Search This Blog

Monday, July 02, 2007

இது ஒரு முழுநிறை யுத்தம்!

இது ஒரு முழுநிறை யுத்தம்!
இது ஒரு முழுநிறை யுத்தம்!"தெகல்கா' ஆங்கில வார இதழுக்கு (31.3.07) எழுத்தாளர் அருந்ததி ராய் அளித்துள்ள பேட்டியை அளவு கருதி சற்றே சுருக்கித் தருகிறோம். அமைதி வழியிலான மக்கள் போராட்டங்கள் அனைத்தும் அலட்சியப் படுத்தப் படும் சூழலில், நக்சல்பாரிகளுடைய ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அங்கீகரிக்கிறார் ராய்.அதே நேரத்தில், மாவோயிஸ்டு களும் அடக்குமுறையில் ஈடுபடுவ தாகவும், ஸ்டாலின்,மாவோ ஆகி யோரது ஆட்சியில் லட்சக்கணக்கா னோர் படுகொலை செய்யப்பட்ட தாகவும் சாடுகிறார். ஸ்டாலின் மாவோ மீது ஏகாதிபத்தியங்கள் பரப்பியுள்ள அவதூறுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி நாம் ஏற்கெனவே எழுதியிருக்கி றோம். நீளம் கருதியும், மேற்கூறிய விமரிசனங்கள் இந்தப் பேட்டியின் மையக் கருத்துக்கு நேரடியாகத் தொடர்பற்றவை என்பதனாலும் பேட்டியின் அப்பகுதியை வெளியிடவில்லை.நிலவும் ஏகாதிபத்தியக் கொடுங் கோன்மையையும் ஜனநாயக மோசடியையும் சகித்துக் கொள்ள முடியாமலும்,அதே நேரத்தில் கம்யூ னிச அமைப்புகளுடன் இணங்கிப் போகமுடியாமலும் இருக்கும் ஒரு அறிவுஜீவி, இன்றைய சூழலில் நடுநிலை வகிக்க முடியுமா என்பதே அவருடைய பேட்டி எழுப்பும் கேள்வி.தற்போதைய சூழலில் நாடு முழுவதும் வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த அறிகுறிகளைத் தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? இதனை எப்பொருளில் நாம் காண வேண்டும்?இந்த அறிகுறிகளைக் காண நீங்களொன்றும் பிறவி மேதையாக இருக்க வேண்டியதில்லை. நம்மிடையே பேராசையும், நுகர்வு வெறியும் கருக்கொண்ட ஒரு நடுத்தர வர்க்கம் வளர்ந்து வருகிறது. தொழில் வளம் மிக்க மேற்கத்திய நாடுகளைப் போல வளங்களைக் கொள்ளையிடவும், அடிமைப்படுத்திக் கொள்ளவும் நம்மிடம் காலனி நாடுகள் இல்லை. எனவே, நாம் நம்மையே அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நமது உறுப்புக்களையே நாம் தின்னத் தொடங்கி விட்டோம். பலவீனமான மக்களிடமிருந்து நிலம், நீர், வளங்களைப் பறித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே, அடங்கக் கூடிய இந்தப் பேராசை வெறியே தேசிய உணர்வாகவும் நல்லொழுக்கமாகவும் சித்தரிக்கப்படுகிறது.சுதந்திர இந்தியாவில் தொடுக்கப்பட்ட பிரிவினைவாதப் போர்களிலேயே பெரு வெற்றியடைந்த ஒரு போரை இதோ நாம் நம் கண் முன்னால் காண்கிறோம். ஆம், நம் நாட்டின் மேட்டுக்குடி வர்க்கங்களும் நடுத்தர வர்க்கங்களும் ஏனைய இந்திய மக்களிடமிருந்து பிரிந்து தனி நாடாகவே ஆகிவிட்டனர் ............. இப்பொழுது இந்தப் புதிய வல்லரசின் மேன்மை தங்கிய பிரஜைகளுக்கு, தங்களது பிரம்மாண்ட விளையாட்டுப் பொருட்களான கார்கள், வெடிகுண்டுகள், கண்ணி வெடிகளை மென்மேலும் உற்பத்தி செய்வதற்கு நிலமும் தேவைப்படுகிறது. எனவே இது ஒரு முழுநிறை யுத்தம். இரண்டு தரப்பினரும் தத்தம் ஆயுதங்களைத் தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.அரசாங்கமும் தொழிற்குழுமங்களும் கண்டுபிடித்திருக்கும் ஆயுதத்தின் பெயர் கட்டுமான மறு சீரமைப்பு. