ஆந்திர முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு
ஹைதராபாத், ஜூலை 5: ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4% ஒட ஒதுக்கீடு அளிக்க மாநில அமைச்சரவை முடிவு செய்தது.
மாநில அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தலைமையில் ஹைதராபாதில் புதன்கிழமை நடைபெற்றது.
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம்களுக்கு மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு அளிக்க அவசரச் சட்டம் இயற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
உயர் வருவாய்ப் பிரிவினருக்கு, இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகையிலிருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான திருப்பமாகும்.
இந்த 4% ஒதுக்கீட்டு முடிவால், ஆந்திர மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களின் மொத்த எண்ணிக்கை 50% ஆகிறது. இது உச்ச நீதிமன்றம், ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டியபடி உச்சபட்ச வரம்புக்குள் வருகிறது. அடுத்தபடியாக, மத ரீதியில் அல்லாமல் சமூக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பதால் இதை உயர் நீதிமன்றமோ, வேறு நீதிமன்றங்களோ நிராகரிக்கும் வாய்ப்பும் மறுக்கப்படுகிறது.
வாக்குறுதி நிறைவேறுகிறது: ஆந்திர மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 7 கோடி. அதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.2%. முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுச் சலுகையை அளிப்போம் என்று சட்டப் பேரவை பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதன்படி முஸ்லிம்களுக்கு 5% இடங்களை ஒதுக்கி அவசரச் சட்டம் இயற்றியது. அதை ஆந்திர உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்திய அரசியல் சட்டப்படி, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க வழி இல்லாததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
ஆந்திரத்தில் இப்போது தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 14%, பழங்குடிகளுக்கு 7%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25%, முஸ்லிம்களுக்கு 4% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே ஏ, பி, சி, டி என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் இ பிரிவாக இனி குறிக்கப்படுவர். முஸ்லிம்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிலிருந்தே இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்படும். இதை செய்தித்துறை அமைச்சர் ஏ. ராமநாராயண ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment