் சில கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் வெளிநாடுகளில் சிஐஏ நடத்திய படுகொலை முயற்சிகள், உள்நாட்டு ஒற்றுவேலை மற்றும் ஆள்கடத்தல் போன்ற சிஐஏவின் மிகக் கேவலமான சட்டவிரோத நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
உளவாளிகளைப் பயன்படுத்தி, விஷ மாத்திரைகளைக் கொடுத்து அதிபர் காஸ்ட்ரோவை கொலை செய்ய முன்னாள் மத்தியப் புலனாய்வுத் துறை (எஃப்.பி.ஐ) ஏஜெண்ட் ஜானி ரோசலியை சிஐஏ நியமித்தது இந்த ஆவணத்தின் மூலம் வெளியாகி உள்ளது.
இந்த ஆவணங்கள் மற்றும் இந்த ஆவணங்களை ஆய்வு செய்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரைகளை மேற்கோள் காட்டித்தான், காஸ்ட்ரோ "கொலை எந்திரம்' என்ற தலைப்பில் 3 பக்க ஆசிரியவுரை எழுதியுள்ளார்.
சிஐஏவும், காஸ்ட்ரோவுக்கு எதிராக அமெரிக்காவில் இருந்து செயல்படும் கியூபா தீவிரவாதிகளும் சேர்ந்துதான் 1963-ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியை கொலை செய்ததாக தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் காஸ்ட்ரோ. அதற்கு ஆதரவாக பல வாதங்களையும் கட்டுரையில் முன்வைத்துள்ளார். தன்னைக் கொலை செய்ய நூற்றுக்கணக்கான முறை அமெரிக்கா முயற்சி செய்துள்ளதாகவும், தன்னைக் கொலை செய்யுமாறு தற்போதைய அதிபர் புஷ்ஷும் பலமுறை கட்டளையிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார் காஸ்ட்ரோ.
காஸ்ட்ரோவை கொலை செய்ய 47 ஆண்டுகளாக நடந்து வரும் தொடர்முயற்சிகள், கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கையை தெளிவாக வெளிப்படுத்துகின்றன என்று கூறும் தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமை கியூபா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக, ஆட்சிப் பொறுப்பை தாற்காலிகமாக தனது தம்பி ரவூல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துள்ளார் காஸ்ட்ரோ

No comments:

Six C's of Character - Yasir Fazaga