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, அன்னிய நேரடி மூலதனம், அவர்களுக்கு இணக்கமாக நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகள், இணக்கமான அரசியல் வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கார்ப்பரேட் ஊடகங்களின் இணக்கமான உதவி, இறுதியாக போலீஸ் படை ............. இவற்றின் துணையுடன் இந்தச் "சீரமைப்பு' மக்களின் தொண்டைக் குழிக்குள் மூர்க்கமாகக் குத்தித் திணிக்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சிப் போக்கை எதிர்த்துப் போராட விரும்புவோர் இதுநாள் வரை, தர்ணாக்களையும், சத்தியாக்கிரகங்களையும், நீதிமன்றங்களையும், நேச சக்திகள் என்று அவர்கள் கருதிக் கொண்டிருந்த ஊடகங்களையும்தான் தங்கள் ஆயுதங்கள் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றோ துப்பாக்கிகளை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வன்முறை வளருமா? ஆம், வளரத்தான் செய்யும். மக்கள் நலனையும் முன்னேற்றத்தையும் அளவிடுவதற்கு "தேசிய வளர்ச்சி விகிதத்தையும்' பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களையும் அளவுகோல்களாக அரசு பயன்படுத்தும் வரை இந்த வன்முறையும் அதிகரிக்கத்தான் செய்யும். நான் இந்த அறிகுறிகளை எவ்வாறு காண்கிறேன்? அதுதான் கண் எதிரே கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறதே.தலைக்கு மேலே சுற்றும் மின்விசிறியில் பட்டுத் தெறித்து நாற்புறமும் வீசிக் கொண்டிருக்கிறது மலம்.இதைப் புரிந்து கொள்வது அத்தனைக் கடினமா என்ன?""நான் வன்முறையில் இறங்க மாட்டேன், ஆனால் அதேவேளையில் நாட்டின் இன்று நிலவும் சூழலில், வன்முறையைக் கண்டனம் செய்யவும் மாட்டேன். அவ்வாறு கண்டனம் செய்வது நெறியற்றது'' என முன்பொரு முறை நீங்கள் கூறியிருந்தீர்கள். அதனை விளக்க முடியுமா?நான் ஒரு கொரில்லாப் போராளியானால் மற்றவர்களுக்குச் சுமையாகத்தான் இருப்பேன். மற்றப்படி "நெறியற்றது' என்ற சொல்லை நான் பயன்படுத்தினேனா எனச் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், அறம், நெறி என்பவையெல்லாம் மிகவும் நெகிழ்ச்சியான, புதிரான சொற்கள். அவை தட்பவெட்ப நிலைகளைப் போல மாறக்கூடியவை.நான் உணர்வது இதுதான்; சாத்வீக இயக்கங்கள் நம்முடைய ஜனநாயக அமைப்பின் எல்லாக் கதவுகளையும் ஆண்டுக்கணக்கில் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு தட்டித் தட்டி அவர்கள் கண்டதென்ன? அலட்சியமாக நிராகரிக்கப்பட்டதையும், அவமானப்படுத்தப்பட்டதையும் தவிர!போபால் விஷ வாயுவினால் பாதிக்கப்பட்டோரையும், நர்மதை பாதுகாப்பு இயக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்நாட்டில் வெறெந்த மக்கள் இயக்கத்திற்கும் இல்லாத அளவில் நர்மதை பாதுகாப்பு இயக்கத்திற்கு பிரபலமான தலைமை, போதிய சக்திகள், ஊடகங்களின் ஆதரவு என எல்லாம் இருந்தது. ஆனால் ஏன் அது வெற்றி பெற முடியவில்லை? அந்த மக்கள் தமது போராட்ட வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள்.இத்தகைய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் போய் (உலக முதலாளிகள் கூட்டத்தில் மொர்) சத்தியாக்கிரகத்தின் மேன்மையைப் பற்றி சோனியா காந்தி பேசுகிறார் என்றால், அப்போதாவது நாம் யோசிக்க வேண்டாமா?உதாரணமாக, ஒரு ஜனநாயக நாட்டில் பெருந்திரளான மக்களின் சட்ட மறுப்பு அல்லது ஒத்துழையாமை சாத்தியமா? அதுவும் பொய்களையும் புனைச் சுருட்டுக்களையும் பரப்பும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஊடகங்களின் யுகமான இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமா? பிரபலமானவராக இல்லாத ஒருவர் உண்ணாவிரதம் இருந்து என்ன பயன்? ............. நங்லாமச்சி சேரி மக்களோ அல்லது பட்டி சுரங்கத்தின் தொழிலாளர்களோ உண்ணாவிரதமிருந்தால், யாரேனும் கண்டு கொள்வார்களா? ஐரோம் சர்மிளா கடந்து ஆறாண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். இதிலிருந்தெல்லாம் நம்மில் பலர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். .............நாம் இப்பொழுது ஒரு முற்றிலும் மாறுபட்ட கால கட்டத்தில், மாறுபட்ட இடத்தில் இருக்கிறோம். ............. மக்கள் போராட்டம் என்பதையே துரோகத்தனமான வியாபாரமாக மாற்றி விட்ட அரசு சாரா நிறுவனங்களின், தன்னார்வக் குழுக்களின் அல்லது வேடதாரிகளின் யுகத்தில் நுழைந்திருக்கிறோம். பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் "ஸ்பான்சர்' செய்யப்படுகின்றன. மாபெரும் போராளிகளைப் போல சண்டப் பிரசண்டம் செய்து விட்டு, பின்னர் தனது பிரச்சாரத்தின் ஒரு சிறு அம்சத்தைக் கூட தொடராமல் கை கழுவும் சமூக மன்றங்களைக் காண்கிறோம். போராட்டங்கள் போலவே தம்மைக் காட்டிக் கொள்ளும் தோற்றப் போலிகள் (திடிணூtதச்டூ) எங்கும் நிறைந்திருக்கின்றன.சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்கும் கூட்டங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை முன்னிறுத்துபவர்களாலேயே ஏற்பாடு செய்யப்படுகின்றன. ............. நேரடியாகவும், மறைமுகமாகவும் டாடாவின் இரு அறக்கட்டளைகள், நாடு முழுவதுமுள்ள செயல்வீரர்களுக்கும், மக்கள் இயக்கங்களுக்கும் நிதியளித்து வருகின்றன. இதன் காரணமாகத்தான் நந்திகிராமை விடவும் சிங்கூரில் எதிர்ப்பு ஆரவாரம் குறைவாக இருந்தது போலும். டாடாக்களும், பிர்லாக்களும் காந்திக்கே படியளந்தவர்கள். நமது முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனமே காந்திதான் என்றும் சொல்லலாம்.இப்பொழுதுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மிகுதியாகக் கூச்சலிடுகின்றன. கற்றை கற்றையாக அறிக்கைகள் தயாரிக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களுடன் சந்தோஷமாகச் சகவாழ்வு நடத்துகிறது. இவற்றிலிருந்தெல்லாம் நாம் என்ன விளங்கிக் கொள்வது? எங்கும் புழுத்து நெளியும் தொழில்முறை சீர்குலைப்பாளர்களால் உண்மையான அரசியல் போராட்டங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. .............நீதிமன்றங்களில் மக்கள் இயக்கங்கள் நியாயம் வேண்டி நின்ற காலம் ஒன்று இருந்தது. நீதிமன்றங்கள் அநீதியான தீர்ப்புக்களைப் பொழிகின்றன. வறிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் நீதிமன்றம் பயன்படுத்தும் மொழியைக் கேட்கும்போது அதிர்ச்சியால் நமது மூச்சே நின்றுவிடும் போலிருக்கிறது. ............. இந்த நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனத்தின் சித்தாந்த இதயத்தை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கார்ப்பரேட் ஊடகங்களோடு சேர்ந்து நீதிமன்றங்களும் நவீன காலனியாதிக்கத்தின் அச்சாணிகளில் ஒன்றாக மாறி விட்டதையே இவை அனைத்தும் உணர்த்துகின்றன.இதுதான் நாம் காணும் சூழல். தாங்கள் நசுக்கித் தரைமட்டமாக்கப்படுவதை உணரும் மக்கள், முடிவில்லாத "ஜனநாயக' வழிமுறைகளில் போராடி இறுதியில் இழிவுபடுத்தப்படும் மக்கள் வேறென்ன செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்?ஆனால் இதனுடைய பொருள் வன்முறை அல்லது சாத்வீகம் என்ற இரண்டு முரண்பட்ட வழிமுறைகள்தான் உள்ளன என்பதல்ல. ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கையோடும், அதேவேளையில் தங்களது ஒட்டுமொத்த அரசியல் வழிமுறைகளில் அதனை ஒரு பகுதியாகவும் மட்டுமே கருதிச் செயல்படும் அரசியல் கட்சிகள் உள்ளன. இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் ஊழியர்கள் சிறை, சித்திரவதை, பொய்வழக்குகள் என மிகக் கொடூரமாக ஒடுக்கப்படுகின்றனர். .............மற்ற எல்லா வழிகளையும் முயன்று விரக்திதான் மிச்சம் என்ற நிலையில், மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, நாம் அவர்களைக் கண்டிக்க முடியுமா? நந்திகிராம் மக்கள் தர்ணா நடத்தி பாட்டு பாடிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்களேயானால் மேற்கு வங்க அரசு பணிந்திருக்குமா? அப்படி யாராவது நம்புகிறீர்களா?நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாறுபட்ட காலத்தில், நிலவும் அமைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டம் என்பது பிரயோசனமற்றது. (சந்தேகமின்றி, நம்மில் பலர் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்) பிரயோசனமாக ஏதேனும் செய்ய விரும்புகிறவர்கள் அதற்கு மிகக் கடுமையான விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய விலையைக் கொடுக்க தயாராயிருப்பவர்களை என்னால் கண்டிக்க இயலாது.நீங்கள் மிக அதிகமான இடங்களுக்கு பயணித்து வருகிறீர்கள்.பிரச்சினைக்குரிய பகுதிகள் குறித்தும், அங்கே நிலவும் சூழல், போராடும் தரப்புகள் குறித்தும் சொல்ல இயலுமா?மிகப் பெரிய கேள்வி எப்படிச் சொல்வது? காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம், குஜராத்தில் நிலவும் நவீன பாசிசம், சத்தீஸ்கரில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போர், ஒரிசாவைக் கற்பழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், மூழ்கிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான நர்மதை பள்ளத்தாக்கு கிராமங்கள், முழுப் பட்டினியின் நுனியில் விளிம்பில் தவித்து நிற்கும் மக்கள், சூறையாடப்படும் காடுகள், டௌ கெமிக்கல்ஸ் என்ற பெயரில் நந்திகிராமில் நுழையும் யூனியன் கார்பைடு நிறுவனத்தை உச்சி மோந்து வரவேற்கும் மேற்கு வங்க அரசு, இதனைக் காண்பதற்கு இன்னும் உயிரோடிருக்கும் போபால் விஷ வாயுவினால் தாக்கப்பட்ட மக்கள். .............இவை மட்டுமல்ல, மறைந்து கொண்டு நஞ்சைப் பரப்பும், மீண்டும் வெடிக்கக் காத்திருக்கும் இந்துத்துவாவை எப்படிக் குறிப்பிடாமல் இருக்க முடியும்? இவையனைத்தையும் விட மிகக் கேவலமானது என்னவெனில், இன்னமும் தீண்டாமையைப் போற்றிப் பாதுகாத்து வரும் ஒரு பண்பாடாக, சமூகமாக, நாடாக நாம் வாழ்கிறோம். நமது பொருளாதார வல்லுனர்கள் கோடிகளைக் கணக்கிட்டு, வளர்ச்சி விகிதத்தைக் குறித்து பீற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலட்சக்கணக்கான மலம் அள்ளும் தொழிலாளர்கள் தம் வயிற்றைக் கழுவுவதற்காக கிலோக்கணக்கில் பிறரது மலத்தைத் தலையில் சுமக்கிறார்கள். அடுத்தவன் மலத்தைத் தலையில் சுமக்க மறுத்தால் அவர்கள் பட்டினி கிடந்து சாகவேண்டும். அடேயப்பா, இது பெரிய்ய புடுங்கி வல்லரசுதான்!சமீபத்தில் வங்கத்தில் நிகழ்ந்த அரசு, போலீசு வன்முறையை நாம் எப்படிப் பார்ப்பது?மற்ற இடங்களில் நடக்கும் போலீசு, அரச வன்முறையிலிருந்து எந்த வகையிலும் இது வேறுபட்டதல்ல. பொய், பம்மாத்து, இரட்டைவேடம் ஆகியனவற்றில் தேர்ந்த மற்ற அரசியல் கட்சிகளுக்கு பொது நீரோட்ட இடதுசாரிகள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. ............. எங்கும் விசித்திரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவில் பனி பொழிகிறது. பகலில் ஆந்தைகள் ஓலமிடுகின்றன. சீன அரசு தனிச் சொத்துடைமைக்காக மசோதா நிறைவேற்றுகிறது. ............. சீனத்தின் கம்யூனிஸ்டுகள் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் முதலாளிகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கும்போது நமது நாட்டு பாராளுமன்றக் கம்யூனிஸ்டுகளிடம் நாம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? நந்திகிராமும், சிங்கூரும் மிகத் தெளிவான அபாயச் சின்னங்கள்.போயும் போயும் நவீன முதலாளித்துவத்தில்தான் எல்லாப் புரட்சிகளும் முடிவடைய வேண்டுமோ, வியப்பாகத்தான் இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள். பிரெஞ்சுப் புரட்சி, ரசியப் புரட்சி, சீனப் புரட்சி, வியத்நாம் யுத்தம், நிறவெறிக்கு எதிரான போராட்டம், சொல்லிக் கொள்ளப்படும் காந்திய சுதந்திரப் போராட்டம் ............. இவையனைத்தும் எங்கு போய் நின்று கொள்கின்றன? முதலாளித்துவம் என்பதுதான் நம் கற்பனையின் முடிவா?பிஜாப்பூரில் 55 போலீசுக்காரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகளை அரசின் மற்றொரு முகம் எனச் சொல்வது சரியாக இருக்குமா?போராளிகள் எவ்வாறு அரசின் மறு முகமாக இருக்க முடியும்? நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்களை, அவர்களுடைய வழிமுறைகள் எவ்வளவுதான் கொடூரமானவையாக இருந்த போதிலும், அவர்களை அரசின் இன்னொரு முகம் என யாரேனும் அழைக்க இயலுமா? அப்படியானால் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அல்ஜீரியர்கள், அல்லது நாஜிக்களை எதிர்த்துப் போராடியவர்கள், அல்லது காலனிய அரசுகளை எதிர்த்துப் போராடியவர்கள், அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கெதிராக ஈராக்கில் போராடிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் அனைவரையும் அரசின் இன்னொரு முகம் என்று எப்படிச் சொல்ல முடியும்?அறிக்கைகளால் உருவாக்கப்படும் மேம்போக்கான இத்தகைய "மனித உரிமை'ச் சொல்லாடல்களும், எல்லா வன்முறைகளையும் கண்டிப்பதாகக் கூறிக் கொள்ளும் இந்தப் பழி போடும் விளையாட்டும் ............. இப்பிரச்சினைகள் அனைத்திலும் உறையும் உண்மையான அரசியலைக் கரைத்து வெளியேற்றி விடுகிறது. நாம் எவ்வளவுதான் தூய்மையாக இருக்க விரும்பினாலும், நமது ஒளிவட்டங்களுக்கு நாமே எவ்வளவுதான் மெருகேற்றிக் கொண்டாலும், வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் அத்தகைய தூய்மையான வாய்ப்புகளோ மாற்றுகளோ நம்முன் இல்லை.சத்தீஸ்கரில் அரசினால் நிகழ்த்தப்படும் உள்நாட்டுப் போர், புஷ்ஷினுடைய சித்தாந்தத்தை வெளிப்படையாக நடைமுறைப்படுத்துகிறது. ""நீ எங்களோடு இல்லையென்றால், நீ தீவிரவாதிகளோடு இருக்கிறாய்!'' என்று கூறுகிறது.அரசின் பாதுகாப்புப் படைகள் ஒருபுறமிருக்க, இப்போரின் அச்சாணியே சல்வாஜுடும் என்ற படைதான். இது அரசின் நிர்ப்பந்தத்தினால் ஆயுதமேந்தியிருக்கின்ற சாதாரண மக்களைக் கொண்ட படை. ............. இந்திய அரசு ஏற்கெனவே காஷ்மீரிலும், மணிப்பூரிலும், நாகாலாந்திலும் இத்தகைய படையை உருவாக்க முயன்றிருக்கிறது. அதன் விளைவாக, பத்தாயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். .............தோற்றுப்போன இத்தந்திரங்களை இப்பொழுது இந்தியாவின் இதயப் பகுதியிலேயே இறக்குமதி செய்ய அரசு முயன்று வருகிறது. தமது கனிமவளம்மிக்க நிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் போலீசு முகாம்களுக்கு விரட்டியடிக்கப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் பலவந்தமாகக் காலி செய்யப்பட்டிருக்கின்றன. இரும்புத் தாது வளம் மிக்க அவர்களது நிலங்கள் மீது டாடா, எஸ்ஸார் போன்ற முதலாளிகள் கண் வைத்து விட்டனர். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.ஆனால் அவற்றின் ஷரத்துக்கள் யாருக்கும் தெரிவதில்லை. நிலக் கையகப்படுத்தல் தொடங்கி விட்டது. ............. எல்லோருடைய பார்வையும், அரசின் கூலிப் படைகளுக்கும், கொரில்லாக் குழுக்களுக்குமிடையிலான வன்முறையில் பதிந்திருக்க, பன்னாட்டுக் குழுமங்கள் சத்தமின்றிக் கனிம வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டு வரும் நாடகத்தின் ஒரு சிறு பகுதி இது.55 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டது பயங்கரமானதே. ஆனால் அவர்களும் மற்றவர்களைப் போல அரசின் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்பட்டவர்களே. வெறும் பீரங்கித் தீனியாகத்தான் (இச்ணணணிண ஞூணிஞீஞீஞுணூ) அப்போலீசுக்காரர்களை அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் கருதுகின்றன. அந்தப் போலீசுக்காரர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை ஆராயப் புகுந்தால் அதில் சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது.செத்துப் போன போலீசுக்காரர்களுக்காகச் சில நாட்களுக்கு முதலைக் கண்ணீர் வடிக்கப்படும். தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நம் மீது ஏறி சவாரி செய்வார்கள், பின்னர் மேலும் கூடுதலான பீரங்கித் தீனி சப்ளை செய்யப்பட்டு விடும். மாவோயிஸ்ட் கொரில்லாக்களைப் பொருத்தவரை அவர்களால் கொல்லப்படும் போலீசுக்காரர்களும் சல்வா ஜுடும் சிப்பாய்களும் இந்திய அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தின் கையாட்கள்; சித்திரவதை, காவல் நிலைய சாவுகள், போலி மோதல்களை நடத்தும் ஆயுதப்படையினர்; அவர்கள் அப்பாவிக் குடிமக்கள் அல்லர்.மாவோயிஸ்டுகளும் பலவந்தத்திலும், பயங்கரத்திலும் ஈடுபடக் கூடியவர்களே என்பதிலும், சொல்ல இயலாத அடக்குமுறைகளைச் செய்திருக்கிறார்கள் என்பதிலும், உள்ளூர் மக்களிடம் தங்களுக்கு விதிவிலக்கற்ற பேராதரவு இருப்பதாக அவர்கள் உரிமை கொண்டாட முடியாதென்பதிலும் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவ்வாறு யார்தான் உரிமை கொண்டாட முடியும்? எனினும், உள்ளூர் மக்களின் ஆதரவின்றி எந்தக் கொரில்லாப் படையும் இயங்க முடியாது. அது நடைமுறைச் சாத்தியமற்றது. மேலும், மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு பெருகிக் கொண்டுதான் வருகிறதேயொழிய குறையவில்லை. .............ஆனால், கணக்கிடலங்கா அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எதிர்ப்பு இயக்கத்தை, அத்தகைய அநீதிகளைத் திணிக்கும் அரசோடு ஒப்பிடுவது அபத்தமானது.வன்முறையற்ற எதிர்ப்பின் ஒவ்வொரு முயற்சியையும் அரசு முகத்திலறைந்தாற்போலக் கதவை மூடியிருக்கிறது. மக்கள் ஆயுதம் ஏந்தும்போது எல்லாவிதமான, வன்முறைகளும் இருக்கத்தான் செய்யும். புரட்சிகரமானது, உதிரித்தனமானது, கடைந்தெடுத்த கிரிமினல்தனமானது என எல்லா வன்முறைகளும் வரத்தான் செய்யும். தானே உருவாக்கிய இத்தகைய பயங்கரமான சூழலுக்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்."நக்சல்கள்', "மாவோயிஸ்டுகள்', "வெளியாட்கள்': இப்பதங்கள் தற்பொழுது வரையறையற்றுப் பயன்படுத்தப்படுகின்றனவே...தனது சுயவிளம்பரத்தில் தானே மயங்கிவிட்டதால், தனது சொந்த மக்கள் தனக்கெதிராகக் கிளர்ந்தெழக் கூடும் என்பதை நம்ப இயலாத அரசுகள், அடக்குமுறையின் துவக்க காலகட்டங்களில் பயன்படுத்தும் மிகப் பொதுவான குற்றச்சாட்டுதான் "வெளியாட்கள்' என்பது ............. "வெளியாள்' என்றால் என்ன? யார் எல்லைகளைத் தீர்மானிப்பது? அவை கிராமத்தின் எல்லைக்கோடுகளா? தாலுகாவினதா? மாவட்டமா அல்லது மாநிலமா? குறுகிய பிரதேச வாதமும் இனவாதமும்தான் கம்யூனிசத்தின் புதிய தாரக மந்திரமோ?நக்சல்கள், மாவோயிஸ்டுகள் ............. யார்? இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. தற்போதைய அரசியல் நடப்புகளை ஏற்க மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, தாங்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படும் அபாயத்தை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். ............. நாம் அனைவரும் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் அல்லது தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அழைக்கப்படலாம். மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் என்றால் யாரென்றே தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத நபர்களால் நமது கதை முடித்து வைக்கப்படலாம். அத்தகைய காலம் வெகு தொலைவில் இல்லை.......

தமிழாக்கம்: பால்ராஜ்

Six C's of Character - Yasir Fazaga